Monday, May 09, 2011

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்...

-இந்துமகேஷ்


„நேற்றிரவு என்ரை அம்மா என்ரை கனவிலை வந்தா மச்சான்!“ என்றான் என் நண்பர்களில் ஒருவன்.
அதைச் சொன்னபோது அவனது குரல் தழுதழுத்தது கண்கள் கலங்கின.

„அம்மாவைக் கண்டால் சந்தோசம்தானை? அதுக்கு ஏன் கவலைப்படுகிறை?“

„அவவைப் பார்க்கவே முடியேல்லை மச்சான். நல்லா மெலிஞ்சு.. எலும்பும் தோலுமாய்...என்ரை விட்டு வாசலிலை வந்து நின்று அழுதுகொண்டிருந்தா. பசிக்குதடா.. எனக்கு ஏதாவது தா எண்டு...!“

-சொல்லி முடிக்குமன்பே அவன் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்துவிட்டான்.

அவனது தோள்களை ஆதரவாகத் தடவினேன்.

„அவ உயிரோடை இருந்தபோது அவவை நீ வடிவாக் கவனிக்கேல்லை... அதுதான் கனவாக வந்து உன்னைப் பார்த்திருக்கிறா!“

„நான் வேணுமெண்டா அவவைக் கவனிக்காமல் விட்டன்? என்ரை நிலைமை அப்படியாப் போச்சுது!“

„சரிதான் மச்சான். அவ உயிரோடை இருந்தபோதுதான் அவவைக் கவனிக்க உன்னாலை முடியேல்லை. அவ இறந்தபிறகாவது நீ அவவைக் கவனிச்சிருக்கலாம்தானை?“
- அவன் கேள்விக்குறியோடு என்னைப் பார்த்தான்.

„இறந்தபிறகு கவனிக்கிறதா.. என்ன சொல்கிறை?”

“அவவின்ரை நினைவாக நீ என்னவாவது செய்திருக்கிறையா?”

“என்ன செய்கிறது? செத்தவ செத்ததுதானை? நாம இனி என்ன செய்தாலும் அது அவவுக்குக் கிடைக்கவா போகுது?”

-இவனைப்போலத்தான் நம்மில் பலர்.
நம்மோடு வாழ்ந்து நம்மில் கலந்தவர்கள் நம்மை விட்டு உடலால் பிரிந்ததும் அவருக்கும் நமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஓரங்கட்டி விடுகிறோம்.
முன்னோர் வகுத்து வைத்த சடங்குகள் சம்பிரதாயங்களை உதாசீனம் செய்து நம்மைப் பெரிய அறிவாளிகளாக சமூக சீர்திருத்தவாதிகளாகக் காட்டிக் கொள்ளமுயல்கிறோம்.

கனவுபோலக் கலைந்துகொண்டிருக்கிறது காலம்.
நேற்று இன்று நாளை என்பவற்றைத் தாண்டி முக்காலமும் நிகழ்காலத்துக்குள் தேங்கி நிற்கிறது.

எனக்கு முன்னாலும் என்னோடும் எனக்குப் பின்னும் என்று இந்த உலகத்துக்கு உருவமெடுத்து வந்தவர்கள் எவரும் என்னைவிட்டுப் பிரியவில்லை.
என்னில் உறவுகளாய் என்னில் உணர்வுகளாய் என்னில் நினைவுகளாய் எல்லோரும் என்னில் கலந்து என்னுள் ஐக்கியமாகி நிற்கிறார்கள்.

என்னைப்போலவே எல்லாரும்.
தத்தம்மை தனியனாய்க் காட்டிக்கொண்டாலும் ஒவ்வொருவரும் பலரைத் தம்முள் ஐக்கியமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் இன்பங்களையும துன்பங்களையும் தமதாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அதனால்தான் ஒவ்வொருவராலும் மற்றவர் மகிழ்வில் மகிழவும் மற்றவர் துயரில் துடிக்கவும் முடிகிறது.

இரண்டு ஒன்றாவது பிறப்பு.
ஒன்று பலவாவது வாழ்வு.
பலதும் ஒன்றாவது மரணம்.

மரணம் என்பது இந்த உடல் மண்ணாவது.மண்ணிலிருந்து உடலை எடுத்து மண்ணைத்தின்று உடலை வளர்த்து மீண்டும் மண்ணுக்கே தந்துவிட்டு மறைந்து நின்று வேடிக்கை பார்க்கிறது உயிர்.

இந்த உலகவாழ்க்கை என்பது பிறப்பில் தொடங்கி மரணத்தில் முடிந்துபோவதாகத் தோற்றம் காட்டினாலும் இது உயிர்களின் தொடர் விளையாட்டு என்பதே உண்மை.
நமக்குமுன்னால் வந்தவர்கள் நம் கைகளில் வாழ்க்கையைத் தந்துவிட்டு மறைந்து கொண்டிருக்கிறார்கள். நாம் விளையாடிக் கொண்டிருக்கிறோம்.
நமக்குப் பின்னால் வருபவர்களிடம் இதைக் கையளித்துவிட்டு நாம் ஒளிந்துகொள்ளப் போகிறோம்.
அவர்கள் தமக்குப் பின்னால் வரப்போகிறவர்களை எதிர்பார்த்து விளையாடிக்கொண்டிருப்பார்கள்.

