Tuesday, July 04, 2006

என்னுள்ளே நான்

-இந்துமகேஷ்.


தன்னையுணர்தல் என்பது பக்தியின் முதல் நிலை.
தன்னைத்தான் அறிந்தவன் தான் வேறு தெய்வம் வேறு என்று பிரித்துப் பார்ப்பதில்லை. தன்னுள் வாழும் தெய்வத்தைக் கண்டுகொண்டபின் தானே தெய்வம் என அவன் உணர்கிறான்.

நீயும் நானும் காதலால் இணைந்துகொண்டபின் நீ வேறு நான் வேறு என்று எப்படிப் பகுத்துவிட முடியாதோ அதுதான் இங்கேயும் நடக்கிறது.
கண்டதும் காதலில் கலந்துவிட்டோம் நாம்.
இந்தக் காணுதல் என்பது உன்னை நானும் என்னை நீயும் கண்டு கொண்டதால் அல்ல என்னை நானும் உன்னை நீயும் கண்டுகொண்ட பின்தான் ஆரம்பித்தது என்பதை நாம் இருவருமே மறந்துவிடக்கூடாது. இப்போது நீ வேறு நான் வேறு என்று எனக்குத் தோன்றவில்லை. நீயும் அவ்வாறே உணர்வாய் என்பதையும் நான் அறிவேன். இப்போதும் நீ கடவுளோடு கலந்திருக்கின்றாய். அவ்வாறேதான் நானும். ஏனெனில் உன்னிலிருந்து இனி நான் பிரியப் போவதில்லை. இந்தக் காதல் இனி வளரும். உயிர்க் கலப்பில் இது சங்கமித்து அந்த ஒரே பரம்பொருளிடம் தன்னை ஒப்புவித்துவிடும். அதற்காத்தானே காத்திருந்தோம் இத்தனை காலமாய்.

ஆனால் இந்தக் காதலுக்கும் எண்ணற்ற தடைகள்.
நம்மை மறுபடி மறுபடி மீள இழுத்து மாய வலைக்குள் மயங்கிப் போக வைக்கும். ஆனால் தெளிவு பெற்றபின் காதலின்றி வேறு எதுவும் நம்மை ஆட்கொள்ளமுடியாது. அந்த வைராக்கியம் நமக்கு உண்டு.

சொர்க்கம் என்றும் நரகம் என்றும் வெவ்வேறு உலகங்கள்.
இறைவனோடு இரண்டறக் கலப்பது சொர்க்கம். மாயைகளுக்குள் மயங்கிப்போவது நரகம். ஆனால் இந்த மாயை என்பது காதலின் மற்றொரு வடிவம்.

மனதைக் கவர்வதற்காய் வகைவகையாய்த் தெய்வ வடிவங்கள். இதுவும் ஒருவித மாயைக்குள் நம்மை மயங்கவைக்கும் முயற்சி. ஆனால் இந்த வடிவங்களை ஆக்கிவைத்தவன் மனிதன்தான்.

தன்னுள் இருக்கும் தெய்வத்திற்கு வடிவம் கொடுத்துப் பார்க்க முயற்சித்ததன் விளைவே இவை. தனது சாயலாக இறைவன் மனிதனைப் படைத்தான் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மனிதன் கடவுளுக்குத் தனது வடிவத்தையே தந்தான். ஆனால் மனிதன் செய்தான் என்பதற்காக அவை வெறும் கல் மண் என்று நாங்கள் ஒதுக்கிவிட முடியுமா?

விக்கிரக ஆராதனைக்காரர்களே விலகிப்போங்கள் என்று பல குரல்கள் பல இடங்களில் ஒலிக்கின்றன. அதற்காக விக்கிரகங்களை எல்லாம் உடைத்தெறிதல் நியாயமா?

உயிரோடு உறவாடிக்கொண்டிருக்கும் உடல் என்ற விக்கிரகம்.
இது நானில்லை என்று எனக்குத் தெரிந்தாலும் இதை அடையாளப்படுத்தித்தான் என்னை இனங்காட்டிக்கொள்ள முடிகிறது.
இந்த உடலை எறிந்துவிட்டு ஒருநாள் ஓடிப்போகும்போது சவம் என்று முகம் சுளிக்கப் போகிறது உலகம். அதற்காக என்னை அடையாளப்படுத்திக்கொள்ள உபயோகிக்கப்படும் இந்த உடலை உதறி எறிந்துவிட்டால் இந்த உலகத்திற்கு என்னை எப்படி நான் காண்பிக்க முடியும்?

விக்கிரகத்துக்குள் தெய்வத்தைக்காண உன்னால் முடியவில்லை என்றால் உன்னுள் இருக்கும் தெய்வத்தையும் உன்னால் காணமுடியாமல்போகும்.

நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புஷ்பம் சாற்றியே
சுற்றிவந்து முணுமுணென்று சொல்லுமந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதனுள் இருக்கையில்
-இது ஒரு சித்தர் சொன்னது.

நட்ட கல்லும் பேசுமோ? பேசாது!
ஏன் பேசாது?
கல்லுக்குள் இருப்பதாக இவன் கற்பனை பண்ணிக் கொண்டிருக்கும் இறைவன் இவனுள் அல்லவா இருக்கிறான்.
ஆனால் நட்ட கல்லும் பேசும்- இவன் நம்பிக்கையோடு இறைவனை அங்கே தேடினால்.
அந்த நம்பிக்கையின் உயிரே காதல்.

-இந்துமகேஷ் எழுதிய "காதலாகிக் கசிந்துகண்ணீர் மல்கி.." தொடர்-
(பிரசுரம்: வெற்றிமணி தை 2003)

Thursday, April 27, 2006

விதியே...

