-இந்துமகேஷ்
„உருவாய் அருவாய் உளதாய் இலதாய்...!“
- வாரியார் சுவாமிகளின் தெய்வீகக் குரல் என்னருகில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஒலித்தட்டிலிருந்து வெளிப்படும் அந்தக் குரல் அறையெங்கும் வியாபித்து என் மனச்சிறைக்குள்ளும் புகுந்துகொள்கிறது.
அதிகாலைகளிலும் இரவுத் துயிலுக்கு முன்பாகவும் என்னருகில் ஒலித்துக் கொண்டிருக்கும் தேவகானக் குரல்களுக்குச் சொந்தக்காரர்கள் சிலரில் சீர்காழி கோவிந்தராஜன், கே.பி.சுந்தராம்பாள், பெங்களுர் ரமணியம்மாள், திருமுருக கிருபானந்தவாரியார் ... இன்னோரன்ன இசைத்தென்றல்கள் இப்போது இந்த உலகத்தில் இல்லையாம் எல்லோரும் மரணித்துப் போய்விட்டார்களாம். சொல்கிறார்கள்.
மெய்தானா? இந்த உலகத்தில் இல்லாதவர்கள் எப்படி எப்போதும் என்னருகிலேயே இருக்கிறார்கள்.?
இது விஞ்ஞானத்தின் வளர்ச்சி என்கிறார்கள் நாத்திகவாதிகள். இறந்தவர்கள் இறந்ததுதான். அவர்கள் இப்போது இந்த உலகத்தில் இல்லை. இனிமேலும் இருக்கப் போவதில்லை என்று அவர்கள் வாதிடுகிறார்கள்.
மரணம் என்பது இந்த உடல்களின் மறைவைமட்டும்தானே குறிக்கிறது? ஆன்மாக்களை அல்லவே! அவர்கள் தம் உடல்களோடு காட்சி தரவில்லை என்பதனால் அவர்கள் இல்லை என்று ஆகிவிடுமா? எடுத்துவந்த உடல்களுக்கான காரண காரியங்களை நிறைவு செய்துவிட்டு அவர்கள் திரும்பிப் போயிருக்கிறார்கள். ஒருவேளை இந்த உலகத்தில் இன்னோர் வடிவத்தில் அவர்கள் நடமாடிக் கொண்டிருக்கவும் கூடும்.
பிறப்பும் மரணமும் எப்போதாவது ஒருநாளில் ஒவ்வொருவருக்கும் சம்பவிக்கிறது என்று எல்லோரும் தப்புக்கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஓவ்வொரு உடலும் தினம் தினம் பிறந்து தினம் தினம் மரணித்துப் போகும் உண்மை பெரும்பாலானவர்களுக்குப் புரிவதே இல்லை.
“நேற்றிருந்தார் இன்றில்லை என்னும் நிலையாமை உடைத்து இவ்வையம்!” என்று ஆன்றோர் சொன்னது உடல்களின் மரணத்தை.
குழந்தையாய் என் தாயின் கைகளில் தவழ்ந்த நான் இன்று கிழவனாய் என் பேரக் குழந்தைகளைக் கைகளில் ஏந்திக்கொண்டிருக்கிறேன். என்னுள்ளிருந்த குழந்தையைத் தாங்கிக் கொண்டிருந்த என்னுடைய தாத்தாவைமட்டுமல்ல என்னுள்ளிருந்த அந்தக் குழந்தையையும் இப்போது காணோமே!மரணித்தப் போனது என் தாத்தாமட்டுமல்ல என்னுடலில் குழந்தையாக இருந்த நானும்தான். குழந்தையான நான்மட்டுமா? சிறுவனாக இருந்த நான், இளைஞனாக இருந்த நான், நடுத்தரவயதுக்காரனாக இருந்த நான்…எங்கே போனேன்.?
இருக்கிறேன். ஆனால் இல்லை!
இல்லை என்பதனால் நான் இல்லாமல் போவதும் இல்லை. இப்போது முதுமையை அனுபவித்துப் பார்க்கும் நான் முற்றிலுமாய் மறையும் கணத்தில் இந்த உலகம் சொல்லும் அவன் இல்லை என்று.ஆனால் அப்போது யாராவது சிவத்தமிழில் இந்தக் கட்டுரையை வாசிக்க நேர்ந்தால் அந்தக் கணத்தில் அவர்கள் உணரக்கூடும்- நான் அவர்கள் அருகிலேயே இருக்கிறேன் என்பது!
ஒவ்வொரு உயிரும் இயற்கையின் அங்கம் என்றானபோது இந்த இயற்கை உள்ளவரை ஓவ்வொரு உயிரும் நிலைத்திருக்கும் என்பதுதானே உண்மை. இயற்கைக்கு நிரந்தர அழிவென்பது ஒருபோதும் இருக்கப் போவதில்லை. ஆகவே அதன் அங்கமான உயிர்களுக்கும் அழிவில்லை.
உயிhகள் நிரந்தரமானவை எனும்போது அதைப் படைத்த இறைவனும் நிரந்தமானவனே. இருக்கிறான் என்றாலும் இல்லை என்றாலும் அவன் நிரந்தரமானவன் என்பதில்சந்தேகத்துக்கு இடமில்லை.
வாரியார் சுவாமிகள் என் அறைக்குள் திரும்பவும் பாடிக் கொண்டிருக்கிறார்:
„உருவாய் அருவாய் உளதாய் இலதாய்...
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!”