Wednesday, December 12, 2012

கடைசிக் காலம்


கடைசிக் காலம்-




இந்துமகேஷ்.




.“கடவுள் பூமியைப் படைத்தார்!“
-இறைநம்பிக்கையாளர்களின் கருத்து அது.

„கடவுள் பூமியைப் படைத்தார் என்றால் அந்தக் கடவுளைப் படைத்தது யார்?“
-இறைமறுப்பாளர்கள் எழுப்பும் கேள்வி இது.

„இந்த உலகத்தைப் படைத்தவன், இந்த உலகத்தில் வாழும் உயிர்களுக்கெல்லாம் மூலமானவன் ஏன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை? எவருக்கும் புலனாகாமல்  அவன் மறைந்திருப்பானேன்?“

-கேள்விகள் காலகாலமாகத் தொடர்கின்றன.
ஆனால், „கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்“ என்பதுதானே யதார்த்தம்.

தத்தம் இதயக்கதவுகளைத் திறந்து வைத்துக்கொண்டு இறைவனின் வருகைக்காக நம்பிக்கையோடு காத்திருப்பவர்கள்; அவனைக் கண்டுகொள்கிறார்கள் என்பதே 
ஆன்மீகவாதிகளின் சித்தாந்த முடிவு.
ஆனால் அது எப்போது?
காலம் கனியவேண்டாமா?
ஆனால் அதுவே கடைசிக் காலமாகவும் கணிக்கப்படுகிறது.

உயிரோடு இருப்பவர்கள் அல்ல. மரித்தபின்னரே அவர்கள் இறைவன் பாதம் அடைந்து விட்டார்கள் என்று கருதப்படுகிறார்கள்.

உயிரோடு இருக்கும்போது- இந்த உடலோடு நடமாடும்போது- தோன்றாத இறைவன்  உடல் நீக்கியபின்தான் தோன்றுவான் எனில், அதில் நம்பிக்கை கொள்ள மறுக்கிறது மனம்.
நிச்சயமற்றதாய் நீங்கிப் போகிறது காலம்.
உலகத்துப் பற்றுக்களோடு போராடிப் போராடி ஓய்ந்து போகிறது மனமும் உடலும்.

வாழ்வின் நிலையாமை குறித்த கேள்விகளுக்குப் பின்னால் நின்று சிரிக்கிறான் இறைவன்.
நம்மோடு வாழ்ந்து முடித்தவர்கள் எவரும் தத்தம் கடைசிக்காலத்தில் கடவுளைக் காட்டிப் போவதாகத் தெரியவில்லை.
இன்னும் இன்னும் கேள்விகளையே எச்சங்களாகக் கொட்டிப் போயிருக்கிறார்கள்.

நிகழ்காலத்துக்கு வழிகாட்டுகிறோம் என்பவர்களும் தத்தம் சுகமே குறியாய் வைத்துக் காரியமாற்றுகிறார்கள்.

புனிதர்கள் என்று போற்றப்படும் சிலரும் ஒருசில பொழுதுகளிலேயே போலிகளாய் முகத்திரை கிழிக்கிறார்கள்.
„கடவுள் எங்கே?“
-தேடல்களில் தீவிரமானவர்கள் இன்னும் இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

கடவுள் இருக்கிறான் என்று ஒத்துக்கொள்பவர்களும்கூட அவ்வப்போது சந்தேகப் பார்வை விரிக்கிறார்கள்.
„உண்மையிலேயே கடவுளை நம்மால் காணமுடியுமா?“ என்று அவ்வப்போது அலைபாய்கிறார்கள்.
„கடவுளை எவராவது கண்ணால் கண்டதுண்டா? சொல்லுங்கள்!“ என்கிறார்கள்.

„கடவுளை வெறும் ஊனக் கண்களால் காணமுடியாது. காற்றுக்குள் உலாவரும் உனது
கண்:களால் அந்தக் காற்:றைக் காணமுடிகிறதா?“ என்றொரு விடையை வைத்தால்-
"காற்றைக் காணாவிட்டாலும் அதை உணரமுடிகிறதே. காற்றின் தொடுகையில் என் சுவாசத்தின் மூலம் அதைக் கண்டுகொள்ள முடிகிறதே. கடவுள் அப்படி எந்த உணர்தலிலும் தோன்றவில்லையே!“

இதற்கு என்ன பதில் சொல்வது?

உணர்தல்தான் கடவுள் எனலாமா?