இந்துமகேஷ்.


எது விதிக்கப்பட்டிருக்கிறதோ அதுவே விதி.
இன்ன நேரத்தில் இன்னதுதான் நடக்கும் என்று முன்பாகவே எவரால் நிச்சயப்படுத்திக்கொள்ள முடிந்திருக்கிறது.

எது எது எப்போது நடக்கும் என்பதைத் தீர்மானிப்பது யார்? அல்லது எது?
இதையே விதி என்ற ஒன்றுக்குள் அடக்கிவிட்டாயிற்று.

"விதியா..? அப்படி ஒன்று இருக்கிறதா என்ன?" என்று வினாவெழுப்புபவனும் அதே விதிக்குள் அகப்பட்டுக்கொணடிருக்கிறான் என்பதே விதிக்குள்ள மகிமை.
ஒருவன் நல்லவனாவதும் தீயவனாவதும அவனுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ளது.
இதை மாற்றுவதற்கு விதியை நம்புபவனால்மட்டுமே முடியும்.
"இது என் விதியா இல்லை இதைநான் மாற்றிக்காட்டுகிறேன்" என்று எழுபவன் தீவினைகளைக் கடந்து நல்வினை புரிய முனைகிறான்.

பக்தி என்பது எப்போதும் பயமூட்டுகின்ற ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. இந்தப் பயம் என்பது தீவினைகளுக்கு எதிரான பயம்.
தீமை புரிந்தால் நரகத்துக்கும் நன்மை புரிந்தால் சொர்க்கத்துக்கும் போகலாம் ஆகவே தீமைகளிலிருந்து உன்னை விலக்கிக்கொள் என்பதிலேயே ஒருவித பயமூட்டுகின்ற தன்மை பரப்பப்பட்டிருக்கிறது.
இந்தப் பயக்திதான் பலரை முக்திவழிக்கு இட்டுச் சென்றிருக்கிறது என்பதும் உண்மையே.
பயபக்தி என்பது எங்கிருந்து வருகின்றது என்றால் அது மரணத்திலிருந்து வருகிறது.
ஒருநாளைக்கு நாம் இந்த உடலை எறிந்துவிட்டு ஓடிப் போய்விடவேண்டும் என்ற பயம்.
வாழ்கின்ற காலத்தில் ஏதாவது நல்லதைப்புரியவேண்டும் என்ற அக்கறைக்கும் மரணத்தைப்பற்றிய பயமே மூலமாய் அமைந்திருக்கிறது. எதைச் சொன்னாலும் அசைவுறாதவன் உன்னைக் கொல்லப்போகிறேன் என்றதும் எப்படிப் பதறிப்போகிறான்.
ஆனால் எவனும் எவனையும் கொல்லமுடியாது.
அவனுக்கு நேரம் வந்துவிட்டால் அதைத் தடுக்கவும் எவனாலும் முடியாது.

பிறப்பும் மரணமும் இயற்கையின்விதி.
பெண்ணில் தொடங்கி மண்ணில் முடிகிற மனிதவரலாறு என்பதே விதி.
இந்த இயற்கையின் விதிக்குள் இயங்குகிற வாழ்க்கைப் பயணத்தில் நடப்பவைகள் எல்லாம் இந்த விதிக்குள்ளேயே அடக்கம்.

விதியை நம்புவதும் நம்பாமல் விடுவதும் இரண்டுமே விதி.
நான் விதியை நம்புகிறவன். நீ அதை நம்பாமல் விடுவதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. உன் கொள்கையில் உனக்கு இருக்கும் நம்பிக்கையை நான் மாற்றமுடியாததுபோல என் கொள்கையில் எனக்கிருக்கும் நம்பிக்கையையும் நீ மாற்ற முடியாது. இருவருமே இப்படி கொண்ட கொள்கையில் பற்றாளர்களாக இருக்கிறோம் என்பதே விதி என்றால் அதை யாரால் மாற்ற முடியும்?

உன்னை எனக்குத் தெரியாது. என்னை உனக்குத்தெரியாது. ஆனால் நான் இப்போது எழுதிக்கொண்டிருப்பதை நீ என்றோ ஒருநாள் படித்துக்கொண்டிருப்பாய் என்பதை நான் அறிவேன். படிக்கும் உனக்காகத்தான் இதை நான் எழுதுகிறேன். நீ படிக்காமல் தூர எறிந்துவிட்டுப் போயிருந்தால் உனக்கும் எனக்குமிடையில் ஒரு சந்திப்பு நேர்ந்திருக்காது.
ஆனால் நாம சந்தித்துக்கொள்ளவேண்டும் என்ற விதி இருப்பதால் நான் எழுதியதை நீ படித்துக்கொண்டிருக்கிறாய்.
இருவரும்இப்போது விதியைப்பற்றிக் கருத்துக்களைப் பரிமாறுகிறோம்.

என்னோடு நீ ஒத்துவருபவனாகவோ அல்லது உன்னோடு நான் ஒத்து வருபவனாகவோ இருக்கலாம்.
முரண்பாடுகள் மட்டுமே விதியல்ல.
ஒத்த தன்மை என்பதும் விதிதான்.
உலகத்தைக் கடவுள் படைத்தான் என்பதை நம்புகிறவன் நிச்சயம் விதியை நம்புகிறவனாகவே இருப்பான்.

பக்தி என்பது மதம் கடந்தது.
கடவுள் எந்த வடிவத்திலும் வரலாம். நீ எந்த வடிவத்தில் எதிர்பார்க்கிறாயோ அந்த வடிவத்தில் வரலாம்.