இந்தத் தொடர்விளையாட்டின் முடிவு என்பதை முக்தி என்கிறார்கள் வாழ்க்கைத் தத்துவத்தை வரைந்தவர்கள்.

அதை எட்டுவதென்பது அத்தனை சுலபமான காரியம் அல்ல.

நமது வாழ்க்கை விளையாட்டில் பாவ புண்ணியங்கள் என்றும் கர்மவினை என்றும் நாம் சேர்த்துக்கொண்டவைகள் நமது தொடர்விளையாட்டில் நாம் சேர்த்துக் கொள்ளும் புள்ளிகள்.
இந்தப் புள்ளிகளுக்கேற்ப நமது வாழ்க்கை விளையாட்டின் வெற்றிதோல்விகளைத் தீர்மானிக்கும் பொறுப்பை இறைவன் தன் கையில் வைத்திருக்கிறான்.

இதுபற்றித் தெளிந்த ஞானம் உடையவனுக்கு முக்தி வாய்க்கிறது.
அந்தத் தெளிவை அடையும் வரை நாமும் விளையாடிக்கொண்டிருப்போம்.

உருவமாகவும் அருவமாகவும் தொடரும் இந்த விளையாட்டில் நம்மோடு ஐக்கியமாகிக் கொண்டிருப்பவர்களுக்கும் அதிக பங்கிருக்கிறது.
உடலெடுத்த நம்மோடு ஏதோ ஒருவகையில் உறவுகொண்டவர்கள் எல்லோரும்
உடல் நீங்கியபின்னும் நம்மில் ஒன்றுபட்டிருக்கிறார்கள்.

நமக்கு விருப்பமான அல்லது நாம் பற்றுவைத்த எல்லாவற்றினோடும் யாராவது ஒருவரோ அல்லது பலரோ கலந்தே இருக்கிறார்கள். குறிப்பிட்ட அந்தப் பொருளுக்கு அல்லது உணர்வுக்கு மூலகாரணமான அவர்களும் கூடவே வருகிறார்கள்.

என்னைப் பெற்றவர்கள், நான் பெற்ற முதற்குழந்தை, என் உடன் பிறந்த மூத்தவர்,
உடன்பிறவா சகோதரங்கள் என் மைத்துனர்கள் என்று தொடரும் இரத்த உறவுகள் முதல், தூரத்து உறவுகள், பள்ளித் தோழர்கள், நண்பர்கள், பழகியவர்கள், அறிமுகம் இல்லாத ஆனால் நான் நேசித்த கலைஞர்கள், பொதுப்பணியாளர்கள் என்று என்காலத்தில் வாழ்ந்து இன்று நான் உடலால் பிரிந்தவர்கள் பலரும் இப்போதும் என்னுடன் தான் இருக்கிறார்கள்.
நான் உருவாயும் அவர்கள் அருவாயும்.


உளதாய் நான் உணரும் அவர்களை இல்லாதவர்களாய் நீங்கள் எண்ணக் கூடும்.
ஆனாலும் உங்களோடு வாழ்ந்திருந்து இன்று உடலால் உங்களைப் பிரிந்தவர்களை எண்ணிப் பாருங்கள் அவர்கள் அருவாய் உங்களில் வாழ்ந்திருப்பதை உணரலாம்.
அவர்களை நீங்கள் பிரிந்திருக்கவில்லை என்பதை உங்களால் உணரக்கூடுமாயின் இறைவனை நீங்கள் உணர்தலும் எளிது.

பிறிதொருநாள்
என் நண்பனைக் கண்டபோது அவன் என் கைகளைப் பற்றித் தன் கண்களில் ஒற்றிக்கொண்டான்:
“என்னடா?” என்றேன்.
“என்ரை அம்மாவை நான் திரும்பவும் கனவிலை கண்டன் மச்சான்! நல்ல சந்தோசமா இருக்கிறா! போன கிழமை அவவின்ரை திதி வந்துது மச்சான்... ஊரிலை கஸ்டப்படுகிற பிள்ளையளுக்கு அன்னதானம் செய்யிறதுக்கு ஏற்பாடு செய்திருந்தன். மனசுக்குக் கொஞ்சம் நிம்மதியா இருக்கு!”









ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர்- வேண்டா
நமக்கும் அதுவழியே நாம்போமளவும்
எமக்கென்னென் றிட்டுண்டு இரும்.

-ஒளவையார்.


(பிரசுரம்: சிவத்தமிழ் காலாண்டிதழ் 2011)

Total Pageviews