பல்லாண்டுகளுக்கு முன்னால் விவேகானந்தன் எனும் நரேந்திரனிடத்தும் இந்தக் கேள்விகள் இருந்தன.
„கடவுளைக் கண்டவர்கள் எவராவது இருக்கிறார்களா? அப்படி எவராவது இருந்தால் அவரை நான் சந்திக்க முடியுமா?“

கேள்விகளுக்குப் பதில்தேடி அலைந்தபோதுதான் அவனுக்கு ராமகிருஷ்ணரின் சந்திப்பு நிகழ்ந்தது.
(ராமகிருஷ்ணருடன் தனக்கு நேர்ந்த ஓர் ஆன்மீக அனுபவத்தை விவேகானந்தர் தனது நூலொன்றில் விபரித்திருந்தார்.)

விவேகானந்தர் நரேந்திரனாக இருந்த 1881ம் ஆண்டின் ஒருபொழுதில்-
ராமகிருஷ்ணரைச் சந்திக்கச் சென்றிருந்தான் நரேந்திரன்.
அவனைத் தனது அறைக்குள்  அழைத்துச் சென்றார் அவர்.
பிறகு கதவைத் தாளிட்டார்.
„எனக்கு ஏதோ உபதேசம்; செய்யப் போகிறார் போலும்!“ என்று நினைத்தான் நரேந்திரன். ஆனால் அவர் சொன்னதும் செய்ததும் அவனது கற்பனைக்கும் எட்டாததாயிருந்தது. நரேந்திரன் எதிர்பாரா நிலையில் அவர் அவனது கைகளைப் பற்றிக்கொண்டார். அளவுகடந்த மகிழ்வு அவரை ஆட்கொண்டிருந்தது. அவரது கண்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தன. பின்னர் அளவற்ற பரிவுடன் முன்பே அவனை நன்கு அறிந்தவர்போல் பேசினார்.
„இவ்வளவு காலம் கழித்து வந்திருக்கிறாயே இது நியாயமா? நான் உனக்காகக்  காத்திருக்கிறேன் என்பதை ஒருமுறையாவது நினைத்துப் பார்த்தாயா?  உலக ஆசைபிடித்த மனிதர்களின் பேச்சைக் கேட்டுக்கேட்டு என் காதுகள் எரிந்துபோய்விட்டன. என் மனத்தில் பொங்கும் உள்ளுணர்வுகளைப் புரிந்துகொள்ளக்கூடிய ஒருவரிடம் சொல்ல நான் எவ்வளவு துடித்துக்கொண்டிருக்கிறேன்.!“
தேம்பித்தேம்பி  அழுதபடியே அவர் பேசிக்கொண்டிருந்தார்.
தனது இரண்டு கைகளையும் கூப்பி தெய்வத்தை வணங்குவதுபோல் அவனை வணங்கியபடி அவனைப் பார்த்து, „பிரபோ... நாராயணனின் அவதாரமாகிய மானிட வடிவே தாங்கள் என்பதை நான் அறிவேன். மனிதகுலத்தின் துயர் தீர்க்கவே இப்பொழுது அவதாரமெடுத்திருக்கிறீர்கள் என்பதையும் நான் அறிவேன்!“ என்றார்.
„கொஞ்சம் காத்திருங்கள் இதோ வருகிறேன்!“ என்றபடி அடுத்த அறைக்குள் நுழைந்தவர். திரும்பியபோது அவரது கைகளில் வெண்ணெய் கற்கண்டு இனிப்பு முதலியன இருந்தன. அவற்றைத் தனது கையால் அவனுக்கு ஊட்டத் தொடங்கினார்.
பிறகு அவனது கைகளைப் பிடித்துக்கொண்டு „கூடியவிரைவில் நீ மட்டும் தனியாக வருவதாக சத்தியம் செய்!“ என்றார். அவருடைய வேண்டுகோளை மீற முடியாமல் சரி வருகிறேன்!“ என்றான் நரேந்திரன்.

கடவுளைக் கண்டவரைக் காணச் சென்றவன், கடவுளைக் காட்டுவேன் என்று அவனுக்கு உறுதியளித்தவர், அவனையே கடவுளின் அவதாரமாகக் கருதுகிறார் என்று அறிந்தபோது திகைத்துப் போனான்.
இவருக்குப் பைத்தியமோ என்றுகூட அவன் நினைத்தான்.
ஆனால் அவரது ஏனைய செயல்களும் நடத்தையும் அவர் பைத்தியமல்ல, அவர் ஒரு ஞானி என்பதை அவனுக்கு உணர்த்தின.

