Monday, October 17, 2011

கடவுளைக் கண்டேன்




















„ கடவுள் இருக்கிறாரா? “
திடீரென ஒரு கேள்வியை எழுப்பிவிட்டு என்னைப் பார்த்துக்கொண்டிருந்தான் ஒரு எட்டுவயதுச் சிறுவன்.
என்னிடமிருந்து ஒரு பதிலை - அதுவும் தான் விரும்புவதான ஒரு பதிலை எதிர்பார்ப்பவன் போன்ற பாவனையுடன் நின்றிருந்தான் அவன்.
„ கடவுளா? அப்படியென்றால்? “
நான் திருப்பிக் கேட்டேன்.
 என்னிடமிருந்து பதிலை எதிர்பார்த்துக்கொண்டிருந்தவன் எனது மறுகேள்விக்குப் பதிலைத் தேடிக் கொரண்டிருந்தான்.
“ கடவுள்.. கடவுளைத் தெரியாதா?  கடவுள்தான்! …
அதற்குமேல் என்ன சொல்வது என்று புரியாமல் தனது தலையைச் சொறிந்துகொண்டான்.
“ உங்களுக்குத் தெரியும் சொல்:லுங்கள்! கடவுள் இருக்கிறாரா? ”
மறுபடியும் அவன் தன் கேள்விக்குப் பதில்தேட முயன்றான்.
இவனுக்கு எப்படிப் புரியவைப்பது?
“ கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். முதலில் கடவுள் என்றால் என்னவென்று சொல்! ” என்றேன் மீண்டும்.
அவனது முகத்தில் சட்டென ஒரு ஒளி பிறந்தது.
“ எனக்கு விளங்கிவிட்டது. கடவுள் இல்லை... என்ன? ”
நான் ஏதும் சொல்லாமலேயே தான் என்னிடமிருந்து எதிர்பார்த்த பதிலை தானாகவே எடுத்துக்கொண்டான் அவன்.
“ நீ நினைத்தது சரிதான். கடவுள் என்று எதுவுமே இல்லை! ”
- நான் அழுத்திச் சொன்னதும் அவன் என்னைச் சந்தேகத்தோடு பார்த்தான்.
“ கடவுள் இருக்கிறார்.. என்ன? “ அவனே திருப்பிக் கேட்டான்.
„ நீ சொல்வது சரிதான்.. கடவுள் இருக்கிறார்! “ என்றேன்.
அவன் முகத்தில் இப்போது ஒரு குழப்பம் தெரிந்தது.
„ ஒன்றைச் சொல்லுங்கள். இருக்கிறாரா இல்லையா? „
„ நான் சொல்வது இருக்கட்டும்..நீ முதலில் சொல்.. கடவுள் என்றால் என்ன?“ என்றேன் நான் மீண்டும்
„ உங்களுக்குத் தெரியாதா?...கடவுள் என்றால் கடவுள்தான்!“
„ ஓ.. அந்தக் கடவுளைப் பற்றிக் கேட்கிறாயா? “
„ எந்தக் கடவுள்:?“
“ நீ சொன்னாயே அந்தக் கடவுள்!”
“ நான் எந்தக்கடவுளைச் சொன்னேன்? கடவுள் என்றால் கடவுள்தான் என்றேன்!” என்றான் அவன் தடுமாற்றத்துடன்.
“ அதைத்தான் நானும் சொல்கிறேன். அந்தக் கடவுள்தான்!” என்றேன் நானும் விட்டுக்கொடுக்காமல்.
“ அப்போ கடவுள் இருக்கிறார்.. என்ன? “ என்றான் அவன் மீண்டும்.