பல ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு அறுவைச் சிகிச்சையின்போது ஒரு இளைஞன் தன் உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்தான். சக்தி சக்தி என்று எப்போதும் தவிக்கிற மனது.
இங்கே சக்தியின் மற்றொரு வடிவமாக மரியாளை மனதால் தியானித்துக் கொண்டிருப்பான்.
காமாட்சி மீனாட்சி கருமாரி மகமாயி என்ற வரிசையில் மரியா.
மரணப்படுக்கையிலும் அதைச் செய்தான்.
அறுவைச் சிகிச்சை முடிந்து அவசர சிகிச்சைப்பிரிவில் அவன் மயக்கநிலையில் இருந்தான். இடையிடையே அவன் கண்விழிக்கும்போதெல்லாம் ஒரு தாதிப்பெண் முக்காட்டோடு அவனருகிலேயே நின்றிருந்ததைக்கண்டான்.
இரவு முழுவதும் அவள் அவனருகிலேயே நின்றிருந்தாள்.
அதிகாலையில் அவன் ஓரளவு மயக்கம் தெளிந்தபோதும் அவள் நின்றிருந்தாள்.
அவன் மெதுவாக அவளிடம் கேட்டான்-
"நீங்கள் யார்?"
அவள் மெதுவாகப் புன்னகைத்தபடி சொன்னாள்-
"நான் மரியா!"
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்று ஆர்க்கிமிடீஸ்போல எழுந்து ஓடாத குறையாக அவன் புலம்பிக்கொண்டிருந்தான்.
வருவோர் போவோரிடமேல்லாம் அரற்றிக்கொண்டிருந்தான்.
இது உண்மையில் நடந்தது.
அந்த இளைஞன் நான்தான்.

தெய்வம் என்பது எங்கிருக்கிறது என்று தேடிக்கொண்டிருக்கிறாய் நீ.
மனிதவடிவில் அது வரும்.
புராணகாலங்களில் வந்ததுபோல் கலியுகத்தில் தெய்வம்வராது என்று நீ நினைக்காதே. வரும்.
வேண்டுதல்மட்டும் சரியாக இருந்து நமது விதியும் சரியாக இருந்தால்.



(பிரசுரம்: வெற்றிமணி 2001-
இந்துமகேஷ் எழுதிய
காதலாகி கசிந்து கண்ணீர்மல்கி.. ஆன்மீகத்தொடரிலிருந்து!)

Tuesday, April 18, 2006

ஓம் என்றால் ஓம்தான்

-இந்துமகேஷ்

"ஓம் எண்டு சொல்லிப்போட்டன். நான் சொன்னால் சொன்னதுதான்.ஒருக்காலும் வாக்கு மாறமாட்டன்"
ஓம்.. இப்படித்தான் பெரும்பாலான மனிதர்கள்.
கொடுத்த வாக்கைக் காப்பாற்றியாகவேண்டுமே.
என்ன பாடுபட்டாலும் அதை நிறைவேற்றியாகவேண்டும்.
ஏனெனில் ஓம் என்பது சாதாரண வார்த்தையல்ல.
உயரிய வார்த்தை.உறுதியான வார்த்தை.

"எல்லாத்துக்கும் ஓம்போடுறதில சிலோன்காரங்கள மிஞ்சுறதுக்கு ஆளே கெடையாது!" என்று தமிழகத் தமிழர்கள் வேடிக்கையாகச் சொல்வதுண்டு நம்மைப்பற்றி.
ஓம்காரவடிவான நிலம் ஈழம்.
மாம்பழவடிவான எங்கள் தேசம் இந்தியாவின் தென்கரையில் இருந்து பார்ப்பவர்களுக்கு ஓங்காரமாகத்தெரிவதில் வியப்பென்ன இருக்கிறது?
ஓம் உலகம் முழுதும் பரவியிருந்தாலும், ஈழத்தமிழர்கள் வாழ்வில் அவர்களது நாளாந்த வாழ்வோடு நிறைந்து கலந்துவிட்டது ஓம்.

ஒருமையில் கேள்விக்குறியாய் நிற்கும் தமிழன் வாழ்வு பன்மையில் ஓங்காரமாய் மாறிவிட்டிருப்பதைப் புரிந்துகொண்டவர்கள் நம்மில் எத்தனைபேர்?!
ஒன்றுபட்ட வாழ்வில் அது முக்காலத்துக்கும் நம்மோடு கூடவே வருகிறது. தனிமையில் ஒருமையில் என்னைப் பற்றியே சொல்லும்போது ஏன் என்ற கேள்வியோடு நிற்கிறேன்.
வாழ்ந்தேன்.. வாழ்கிறேன்.. வாழ்வேன்..
கடந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் எல்லாவற்றியும் ஏன்தான்.
வாழ்ந்தோம் வாழ்கிறோம் வாழ்வோம் என்று எல்லோரும் ஒன்றுபட்டபின்னால் வருகின்ற வார்த்தைகளில் ஓம்தான் ஓங்காரம்தான்.
தெரிந்தோ தெரியாமலோ ஓம் நம்மோடு இணைந்துவிட்டபின்னால் அதுபற்றித்தெரிந்துகொள்ளாமல் இருக்கலாமா?
இந்த உலகத்தின் முதல் ஒலியே ஓங்காரம்தான் என்கின்றனர் ஆன்றோர்.
அகரம் உகரம் மகரம் இணைந்த ஒலிதான் ஓம்.
முக்காலமுமே இந்த ஓம்காரத்தில் அடங்குகிறது.
அ என்பது படைத்தல், உ என்பது காத்தல், ம என்பது அழித்தல் என்பதாகக்கொண்டு முத்தொழில் செய்கின்ற மூலசக்தியே ஓங்காரமான பிரணவம் என்கிறார்கள்.
ஓங்கார வடிவானவன் விநாயகன். அவனது யானைமுகம் பிரணவமாகிய ஓங்காரத்தைக குறிக்கிறது.
முன்பெல்லாம் எழுதும்போது உ என்று பிள்ளையார் சுழிபோட்டு எழுதுவோம். இது ஓங்காரத்தைக் குறிப்பதாகச் சொல்லப்பட்டது.
(பேனை எழுதுதா எண்டு பார்க்கத்தான் உ போடுறநாங்கள் என்று வேடிக்கையாகச் சொல்லி அந்த வழக்கத்தை நிறுத்திக்கொண்டவர்கள் பலர். இப்படி அர்த்தம் தெரியாமல் பல விடயங்கள் அழிந்துபோய்விட்டன என்பது வேதனைதரும் விடயம்)