தனிமனிதனின் வாழ்வின் காலம் மிகக் குறுகியது.
ஆனால் மனிதகுல வரலாறு என்பது நீண்ட ஆயுளைக் கொண்டது. இது ஆயிரக்கணக்கான அல்லது இலட்சக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருப்பது.
தனியே பிறந்து தனியே மரணித்துப் போனாலும் ஒவ்வொருவரது உயிரணுவும் இந்த மனிதகுலத்தின் எங்காவது ஓர் இடத்தில் தொடர்ந்து வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.
முதலும் முடிவும் அறியமுடியாது ஒளிந்திருக்கும் இறைவன் போல், மனித குலத்தின் முதலும் முடிவும் இன்னும் தேடலுக்குள்தான் இருக்கின்றன.

விடைதெரியும்போது மனிதன் கடவுளிலும் கடவுள் மனிதனிலும் கலந்திருப்பார்கள்

அதுவே கடைசிக் காலம் எனக் கொள்ளலாமா?
முடியாது.
ஏனெனில் கடைசிக்காலம் என்பதும் இன்னொன்றின் தொடக்க காலமாக இருக்கும்.



(பிரசுரம்: சிவத்தமிழ் -2012)
























Thursday, February 16, 2012

ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்














-இந்துமகேஷ்












"நலமாக வளமாக பேரோடும் புகழோடும் பல்லாண்டு வாழ்கவென மனதார வாழ்த்துகிறேன்! "

-அன்புக்குரியவர்களிடமிருந்து அவ்வப்போது பகிர்ந்துகொள்ளப்படும் வாழ்த்துச் செய்திகள்!


நம்மை வாழ்த்துவதில் அவர்களும் அவர்களை வாழ்த்துவதில் நாமும் மகிழ்கிறோம்.


“மனதார வாழ்த்துகிறார்!” என்கிறோம். வெறும் வார்த்தைகளாக மட்டும் இல்லாமல் உண்மையாகவே ஒருவரது உள்ளத்திலிருந்து வெளிப்படும் வாழ்த்துக்கள் வல்லமை நிறைந்தவை.

நமது வாழ்த்துக்கள் எவரைச் சென்றடைகிறதோ அவர் மகிழ்வுறும்போது நாமும் மகிழ்கிறோம். நமது அன்பு பலப்படுகிறது. நமது வாழ்வில் அக்கறைசெலுத்தவும் ஒருவர் இருக்கிறார் என்கிற தெம்புடன் வாழ்வைத் தொடர அது வழிவகுக்கிறது.


இதற்கு எதிர்மாறாக வாழ்த்துகின்ற வாய்கள் தூற்ற ஆரம்பித்தால் என்னாகும்? வாழ்க்கையின் மீதான பற்றுதலைத் தொலைத்துவிட்டு மரணத்தை நோக்கி ஓடிவிடத் தூண்டும் அது.


ஒருகாலத்தில் "வாழ்க! வாழ்க!!" என்று வாழ்த்துப் பெற்றவர்கள் பலரும் பின்னொரு நாளில் "ஒழிக!!!" என்ற தூற்றுதலுக்கு இலக்காகி உயிரிழந்துபோன நிகழ்வுகளையும் இந்த உலகம் சந்திக்கத்தான் செய்கிறது.

நல்லது எது கெட்டது எது என்பதைத் தெளிந்து தெரிந்து வாழ்கின்ற ஒருவன் தன் மனம்போனபோக்கில் வாழ்க்கையைத் திசை திருப்பிக் கொள்ளும் போதுதான் வாழ்க என்பது ஒழிக என்பதாக மாற்றம்பெறுகிறது.


ஒருவர் வாழ்த்தப் பெறுவதென்பதும் தூற்றப்படுவதென்பதும் அவரவரது செய்கைகளைப் பொறுத்தே அமையும்.


நமது செயல்களும் அதன் விளைவான நன்மை தீமைகளும் இடத்துக்கும் காலத்துக்குமாக மாறிவிடுவதுமுண்டு


உலகத்தின் பொதுநீதியாக நல்லது கெட்டது என்பதை இப்படிச் சொல்லலாம்:

“நீ செய்யும் ஒரு காரியத்தினால் பிறவுயிர் எதற்கும் தீங்கு விளையாதிருக்குமாயின் அது நல்லது. அந்தக் காரியத்தினால் பிற உயிர் துன்பப்பட நேருமாயின் அது கெட்டது!”


