Monday, January 29, 2007
தனிமையிலே இனிமை.
-இந்துமகேஷ்.
ஒரு வெட்ட வெளிக்குள் வந்தாயிற்று.
சுற்றிலும் யாருமற்ற தனிமையில்...
தொடுவானமும் நிலமும் மட்டுமே கண்களுக்கு எட்டுகிற வகையில்
தனியாய் நின்று யாருக்காகவோ எதற்காகவோ காத்துக்கிடக்கிறது மனது.
எங்கே எல்லோரும்?
அவரவர்கள் அவரவர்பாட்டில்!
தான் தன் சுகம் என்ற கணக்கெடுப்பில் மற்றவரைச் சாராமல்
தனித்துத் தனித்து..
எங்கோ ஒரு தனிமையில்.
என்னைப்போலத்தானோ?
பிள்ளையாய் சகோதரனாய் நண்பனாய் காதலனாய் கணவனாய் தந்தையாய் சிற்றப்பனாய் பெரியப்பனாய் மாமனாய் பேரனாய் இன்னும் இன்னும் என்று வளர்ந்து கரைத்துவிட்ட உறவுகளில் மிஞ்சிக்கிடப்பது இப்போது என்ன?
முதுமைக்கு அருகில் மிக அருகில் நெருங்கிவரும்போது
எல்லோர் மனத்தையும் கவ்விக்கொள்கிற தனிமை..
இப்போது என்னிலும்.
பாழும் மனது! பாசம் பாசம் என்று பற்றிக்கொண்டு தவித்த தவிப்புக்கள் இன்னும் முற்றிலுமாய் அழிந்து போகாமல் வாசம் போகாத பெருங்காயச்சட்டியாய் இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கும் பாசத்தின் வாசத்தோடும் பரிதவிப்போடும்!
இன்னும் என்ன இருக்கிறது?
வாழ்வுக்கான தேடலில் மீண்டும் தலைசாய்க்க முயலும் மனத்தை ஒரு தட்டுத்தட்டி சும்மா கிட என்று அதட்டிவிட்டு மீண்டும் தனிமைக்குள் நுழைந்தாயிற்று.
வேண்டாம் எதுவும் வேண்டாம்
நிலையில்லாத இந்த உலகத்தில் எதுவுமே நிம்மதியைத் தரப்போவதில்லை இது நாள் வரையில் சந்தோசம் என்று தேடித்தேடி அடைந்ததெல்லாம் வெறும் மாயையின் வடிவங்களே, இதனால் எந்தப் பயனும் இல்லை.
எல்லாம் தெரிந்தவன் என்றும் விலங்கினும் மேலானவன் என்றும் விரிந்த தன் அறிவினால் விண்ணையே கட்டி ஆள்பவன் என்றும் தன்னைத்தான் விதந்துரைத்த மனிதன் தன் வாழ் நாளில் எட்டியது என்ன?
வெறுமை வெறுமை வெறுமை!
"வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது!"
நிகழ்காலத்தில் என் அருகிருந்து பாடிய கவிஞனும் அந்தவழியே போய் மறைந்தான்.
இருக்கின்ற நானும் இன்னும் சில பொழுதுகளில்..
போவது எங்கே என்று புரியாத இடத்துக்கான ஒரு பயணமா இந்த வாழ்க்கை?
அப்படி ஒரு அர்த்தமில்லாத வாழ்வுக்கா இத்தனை ஆண்டுகள் இந்த உயிர் உடலோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது?
கேள்வியில் தடுக்குகிறது மனது.
எங்கேயோ எதுவோ இடிக்கிறதே! என்ன அது?
"தனியாக வந்தாய் தனியாகப் போய்விடப்போகிறாய்!" என்று தனியாக நிற்கையில் உணர்த்தும் மனது இந்தத் தனிமை தனிமையில்லை என்று ஏன் உணர்த்தவில்லை இத்தனை நாளாய்?
உண்மையில் ஒருபோதும் நீ தனியாக இருந்ததில்லை
உன்னுள் இருந்து உன்னை வழி நடத்தும் இறைவனை நீ உணராதவரையில்தான் நீ தனியனானேன் என்று தவித்துக்கொண்டிருப்பாய்.
அவனை நீ அறிந்துகொண்டபின்போ நீ இழந்தது எதுவுமே இல்லை என்று புரிந்துகொண்டுவிடுவாய்.
பிறகு உனக்கேது தனிமை.
உன்னுள் வாழும் இறைவன் இந்த உலகத்துக்கு உன்னை அனுப்பி வைத்திருக்கிறான் என்றால் அதற்கும் ஏதாவது அர்த்தம் இருக்கும்.
அவனைத் தெரிந்துகொண்டால் அதன் அர்த்தமும் உனக்குப் புரிந்துவிடும்.
நீ ஒருபோதும் தனியனல்ல என்று உணர்ந்துகொள்ளும்போது
உன்னுள்ளிருக்கும் அவன் தன்னை உனக்குக் காட்டுவான்.
அவனைக் கண்டுகொண்டபின்போ இந்த உலகமே உனக்காகக் காத்திருக்கிறது என்ற உண்மை உனக்குப் புரிந்துவிடும்."
-என்னுள் எழும் அந்த அசரீரியில் என் தனிமையைத் தொலைக்கிறேன்.
இந்த உலகம் எனக்காகக் காத்திருப்பது புரிகிறது-
/பிரசுரம்:சிவத்தமிழ்-ஜெர்மனி ஆடி 2006)
Subscribe to:
Posts (Atom)