நாளும்பொழுதும் நாங்கள் ஓம்போட்டுக்கொண்டிருப்பதால் பிள்ளையார்சுழி போடுவதை மறந்துவிட்டோம்.
ஆனாலும கணநாதன் எங்களோடுதான் இருக்கிறான்.

கணனயின் முன்னால் உட்கார்ந்து எலியின்மீது விரல்களை வைத்து உலகை வலம்வருகிறோமே இணையத்தளத்தில்.
உட்கார்ந்த இடத்திலிருந்தே உலகத்தைச் சுற்றிவந்த பெருமான் விநாயகன்.
கதைகளில் படித்தோம் நம்பமுடியவில்லை. இப்போது பூட்டிய அறைக்குள்ளிருந்து உலகத்தைச் சுற்றிவருகிறோம் கணனியின் பெயரால். இதை நம்பமுடிகிறது.

"எந்தவிதமாக நீ விரும்புகிறாயோ அந்த விதமாகத் தன்னை வெளிப்படுத்துவான் இறைவன்!" என்ற வார்த்தைகள் பொய்யல்ல.
"எதுவாக நீ இருக்கவேண்டுமென்று நீ விரும்புகிறாயே அதுவாகவே ஆகிறாய்!" என்ற ஞானியர் வாக்கும் பொய்யல்ல.
உண்மைகள் எப்போதும் ஒப்புக்கொள்ளப்படவேண்டியவை.
நீ ஒப்புக்கொண்டாலும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் உண்மைகள் நிரந்தரமானவை.
நிரந்தரமான ஒன்றாக நிலைத்திருப்பது ஓம்.
ஓம் என்று தனியாக உட்கார்ந்து தியானம் செய்ய முடியாமல் போகலாம். ஆனால் ஓம் என்று மற்றவர்களது விருப்பத்துக்கு மதிப்பளியுங்கள்.
செய்வோம் என்று சிரத்தையோடு நில்லுங்கள்.
மாட்டோம் என்று மறுதலித்தாலும் ஓம் என்கிறோமே என்கிறீர்களா?
அது உங்களால் இயலும் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.
ஆனால் நீங்கள் அதை விரும்பவில்லை என்பதாகத்தான் அது அர்த்தப்படும்.
உலகத்துக்கு நன்மைபயக்கிற எந்த விடயங்களுக்கும் ஒத்துழைக்கமாட்டோம் என்று மறுதலிக்கின்ற மனிதர்கள் தனித்துப் போய்விடுகிறார்கள்.
தனியாகப் போனபின் ஓங்காரமும் அவர்களைவி்ட்டுப் போய்விடுகிறது. வந்தேன், (உலகத்துக்கு வந்து ஏன்?) இருந்தேன், (உலகத்தில் இருந்து ஏன்?)
வாழ்ந்தேன், (உலகத்தில் வாழ்ந்து ஏன்?) என்று அவர்கள் வாழ்வு ஏன் என்றே முடிந்துபோகிறது.
ஆனால் ஒன்றுபட்ட மனிதர்களைப் பாருங்கள்.
வந்தோம் இருந்தோம் வாழ்ந்தோம் என்று ஓங்காரத்தோடு கலந்து உலகத்திற்காக வாழ்ந்து ஓங்காரத்திலேயே கரைந்துபோகிறார்கள்.
ஓம்காரம் நிலையானது என்பதால் ஓம்காரத்தில் கலந்த அவர்களும் ஓம்காரமாகி உலகத்தில் நிலைத்துவிடுகிறார்கள்.
"ஓம்.. நீ சொல்வது சரிதான்!" என்கிறீர்களா?
நீங்கள் ஓம் என்றால் நானும் ஓம்தான்!


(பிரசுரம்: சிவத்தமிழ்-காலாண்டிதழ்-2004)

Tuesday, April 11, 2006

எத்தனை கடவுளர்..?

"இவர்களுக்கு வேறு வேலையே கிடையாது.ஆயிரத்தெட்டுத் தெய்வங்கள்... ஆயிரத்தெட்டுக் கோயில்கள்... ஆளுக்கொரு கடவுளைப் பிடித்துக்கொண்டு அவனவன் நான் பெரிது நீ பெரிது என்று அடித்துக்கொள்கிறான். இதைவிட கடவுளே இல்லை என்பவன் எவ்வளவோ உயர்ந்தவன் இல்லையா?"
-இப்படிப் பலரும் கேட்கிறார்கள்.

கடவுளின் பெயரால் அடிபடுவதைவிட கடவுளே இல்லை என்பவன் மேல் என்று தோன்றுவதில் ஒரு நாத்திகவாதம் இருப்பதுபோலத் தோன்றும். ஆனால் உண்மையில் கடவுளே இல்லை என்பவனும் ஆத்திகனே என்பது பலருக்கும் புரிவதில்லை.
உண்டு என்பவனும் இல்லை என்பவனும் ஒன்றையே பற்றி நிற்கிறார்கள். இல்லாத ஒரு பொருளைப்பற்றி எவனும் விவாதிக்க வேண்டியதில்லை. ஆனால் இன்றும் உலகில் இந்த விவாதம் தொடர்கிறது. ஆகவே கடவுள் இருப்பதும் உண்மை என்றாகிறது.