“ கடவுள் இருப்பதால்தானே நாம் கடவுளைப் பற்றி இப்போது பேசிக்கொண்டிருக்கிறோம்! ” என்றேன்.
“ முதலில் இல்லை என்றீர்கள்...? ” அவன் தயங்கினான்.
“ நான் எப்போ சொன்னேன்.. நீதான் சொன்னாய்”
“ நானா.. எப்போது சொன்னேன்?”
“ கடவுள் இருக்கிறாரா என்று கேட்டது நீதானே...? கடவுள் இல்லையோ என்ற சந்தேகம் வந்ததால்தானே நீ அப்படிக் கேட்டாய்...? ”
“ சரி.. கடவுள் இருக்கிறார் என்றால் இப்போது அவர் எங்கே? ”
“ இங்கேதான்! ” என்றேன்.
„ இங்கேயா..? ” அவன் ஆச்சரியத்துடன் கண்களை அகலவிரித்தான்.
“ இங்கே என்றால் எங்கே? “
“ இதோ இங்கே! ” என்று அவனைச் சுட்டினேன்.
„ இது நான்..! என்னையா கடவுள் என்கிறீர்கள்? “
„ நான் உன்னைச் சொல்லவில்லை.. நீ இருக்கும் இடத்தில் கடவுள் இருக்கிறார் என்று சொல்கிறேன்! “
„ அது எப்படி முடியும் இங்கே நான் இருக்கிறேனே! “
„ இங்கே இருப்பது நீதானா? அதெப்படி உறுதியாகச் சொல்கிறாய்?“
„ இது நான் என்பது எனக்குத்தெரியாதா என்ன?“
„ இது நீதான் என்பது உனக்கு எப்படித் தெரியும்? உன்னை உன்னால் பார்க்க முடியுமா?
உனது முகம் உனக்குத் தெரிகிறதா? “
„ ஆனால்.. இது நான்தான்! “ அவன் தயக்கத்துடன் சொன்னான்.
„ உன்னை உன் கண்களுக்குத் தெரியவில்லை. ஆனால் உனக்கு என்னைத் தெரிகிறது.. எனக்கும் இப்படித்தான் என்னை எனக்குத் தெரியாது.. ஆனால் உன்னைத் தெரிகிறது! உன்னை உன்னால் பார்க்கமுடியாதவரை உன்னருகில் இருக்கும கடவுளையும் நீ பார்க்கமாட்டாய்... ஆனால் உன்னைப் பார்க்க முடிந்த எனக்கு உன்னருகில் கடவுள் இருப்பதையும் பார்க்கமுடிகிறது! “
„ உண்மையைத்தான் சொல்கிறீர்களா? மெய்யாகவே கடவுள் என்னருகில் இருக்கிறாரா?“
அவன் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே கேட்டான்.
„ மெய்யாகவே இருக்கிறார்...அவர் உன்னருகில் வந்ததால்தான் நீ அவரைப்பற்றிக் கேட்க ஆரம்பித்தாய்! “
„ அப்படியென்றால் கடவுள் இதற்கு முன்பு எங்கே இருந்தார்? “
„ நீ பிறப்பதற்கு முன்பு எங்கே இருந்தாயோ அங்கே? “
„ நான் பிறப்பதற்கு முன்பு எங்கிருந்தேன்? “
„ அது கடவுளுக்குத்தான் தெரியும்! “ என்றேன்.
„ ஓ.. அதுதான் கடவுளா? “ என்றான் அவன் ஆச்சரியத்துடன்.




