Wednesday, January 12, 2011

உன் சொந்தம் - என் சொந்தம்

























-இந்துமகேஷ்


ஒரு வீட்டுக்குப் புதிதாகக் குடிவந்த சிலவாரங்களின்பின், வீட்டின் கூரையை ஒட்டிய மேற்தளத்தில் கிடந்த அந்தப் பெரிய பெட்டி என் கண்களில்பட்டது. இருபது முப்பது வருடங்களுக்கு முந்தியதாக இருக்கவேண்டும். பல மாதங்களாக அல்லது வருடங்களாக எவராலும் தேடப்படாத ஒரு பொருளாக அது காட்சிதந்தது. கூரைக்கும் அந்தப் பெட்டிக்கும் இடையில் சிலந்திகள் வலை பின்னியிருந்தன. தூசுபடிந்து தன் நிறம்மாறிக் காட்சிதந்தது அந்தப் பெட்டி.

எடுத்து வீசிவிடலாம் என்ற எண்ணத்தோடு அதைக் கையிலெடுத்தேன்.மிகப் பாரமாயிருந்தது.
”என்ன வைத்திருப்பார்கள் இதற்குள்?” சிரமப்பட்டுத் திறந்துபார்க்கையில் ஒரு குழந்தைக்குரிய விளையாட்டுப் பொருட்கள் நிறைந்திருப்பது தெரிந்தது.
வீட்டுச் சொந்தக்காரி ஒருவித பதட்டத்துடன் ஓடிவந்தாள்:
“என்ன செய்யப்போகிறீர்கள் அதை?”
“எறிந்துவிடலாமா?” என்றேன்.
“இல்லை.. இது என் பொக்கிஷம்!”
“பொக்கிஷமா... ஆனால் இது கவனிப்பாரற்றுக் கிடக்கிறதே?! அழுக்குப் படிந்து... இடத்தை நிரப்பிக்கொண்டு..!“
„ஆனால் இது என் பொக்கிஷம்!“ என்றாள் அவள் மீண்டும்.
“என் குழந்தையுடையது... அவனுக்கென்று நானும் என் கணவருமாக ஆசையாசையாக வாங்கிச் சேமித்தது!“
„இப்போது அவன் எங்கே?“
அவளது விழிகள் நீரில் மிதந்தன. தன் துக்கத்தை மறைத்துக்கொண்டு மெல்லிதாகச் சிரித்தாள்.
„அவன் இப்போது இளைஞன்.! .வளர்ந்துவிட்டான். அதனால் தனியாகப் போய்விட்டான்.!“
„அவனிடம் இவைகளைக் கொடுத்துவிட்டிருக்கலாமே.. தன் இளமைக் காலங்களை அவன் எண்ணிப்பார்க்க உதவியாக இருக்குமே!“
„ஆனால் அவனுக்கு இவற்றில் அத்தனை ஈடுபாடு கிடையாது. அவனது வாழ்க்கை முறையே வேறு. அவனது விளையாட்டுப் பொருட்களை மட்டுமல்ல அவனது பெற்றோர்களான எங்களையே அவன் மறந்து நீண்ட காலமாகிவிட்டது.!“
-அவள் சொல்லிக்கொண்டே அந்தப் பெட்டியை மூடினாள்.
„இது கொஞ்சக்காலம் இங்கேயே கிடக்கட்டும். பிறகு வந்து எடுத்துப் போகிறேன்“
அந்தப் பெட்டியை அது இருந்த இடத்திலேயே போட்டுவைத்தேன்.
என்றாவது ஒருநாள் அவளது மகன் இதை திரும்ப வந்து பெற்றுக்கொள்ளக் கூடும். வராமல் போனாலும் அதனால் அவளுக்கொரு நட்டமுமில்லை.
அந்த விளையாட்டுப் பொருட்களில் பதிந்திருந்தது அவளுடைய மகனின் இளமைக்காலம் மட்டுமல்ல தங்கள் குழந்தைக்காக என்று இவளும் இவளது கணவனும் தேக்கிவைத்திருந்த ஆசைகளும் அன்பும்தான்.
மகனுக்குரியது என்ற இவள் சொல்லிக்கொண்டாலும் உண்மையில் இந்தப் பொருட்களின் சொந்தக்காரி இவள்தான். அதனால் இவள் தன் சொத்தாக அதை நினைக்கிறாள்.

உயிரில்லாத பொருட்களில் தங்கள் உயிரை வைத்துக்கொண்டிருக்கிற எண்ணற்ற மனிதர்கள்...! உயிரற்றதென்று கணிக்கப்படுகின்ற அந்தப் பொருட்களில்தான் இவர்களது உயிரும் இருக்கிறது.

இந்த விளையாட்டுப் பொருட்களைப் போலத்தானே நமது இந்த உடலும். எல்லா உடல்களும் என்றோ ஓர்நாள் மூப்பு என்றும் நோய் என்றும் தூசு படிந்து மண்ணின் துகள்களாய் மாறிப் போகின்றவைதானே! ஆனாலும் அவரவர்க்கு அவை சொந்தம்-
அவர்களுடைய உயிர்களைச் சுமந்து திரிகிறவரை!

தன் மகனின் விளையாட்டுப் பொருட்களைக் காத்துக்கொண்டு தன் மகனுக்காகக் காத்துநிற்கிற தாய்போல் நமது வருகைக்காகக் காத்துநிற்கிற இறைவன்...
„பகுத்தறிவின்“ உச்சத்தை எட்டிவிட்டதால் அவனைப்பற்றி எண்ணிப்பார்க்க நேரமில்லாத நாம்...?!

„மறுத்தனன் யான்உன் அருள்அறி யாமையில் என்மணியே!
வெறுத்தெனை நீவிட்டிடுதிகண் டாய்வினை யின்தொகுதி
ஒறுத்தெனை ஆண்டுகொள் உத்தர கோசமங் கைக்கரசே!
பொறுப்பரன் றேபெரி யோர்சிறு நாய்கள்தம் பொய்வினையே!
(மாணிக்கவாசகர்- நீத்தல் விண்ணப்பம்: 6)
(பிரசுரம்: சிவத்தமிழ் - தை 2011)

Total Pageviews