நீயும் நானும் உள்ளவரை கடவுள்கள் இருக்கிறார்கள்.
" கடவுள்கள் என்று ஏன் பன்மையில் சொல்கிறாய்?" என்று என்னை நீ கேட்பாய். நீயும் நானும் ஒரே இயல்பின் வெவ்வேறு வடிவங்கள் என்பதை நீ உணராதவரையில் நீயும் நானும் வேறுதான்.
ஒரு சிறு தீப்பொறி என்பது நெருப்பின் ஒரு வடிவம். அது யாருக்கும் புலனாகாமல் எரிந்துகொண்டிருக்கலாம். ஆனால் அதுவே ஒரு காட்டை எரிக்கத் தொடங்கிவிட்டால் அதன் தன்மை நம்மை அச்சத்திற்குள்ளாக்குகிறது. அதை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எத்தனை பாடுபடுகிறோம்.
எப்படித் தீ பரவிற்று... அது எங்கிருந்து தொடங்கிற்று என்பதெல்லாம் பிறகுதான் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படுகிறது. முதல்வேலை பரவும் தீயைக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதுதான்.

கடவுள் தன்மை என்பது சிறுபொறியாய் நமது உடற்கூட்டுக்குள் எவனுக்கும் புலனாகாமல் புதைந்துகிடக்கிறது.நீறு பூத்த நெருப்பு என்பதுபோல. என்னுள்ளும் அது உண்டு. உன்னுள்ளும் அது உண்டு. ஆனால் மனக்காட்டுக்குள் அது பற்றிக்கொள்ளும்போது இந்த மனக்காட்டுக்குள் நெருக்கமாய் வளர்ந்திருக்கிற காம குரோதங்களை எரிக்கத் தொடங்கும்போது அந்தத் தீயை அணைத்துவிட நாம் பிரயத்தனப்படுகிறோம்-காம குரோதங்கள் இல்லாமல் நம்மால் வாழமுடியாது என்பதுபோல் ஒரு மாயையில் நாம் மயங்கிக் கிடப்பதால்!

வாழ்க்கை என்பதன் அர்த்தம் அனுபவிப்பது என்பதாகத்தான் நமக்குக் கற்பிக்கப்பட்டு வந்திருக்கிறது.அவன் அப்படி வாழ்கிறான் இவன் இப்படி வாழ்கிறான் என்று நமக்கு உதாரணம் காட்டப்பட்டவர்களெல்லாம் வாழ்க்கையில் முழுமை பெற்றவர்களா என்றால் இல்லை.உலகவாழ்வில் அவர்கள் ஒரு துறையில் மட்டும் வெற்றிபெற்றவர்களாக இருக்கிறார்கள். அவ்வளவுதான். ஆனால் அதுவே ஒரு முழுமையான வாழ்க்கை அல்ல.அவர்களும் பிறிதொரு பொழுதில் மன அமைதிக்காக எப்படியெப்படியெல்லாமோ அலைந்து மாய்கிறார்கள்.திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை என்று கடவுளின் காலடியில் வீழ்கிறார்கள்.
இந்தக் கடவுள் எங்கேயிருந்து வருகின்றதென்றால் அவர்களுக்குள்ளிருந்துதான்.
அவர்களுக்குள்ளிருக்கும் கடவுளை அவர்கள் அடையாளம் கண்டுகொள்ளும்போது அது ஒரு வடிவம் பெறுகிறது.

ஒவ்வொருவனும் கடவுளின் வடிவம் எனும்போது கடவுளுக்குப் பல்வேறு வடிவங்கள் இருப்பதில் தவறென்ன?
அல்லாவே என்பவனும் ஏசுவே என்பவனும் அம்மாளே என்பவனும் சிவனே என்பவனும் கண்ணா என்பவனும் ராமா என்பவனும் முருகா என்பவனும் இப்படி ஆளாளுக்கு ஒரு நாமத்தைச் சொல்லும்போதும் அவன் தன்னுள்ளிருப்பதையே அடையாளம் கண்டு அழைக்கிறான்.மனிதத் தன்மையிலிருந்து தெய்வத் தன்மைக்குத் தன்னைத்தானே மாற்றிக்கொள்கிறான். தெய்வீகத் தன்மை அவனது அன்பைத் தெய்வீகக் காதலாக மாற்றுகிறது.

உன்னை நானும் என்னை நீயும் காதலிக்க ஆரம்பிக்கும்போது உனது வடிவம் என்னை ஆதிக்கம் செலுத்துகிறது. எனது வடிவம் உன்னை ஆட்கொள்கிறது. நாங்கள் காதலில் கரைந்தபிறகு நீ நானாகவும் நான் நீயாகவும் மாற்றம் பெறுகிறோம்.இப்போது எனக்குள்ளிருந்த என்னை நீயாக நான் காண்கிறேன்.உனக்குள்ளிருந்த நீ என்னையே நீயாக உணர்கிறாய்.இப்போது என்னுள் நான் இல்லை. உன்னுள் நீ இல்லை.நமது வடிவங்களுக்கு என்னாயிற்று?