-இந்துமகேஷ்

(பிரசுரம்: சிவத்தமிழ் -ஜெர்மனி 2011)







Monday, May 09, 2011

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்...

-இந்துமகேஷ்


„நேற்றிரவு என்ரை அம்மா என்ரை கனவிலை வந்தா மச்சான்!“ என்றான் என் நண்பர்களில் ஒருவன்.
அதைச் சொன்னபோது அவனது குரல் தழுதழுத்தது கண்கள் கலங்கின.

„அம்மாவைக் கண்டால் சந்தோசம்தானை? அதுக்கு ஏன் கவலைப்படுகிறை?“

„அவவைப் பார்க்கவே முடியேல்லை மச்சான். நல்லா மெலிஞ்சு.. எலும்பும் தோலுமாய்...என்ரை விட்டு வாசலிலை வந்து நின்று அழுதுகொண்டிருந்தா. பசிக்குதடா.. எனக்கு ஏதாவது தா எண்டு...!“

-சொல்லி முடிக்குமன்பே அவன் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்துவிட்டான்.

அவனது தோள்களை ஆதரவாகத் தடவினேன்.

„அவ உயிரோடை இருந்தபோது அவவை நீ வடிவாக் கவனிக்கேல்லை... அதுதான் கனவாக வந்து உன்னைப் பார்த்திருக்கிறா!“

„நான் வேணுமெண்டா அவவைக் கவனிக்காமல் விட்டன்? என்ரை நிலைமை அப்படியாப் போச்சுது!“

„சரிதான் மச்சான். அவ உயிரோடை இருந்தபோதுதான் அவவைக் கவனிக்க உன்னாலை முடியேல்லை. அவ இறந்தபிறகாவது நீ அவவைக் கவனிச்சிருக்கலாம்தானை?“
- அவன் கேள்விக்குறியோடு என்னைப் பார்த்தான்.

„இறந்தபிறகு கவனிக்கிறதா.. என்ன சொல்கிறை?”

“அவவின்ரை நினைவாக நீ என்னவாவது செய்திருக்கிறையா?”

“என்ன செய்கிறது? செத்தவ செத்ததுதானை? நாம இனி என்ன செய்தாலும் அது அவவுக்குக் கிடைக்கவா போகுது?”

-இவனைப்போலத்தான் நம்மில் பலர்.
நம்மோடு வாழ்ந்து நம்மில் கலந்தவர்கள் நம்மை விட்டு உடலால் பிரிந்ததும் அவருக்கும் நமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஓரங்கட்டி விடுகிறோம்.
முன்னோர் வகுத்து வைத்த சடங்குகள் சம்பிரதாயங்களை உதாசீனம் செய்து நம்மைப் பெரிய அறிவாளிகளாக சமூக சீர்திருத்தவாதிகளாகக் காட்டிக் கொள்ளமுயல்கிறோம்.

கனவுபோலக் கலைந்துகொண்டிருக்கிறது காலம்.
நேற்று இன்று நாளை என்பவற்றைத் தாண்டி முக்காலமும் நிகழ்காலத்துக்குள் தேங்கி நிற்கிறது.

எனக்கு முன்னாலும் என்னோடும் எனக்குப் பின்னும் என்று இந்த உலகத்துக்கு உருவமெடுத்து வந்தவர்கள் எவரும் என்னைவிட்டுப் பிரியவில்லை.
என்னில் உறவுகளாய் என்னில் உணர்வுகளாய் என்னில் நினைவுகளாய் எல்லோரும் என்னில் கலந்து என்னுள் ஐக்கியமாகி நிற்கிறார்கள்.

என்னைப்போலவே எல்லாரும்.
தத்தம்மை தனியனாய்க் காட்டிக்கொண்டாலும் ஒவ்வொருவரும் பலரைத் தம்முள் ஐக்கியமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் இன்பங்களையும துன்பங்களையும் தமதாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அதனால்தான் ஒவ்வொருவராலும் மற்றவர் மகிழ்வில் மகிழவும் மற்றவர் துயரில் துடிக்கவும் முடிகிறது.

இரண்டு ஒன்றாவது பிறப்பு.
ஒன்று பலவாவது வாழ்வு.
பலதும் ஒன்றாவது மரணம்.

மரணம் என்பது இந்த உடல் மண்ணாவது.மண்ணிலிருந்து உடலை எடுத்து மண்ணைத்தின்று உடலை வளர்த்து மீண்டும் மண்ணுக்கே தந்துவிட்டு மறைந்து நின்று வேடிக்கை பார்க்கிறது உயிர்.

இந்த உலகவாழ்க்கை என்பது பிறப்பில் தொடங்கி மரணத்தில் முடிந்துபோவதாகத் தோற்றம் காட்டினாலும் இது உயிர்களின் தொடர் விளையாட்டு என்பதே உண்மை.
நமக்குமுன்னால் வந்தவர்கள் நம் கைகளில் வாழ்க்கையைத் தந்துவிட்டு மறைந்து கொண்டிருக்கிறார்கள். நாம் விளையாடிக் கொண்டிருக்கிறோம்.
நமக்குப் பின்னால் வருபவர்களிடம் இதைக் கையளித்துவிட்டு நாம் ஒளிந்துகொள்ளப் போகிறோம்.
அவர்கள் தமக்குப் பின்னால் வரப்போகிறவர்களை எதிர்பார்த்து விளையாடிக்கொண்டிருப்பார்கள்.

இந்தத் தொடர்விளையாட்டின் முடிவு என்பதை முக்தி என்கிறார்கள் வாழ்க்கைத் தத்துவத்தை வரைந்தவர்கள்.

அதை எட்டுவதென்பது அத்தனை சுலபமான காரியம் அல்ல.

நமது வாழ்க்கை விளையாட்டில் பாவ புண்ணியங்கள் என்றும் கர்மவினை என்றும் நாம் சேர்த்துக்கொண்டவைகள் நமது தொடர்விளையாட்டில் நாம் சேர்த்துக் கொள்ளும் புள்ளிகள்.
இந்தப் புள்ளிகளுக்கேற்ப நமது வாழ்க்கை விளையாட்டின் வெற்றிதோல்விகளைத் தீர்மானிக்கும் பொறுப்பை இறைவன் தன் கையில் வைத்திருக்கிறான்.

இதுபற்றித் தெளிந்த ஞானம் உடையவனுக்கு முக்தி வாய்க்கிறது.
அந்தத் தெளிவை அடையும் வரை நாமும் விளையாடிக்கொண்டிருப்போம்.

உருவமாகவும் அருவமாகவும் தொடரும் இந்த விளையாட்டில் நம்மோடு ஐக்கியமாகிக் கொண்டிருப்பவர்களுக்கும் அதிக பங்கிருக்கிறது.
உடலெடுத்த நம்மோடு ஏதோ ஒருவகையில் உறவுகொண்டவர்கள் எல்லோரும்
உடல் நீங்கியபின்னும் நம்மில் ஒன்றுபட்டிருக்கிறார்கள்.

நமக்கு விருப்பமான அல்லது நாம் பற்றுவைத்த எல்லாவற்றினோடும் யாராவது ஒருவரோ அல்லது பலரோ கலந்தே இருக்கிறார்கள். குறிப்பிட்ட அந்தப் பொருளுக்கு அல்லது உணர்வுக்கு மூலகாரணமான அவர்களும் கூடவே வருகிறார்கள்.

என்னைப் பெற்றவர்கள், நான் பெற்ற முதற்குழந்தை, என் உடன் பிறந்த மூத்தவர்,
உடன்பிறவா சகோதரங்கள் என் மைத்துனர்கள் என்று தொடரும் இரத்த உறவுகள் முதல், தூரத்து உறவுகள், பள்ளித் தோழர்கள், நண்பர்கள், பழகியவர்கள், அறிமுகம் இல்லாத ஆனால் நான் நேசித்த கலைஞர்கள், பொதுப்பணியாளர்கள் என்று என்காலத்தில் வாழ்ந்து இன்று நான் உடலால் பிரிந்தவர்கள் பலரும் இப்போதும் என்னுடன் தான் இருக்கிறார்கள்.
நான் உருவாயும் அவர்கள் அருவாயும்.