கடவுளின் வடிவமும் இப்படித்தான் காதலில் ஒருநாள் அது கரைந்துபோகும். நீ கடவுளிலும் கடவுள் உன்னிலும் கரைந்தபிறகு கடவுளுக்கு ஏதுவடிவம்?
இது புரியாதவரையில் கடவுளுக்கு ஏன் இத்தனை வடிவங்கள் என்று அடிக்கடி எவனாவது கேட்டுக்கொண்டேயிருப்பான். அவன் கடவுளைக் காதலிக்கும்வரை இந்தக் கேள்வி தவிர்க்க முடியாதது.இந்தக் கேள்வியை ஒருவன் ஒருவன் கேட்க ஆரம்பித்து அவன் தேட ஆரம்பித்தால் கடவுளின் காதல் அவனுள் கசிய ஆரம்பித்துவி்ட்டது என்பதுதான் அர்த்தம்.
காதலிப்போமா?

(இந்துமகேஷ் எழுதிய "காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி..."கட்டுரைத் தொடரிலிருந்து!
பிரசுரம்: வெற்றிமணி புரட்டாதி 2002)

Wednesday, April 05, 2006

ஒரு மிருகம் + ஒரு தெய்வம் = ஒரு மனிதன்

-இந்துமகேஷ்



எங்கும் சிரிப்பொலி கேட்கிறது!
இது மகிழ்வில் விளைந்த சிரிப்பல்ல.
மற்றவர்களைப் பரிகசித்துச் சிரிக்கிற சிரிப்பு.
பத்திரிகைகளில் வானொலிகளில் இணையத் தளங்களில் எங்கும் இந்தச் சிரிப்பொலி கேட்கிறது.

பரிகாசச் சிரிப்பு என்றா சொன்னேன்? இல்லை இது பகுத்தறிவுச் சிரிப்பு என்கிறார்கள் அவர்கள்.
விரதம் இருப்பவர்களை நோன்பு இருப்பவர்களை பட்டினி கிடப்பவர்களைப் பார்த்து அவர்கள் பரிகசிக்கிறார்கள்.

"உங்கள் கடவுள் இதைச் சொன்னாரா?" என்று கிண்டலாகக் கேட்கிறார்கள்.
"உடலை வருத்தாவிட்டால் உங்கள் கடவுள் அருள் செய்யமாட்டாரா?" என்கிறார்கள்.
கூலிவேலை செய்தாவது உடலை வருத்தி உழைக்காமல் கூழோகஞ்சியோ குடிக்க முடிகிறதா நம்மால்.
கேவலம் வயிற்றுப்பாட்டுக்கே இந்தப் பாடுபடுகிறோமென்றால் வாழ்வில் கரை சேர்வதற்கு இயன்றளவு உடலை வருத்தவேண்டாமா நாம்?

சும்மா உட்கார்ந்திருந்தால் சுகம் வருமா என்ன?

உடல் உறுதி பெற்றால்தான் மனம் உறுதி பெறும்.
மனம் உறுதி பெற்றால்தான் எண்ணங்கள் உறுதி பெறும்.
எண்ணங்கள் உறுதி பெற்றால்தான் செயல் உறுதிபெறும்.
செயல் உறுதிபெற்றால்தான் வாழ்வு உறுதிபெறும்.
வாழ்வு உறுதிபெற்றால்தான் ஆன்மா உறுதிபெறும்.
ஆன்மா உறுதிபெற்றால்தான் உலகம் பயன்பெறும்.

நமக்கும் மேலான ஒரு சக்தி நம்மைப் படைத்துக் காத்து அழித்து அருள்கின்ற ஒரு சக்தி- இயற்கை என்று பகுத்தறிவுவாதிகள் சொன்னாலும் இந்த இயற்கையைக் கட்டியாளுகிற சக்தி- அதன் பெயரே கடவுள்.
சக்தியும் சிவமுமாய் இரண்டறக் கலந்து ஓருருவாய் எமையாளும் சிவசக்தி.
அந்த ஆதிமூலத்தைக் கண்டறிதல் என்பது அத்தனை இலகுவானதல்ல.

விரதங்கள் நோன்புகள் என்றபெயரில் தம்மை வருத்திக்கொள்பவர்கள் எல்லாம் தத்தம் உடல்களை உறுதி செய்துகொள்கிறார்கள். அலையும் மனதை ஒருநிலைப்படுத்தி ஆன்மாவை அறிந்துகொள்கிறார்கள். ஆன்மாவை அறிந்தபின் அதில் இரண்டறக் கலந்திருக்கும் இறைவனைக் கண்டுகொள்கிறார்கள்.

பரிகசித்துச் சிரித்துக்கொண்டிருப்பவர்கள் சிரித்துக் கொண்டிருக்கட்டும். தத்தம் அறியாமையை மற்றவர்களது மூடநம்பிக்கைகள் என்று நம்பிக்கொண்டிருப்பவர்கள் அவர்கள்.
ஒரு காரியத்தைச் செய்துகொண்டு அதிலுள்ள தவறுகளைக் கண்டுபிடித்து நிவர்த்திசெய்துகொள்வதென்பது வேறு. எட்டநின்றுகொண்டே குற்றம் கண்டுபிடித்துக்கொண்டிருப்பது என்பது வேறு.
முன்னதால் காரியங்கள் முழுமை பெறும். பின்னதால் எல்லாமே குழப்பத்தில் போய் முடியும்.

வழிபாடு என்பது இயற்கைக்கு அல்லது இறைவனுக்கு நன்றி சொல்வதற்காக உருவான கூட்டு முயற்சி. காலத்தினதும் சூழலினதும் நிலைக்கேற்ப அவைகளில் மாற்றங்கள் உருவானதேயன்றி அடிப்படையில் மார்க்கம் என்பது ஒன்றுதான்.