உளதாய் நான் உணரும் அவர்களை இல்லாதவர்களாய் நீங்கள் எண்ணக் கூடும்.
ஆனாலும் உங்களோடு வாழ்ந்திருந்து இன்று உடலால் உங்களைப் பிரிந்தவர்களை எண்ணிப் பாருங்கள் அவர்கள் அருவாய் உங்களில் வாழ்ந்திருப்பதை உணரலாம்.
அவர்களை நீங்கள் பிரிந்திருக்கவில்லை என்பதை உங்களால் உணரக்கூடுமாயின் இறைவனை நீங்கள் உணர்தலும் எளிது.

பிறிதொருநாள்
என் நண்பனைக் கண்டபோது அவன் என் கைகளைப் பற்றித் தன் கண்களில் ஒற்றிக்கொண்டான்:
“என்னடா?” என்றேன்.
“என்ரை அம்மாவை நான் திரும்பவும் கனவிலை கண்டன் மச்சான்! நல்ல சந்தோசமா இருக்கிறா! போன கிழமை அவவின்ரை திதி வந்துது மச்சான்... ஊரிலை கஸ்டப்படுகிற பிள்ளையளுக்கு அன்னதானம் செய்யிறதுக்கு ஏற்பாடு செய்திருந்தன். மனசுக்குக் கொஞ்சம் நிம்மதியா இருக்கு!”









ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர்- வேண்டா
நமக்கும் அதுவழியே நாம்போமளவும்
எமக்கென்னென் றிட்டுண்டு இரும்.

-ஒளவையார்.


(பிரசுரம்: சிவத்தமிழ் காலாண்டிதழ் 2011)

Wednesday, January 12, 2011

உன் சொந்தம் - என் சொந்தம்

























-இந்துமகேஷ்


ஒரு வீட்டுக்குப் புதிதாகக் குடிவந்த சிலவாரங்களின்பின், வீட்டின் கூரையை ஒட்டிய மேற்தளத்தில் கிடந்த அந்தப் பெரிய பெட்டி என் கண்களில்பட்டது. இருபது முப்பது வருடங்களுக்கு முந்தியதாக இருக்கவேண்டும். பல மாதங்களாக அல்லது வருடங்களாக எவராலும் தேடப்படாத ஒரு பொருளாக அது காட்சிதந்தது. கூரைக்கும் அந்தப் பெட்டிக்கும் இடையில் சிலந்திகள் வலை பின்னியிருந்தன. தூசுபடிந்து தன் நிறம்மாறிக் காட்சிதந்தது அந்தப் பெட்டி.

எடுத்து வீசிவிடலாம் என்ற எண்ணத்தோடு அதைக் கையிலெடுத்தேன்.மிகப் பாரமாயிருந்தது.
”என்ன வைத்திருப்பார்கள் இதற்குள்?” சிரமப்பட்டுத் திறந்துபார்க்கையில் ஒரு குழந்தைக்குரிய விளையாட்டுப் பொருட்கள் நிறைந்திருப்பது தெரிந்தது.
வீட்டுச் சொந்தக்காரி ஒருவித பதட்டத்துடன் ஓடிவந்தாள்:
“என்ன செய்யப்போகிறீர்கள் அதை?”
“எறிந்துவிடலாமா?” என்றேன்.
“இல்லை.. இது என் பொக்கிஷம்!”
“பொக்கிஷமா... ஆனால் இது கவனிப்பாரற்றுக் கிடக்கிறதே?! அழுக்குப் படிந்து... இடத்தை நிரப்பிக்கொண்டு..!“
„ஆனால் இது என் பொக்கிஷம்!“ என்றாள் அவள் மீண்டும்.
“என் குழந்தையுடையது... அவனுக்கென்று நானும் என் கணவருமாக ஆசையாசையாக வாங்கிச் சேமித்தது!“
„இப்போது அவன் எங்கே?“
அவளது விழிகள் நீரில் மிதந்தன. தன் துக்கத்தை மறைத்துக்கொண்டு மெல்லிதாகச் சிரித்தாள்.
„அவன் இப்போது இளைஞன்.! .வளர்ந்துவிட்டான். அதனால் தனியாகப் போய்விட்டான்.!“
„அவனிடம் இவைகளைக் கொடுத்துவிட்டிருக்கலாமே.. தன் இளமைக் காலங்களை அவன் எண்ணிப்பார்க்க உதவியாக இருக்குமே!“
„ஆனால் அவனுக்கு இவற்றில் அத்தனை ஈடுபாடு கிடையாது. அவனது வாழ்க்கை முறையே வேறு. அவனது விளையாட்டுப் பொருட்களை மட்டுமல்ல அவனது பெற்றோர்களான எங்களையே அவன் மறந்து நீண்ட காலமாகிவிட்டது.!“
-அவள் சொல்லிக்கொண்டே அந்தப் பெட்டியை மூடினாள்.
„இது கொஞ்சக்காலம் இங்கேயே கிடக்கட்டும். பிறகு வந்து எடுத்துப் போகிறேன்“
அந்தப் பெட்டியை அது இருந்த இடத்திலேயே போட்டுவைத்தேன்.
என்றாவது ஒருநாள் அவளது மகன் இதை திரும்ப வந்து பெற்றுக்கொள்ளக் கூடும். வராமல் போனாலும் அதனால் அவளுக்கொரு நட்டமுமில்லை.
அந்த விளையாட்டுப் பொருட்களில் பதிந்திருந்தது அவளுடைய மகனின் இளமைக்காலம் மட்டுமல்ல தங்கள் குழந்தைக்காக என்று இவளும் இவளது கணவனும் தேக்கிவைத்திருந்த ஆசைகளும் அன்பும்தான்.
மகனுக்குரியது என்ற இவள் சொல்லிக்கொண்டாலும் உண்மையில் இந்தப் பொருட்களின் சொந்தக்காரி இவள்தான். அதனால் இவள் தன் சொத்தாக அதை நினைக்கிறாள்.

உயிரில்லாத பொருட்களில் தங்கள் உயிரை வைத்துக்கொண்டிருக்கிற எண்ணற்ற மனிதர்கள்...! உயிரற்றதென்று கணிக்கப்படுகின்ற அந்தப் பொருட்களில்தான் இவர்களது உயிரும் இருக்கிறது.

இந்த விளையாட்டுப் பொருட்களைப் போலத்தானே நமது இந்த உடலும். எல்லா உடல்களும் என்றோ ஓர்நாள் மூப்பு என்றும் நோய் என்றும் தூசு படிந்து மண்ணின் துகள்களாய் மாறிப் போகின்றவைதானே! ஆனாலும் அவரவர்க்கு அவை சொந்தம்-
அவர்களுடைய உயிர்களைச் சுமந்து திரிகிறவரை!

தன் மகனின் விளையாட்டுப் பொருட்களைக் காத்துக்கொண்டு தன் மகனுக்காகக் காத்துநிற்கிற தாய்போல் நமது வருகைக்காகக் காத்துநிற்கிற இறைவன்...
„பகுத்தறிவின்“ உச்சத்தை எட்டிவிட்டதால் அவனைப்பற்றி எண்ணிப்பார்க்க நேரமில்லாத நாம்...?!

„மறுத்தனன் யான்உன் அருள்அறி யாமையில் என்மணியே!
வெறுத்தெனை நீவிட்டிடுதிகண் டாய்வினை யின்தொகுதி
ஒறுத்தெனை ஆண்டுகொள் உத்தர கோசமங் கைக்கரசே!
பொறுப்பரன் றேபெரி யோர்சிறு நாய்கள்தம் பொய்வினையே!
(மாணிக்கவாசகர்- நீத்தல் விண்ணப்பம்: 6)
(பிரசுரம்: சிவத்தமிழ் - தை 2011)

Total Pageviews