தனக்காகப் பிற உயிர்களைப் பலிகொள்ளாமல் பிற உயிர்களுக்காகத் தன்னைத்தானே வருத்துதல் என்பது பேரன்பின் வெளிப்பாடு.
இந்தப் பேரன்பே இறைவனோடு தன்னை ஐக்கியப்படுத்தும் என்ற நம்பிக்கையின் பிரதிபலிப்புத்தானே இந்த விரதங்கள் நோன்புகள்.
இது ஏன், அது ஏன் என்று விளக்கம் கேட்டுக்கொண்டு அந்த விளக்கத்தில் தமக்குத் திருப்தி வந்தால்மட்டுமே அதை ஏற்றுக்கொள்வோம் என்பவர்கள் இந்த உலகத்தில் ஒரு அர்த்தமற்ற வாழ்க்கையை முடித்துவிட்டுப் போகப் போகிறவர்களேயன்றி அவர்களால் அவர்களுக்குப் பயன் விளையப் போவதில்லை.
"என் செல்வமே!" என்று வாரியணைத்துத் மகிழும் தாயிடம், "அம்மா நான் எங்கிருந்து வந்தேன்?" என்று குழந்தைகேட்பது நியாயமான கேள்விதான்.
என் வயிற்றுக்குள்ளிருந்து வந்தாயடா..பத்துமாதம் நான் உன்னைச்சுமந்தேன்!" என்று அவள் சொல்வதும் சரிதான். குழந்தை அம்மாவின் வயிற்றின்மீது தலைசாய்த்து அவளைக்கட்டிக்கொண்டு சிரித்தால் அது அவளுக்கும் ஆனந்தம் குழந்தைக்கும் ஆனந்தம். ஆனால்.. இதற்கு மாறாக
"உன் வயிற்றுக்குள்ளா நான் இருந்தேன்..? இந்தச் சின்னவயிற்றுக்குள்ளா? என்னால் நம்பமுடியவில்லையே.. எங்கே என்னை அதற்குள் இருத்திக்காட்டு அப்போதுதூன் நான் நம்புவேன்!" என்று வம்பு பண்ணிக்கொண்டு தாயை உதறிவிட்டு வரும் பிள்ளையை என்ன செய்வது?

இன்னும் சிரிப்பொலி கேட்கிறது.
இனியும் அதுகேட்கும்.
ஏனெனில் மனிதன் தனது அறியாமையிலிருந்து மீள்வது அத்தனை சுலபமல்ல. தனது அறியாமை நீங்கும்வரை அவன் மற்றவர்களைப் பரிகசிப்பதும் ஓய்ந்துவிடப்போவதில்லை.

திருவிழாக்கள் அடிக்கடி நடக்கின்றன.
விலங்கு வாகனத்தில் ஏறிவந்து அசுரர்களை அழிக்கின்ற தெய்வங்கள் வெளியே வந்து வேடிக்கை காட்டுகின்றன.

"இதெல்லாம் என்ன அர்த்தமற்ற கூத்துக்கள்?"
-திருவிழாவோடு கூடவே கேள்விகளும் வருகின்றன.
பகுத்தறிவுகள் கேள்விகளோடு வந்து வரிசையாக நிற்கின்றன.
மனிதன் எப்போது வந்தான்? எங்கிருந்து வந்தான்? எங்கே போய்க்கொண்டிருக்கிறான்?? இன்னும்தான் தெளிவான பதில் இல்லை.
ஆனால் இந்த உடல் ஒரு விலங்கை எப்போதும் அடையாளப்படுத்தி நிற்கிறது.
"ஏய் குரங்கு! ஒரு இடத்திலை ஒழுங்காய் இரு!"
-சின்னவயதில் அம்மா அப்பாவிடம் இப்படி ஏச்சு வாங்காத எவராவது உண்டா?
கிருஷ்ணருக்கு மாடுகளும் கிறிஸ்துவுக்கு மந்தைகளும் என்று எங்கேயும் மக்கள் மாக்களாகத்தானே வர்ணிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மக்களுக்கும் மாக்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால்
கால் (ா)தான்.
விலங்குகளுக்கு கால்கள் நான்கு. மனிதனுக்கு இரண்டு.
நான்கு கால்களில் நடந்த மனிதன் எப்போது நிமிர்ந்தான்?
அவன் தனக்குள் இருக்கும் தெய்வத்தைக் கண்டபோது!

உடல் என்னும் விலங்கில் தெய்வம் என்னும் ஆன்மாவைச் சுமந்துகொண்டு மனிதன் என்ற பெயரில் உலாவருகிறான் அவன்.
ஆனால் தன்னை வெறும் உடலாகவே கருதும் மனிதன் தன்னுள்ளிருக்கும் தெய்வத்தை உணர்வதில்லை.
தன் உடலை தானாக எண்ணுபவனுக்கே நான் எனும் ஆணவம் மிகுந்து நிற்கும்.

"நான்தான் நான்!" என்பான் அவன். அவனது விலங்குடலே அவன் என்பது அவனது முடிவு.
தன்னுள்ளிருக்கும் தெய்வத்தை அவன் அறிவதில்லை.
பலிகொள்ளுதல் பாவம் என்னும் மனிதன் தனது பகையறுக்கத் தன்னினத்தையே பலிகொள்ளத் தயங்குவதில்லை.
(இதுவே அவனது கடவுள் பற்றிய அறியாமைக்கு முதற்சாட்சி)

தன்னுள் இருக்கும் தெய்வத்தைத் தன்னால் அறிய முடியாதபோது அவன் விலங்காகவே வாழ்ந்து முடிக்கிறான்.
அறிந்துகொண்டவனோ தன் உடலைத் தான் ஏறிவரும் வாகனமாகவே எண்ணுவான்.
உடலின் விளைவான காமமுதலாகிய உணர்வுகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் பிரயத்தனப்படுகிறான்.

முதலில் தன்னுள் இருக்கும் தீய உணர்வுகள் என்னும் அசுரர்களை வேட்டையாடுகிறான். அதன்பிறகு தெய்வநிலைக்கு எதிரான மாயைகளை அவன் வேட்டையாடியாக வேண்டியிருக்கிறது.
இந்த வேட்டைத் திருவிழாவில் அவனுள் இருக்கும் தெய்வம் வெற்றி பெற்றால் அவன் தெய்வமாகவே மாறிவிடுகிறான்.
கொடிய மிருகமாக அலையும் அவனத உடலும்கூட அவனதுதெய்வீக நிலைக்கு முன்னால் சாதுவாக அடங்கிக் கிடக்கிறது.
நானே தெய்வம் என்ற உண்மை தெரிந்தபின்னால் உடல் என்னும் வாகனம் ஏறிவந்தவன் அதை எறிந்துவிட்டு தெய்வமாகவே ஆகிவிடுகிறான்.
மனித தெய்வங்கள் வாழும் நெறியைக்காட்டிவிட்டு மறைந்துவிடுகின்றன. மனிதவிலங்குகளோ தம்மைத்தாம் அறியாமல் மற்றவர்களை வதைசெய்து கொண்டிருக்கின்றன.

(சிவத்தமிழ் ஆன்மீகக் காலாண்டிதழ் 2005ல் வெளியானது)

Monday, April 03, 2006

என்னுள்ளே நீ...

தேனினைத்தேடி அலையும் வண்டாய்
தெய்வம் தேடி ஓடும்என் னுள்ளம்
வானினைத் தேடி மறைந்தவர் பலரும்
வந்துளம் தனிலே தெய்வமாய்ப் புகுந்தார்.
வாழும் வரைதம் வார்த்தைக ளாலே
வழிபல சொன்னவர், மறைந்த பின்னாலே
ஆளும் அவர்தம் ஆன்மிகத் தேடல்
அதன் பின்னாலே என்மனம் ஓடும்.
-இந்துமகேஷ்.


------------------------------------------------------
"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை !"
-ஒரு திரைப்படப்பாடலில் கவியரசு கண்ணதாசன் சொன்னது.
அண்மையில் அவரது கவிதைத் தொகுதியொன்றில்
என் பார்வை பதிந்தபோது -
அவர் என்னிடம் சொன்னார்:


கடவுளை நம்பினால்
கவிஞன் ஆகலாம்.







கடவுளை நம்புக! கடவுளைப் பற்றிய
கவிதைக ளெல்லாம் கற்றுத் தேறுக!
நடமிடும் தெய்வம் இராமனின் காதை
நற்பா ரதத்து நெறிகள் யாவும்
ஆய்ந்து படித்து அறிக பொருள்களை!

சாத்திரம் வேதம் தர்மம் தத்துவம்
தமிழன் முருகன் தனைப்புகழ் புராணம்
அனைத்தும் அறிக! அறிந்த பின்னாலே
எடு பேனாவை! எழுதுக கவிதை!
ஊற்றுக் கேணியின் உட்புறம் சுரக்கும்
ஆற்றுச் சுவைநீர் ஆமதன் பெருக்கம்!

நாத்திகக் கூடு நரிக்கு மட்டுமே!
நாலா புறமும் நற்கரம் விரித்து
மேலும் கீழும் விண்ணையும் மண்ணையும்
ஆழ அளந்து அள்ளித் தெளித்து
ஜனனம் பற்றிய தத்துவம் எழுதுக!
மரணம் பற்றிய மயக்கம் எழுதுக!
நீண்ட இழைகளில் நெய்யும் சேலைபோல்
ஆண்டவ தத்துவம் ஆயிரம் எழுதலாம்!

கடவுள் என்பது கல்லே யானால்
மனிதன் என்பவன் மரமே யாவான்!
மரத்தின் பேனா மைசுரக் காது!
மானிடம், தெய்வதம் வடித்த பொன்னிழை
பலபொருள் தேடுக! பலவகை பாடுக!
பகுத்தறி வென்பது பகுத்துப் பகுத்து
முடிவில் காண்பது மூலப் பொருளையே!

செத்தபின் உயிர்கள் சேர்வது எங்கே?
தெரியும்வரை நீ தெய்வத்தை நம்பு!
நம்பிக்கை தான் நற்பொருள் வளர்க்கும்
நம்பு கடவுளை நல்ல கவிஞன் நீ!
பல்பொருள் அறிந்த பாவலர் சில்லோர்
சில்பொருள் மட்டுமே தேறிய தெதனால்?
அளவிற் கவிதை அதிகமா காமல்
குறைவே யான குறைபா டெதனால்?
நாத்திகச் சிறையை நம்பிக் கிடந்ததால்!
ஆகவே எனது அருமைத் தோழனே
கடவுளை நம்புக! கவிஞன் நீயே!

(நன்றி: கண்ணதாசன் கவிதைகள் 6வது தொகுதி)

தரிசனம்

நிலையாத வாழ்விலே
நிலையான தேதென்று
நிதம்தேடி நான் அலைந்தேன்!
நீயின்றி வேறேதும்
நிலையில்லை எனக்கண்டு
நிம்மதி நானடைந்தேன்

அலைபாயும் மனமிங்கு
ஆமையாய்த் தன்தலை
அதனுள்ளே புதைத்தவேளை
அங்கு நீ நானாக
நானெனில் நீயாக
அமைந்ததோர் உண்மைகண்டேன்.

-இந்துமகேஷ்

Total Pageviews