"நாம் துன்பம் செய்யாமல் விட்டுவிடுவதால்மட்டும் பிறவுயிர்கள் துன்பமின்றி வாழ்ந்துவிடுமா? ஏதோ ஒரு வகையில் அவை துன்பம் அனுபவிக்கத்தானே செய்கின்றன? ஏன் நாம்கூட துன்பத்துக்கு இலக்காகிறவர்கள்தானே! துன்பம் இல்லாமல் வாழ்க்கை ஏது? இன்பமாகத் தெரிவதெல்லாம் துன்பத்தின் மறுபகுதிதானே!"

-இவ்வாறெல்லாம் நமது மனம் நம்மைக் கேட்பதுண்டு.

இயற்கை நமக்குத் துன்பத்தைத் தருமாயின் அதிலிருந்து மீண்டுவர நாம் வழிகளைக் கண்டிருக்கிறோம் அல்லவா?

மழையிலிருந்து காத்துக்கொள்ள குடையும், வெயிலிலிருந்து காத்துக்கொள்ள செருப்பும் நம்மால் கண்டயறிப்பட்டிருக்கிறதல்லவா? இயற்கை தரும் துன்பங்களிருந்து தப்பித்துக்கொள்ள முடிந்த எங்களால் மற்றவர்க்குத் துன்பம் தராமல் வாழ்தல்மட்டும் இயலாமற் போகுமா?


ஆனால், ஆசை வழிப்பட்ட மனம் தனது மகிழ்ச்சியைமட்டுமே முன்னிலைப் படுத்துகிறது. தனது சுகத்துக்காக எதையும் செய்யலாம். மற்றவர்களைப் பற்றி அக்கறை கொள்ள வேண்டியதில்லை என்று கங்கணம் கட்டிக் காரியமாற்றுகிறது.


இந்த வாழ்க்கை என்பது நிரந்தரமற்றது. வாழ்கின்ற காலமோ மிகவும் சொற்பம். இதற்குள் அனுபவிக்க வேண்டிய இன்பங்களையெல்லாம அனுபவித்து முடித்துவிடவேண்டியதுதான் என்று அது துடிக்கிறது.


நாம் எப்படி வாழ்ந்தாலும் எல்லோர் முடிவும் ஒன்றுதான். நல்லவனாக வாழ்வதால்மட்டும் நான் மரணத்திலிருந்து தப்பிக்கொள்ள முடியுமா என்று தனது தீமைகளுக்குக் காரணம் கற்பிக்கிறது.

வாழ்க்கை நிரந்தரமற்றது என்ற எண்ணம் பெரும்பாலானவர்களின் மனத்தை ஆக்கிரமித்திருப்பதால்தான் வன்முறைகள் பரவிக்கிடக்கின்றன.
உயிர் நிரந்தரமானது என்ற உண்மை புரிந்த சித்தாந்திகள் உண்மைக்குள் உண்மையாய் ஒளிந்திருக்கும் பரம்பொருளைத் தெரிந்தார்கள். தாம் தெரிந்ததை - தெளிந்ததை மற்றவர்க்கும் சொல்லி வாழ்க்கை நெறியோடு இறைவனைக் கண்டறியும் வழியையும் போதித்தார்கள்.
நம்மைப் படைத்த பரம்பொருளே நம்மைக் காக்கவும் செய்கிறான்.

ஒருநாள் இந்த ஊனுடலை அழிக்கும் அவன் நம் உயிர்களின்மீது தன் அருளைப் பொழிகிறான்.


சிற்றின்ப மாயைகளில் சிக்கித் தவிக்கும் நாம் இந்த உடலை நீத்தாலன்றி அவனை அடைய முடியாது. அவனது அருளை நாம் பருகவேண்டுமாயின் இந்த உடலெனும் சிறையிலிருந்து நாம் விடுபட்டாகவேண்டும் என்பதே இயற்கையின் விதி.


கருணையே உருவான இறைவன் நம்மை உருவாக்கிக் காக்கிறான் எனில் நம்மை அழித்துவிட அவன் விரும்புவானா? ஆனால் அவ்வாறு அவன் விரும்புகிறான் எனில் இந்த உடலின் மறைவுக்குப்பின்னால் அவனது கருணையை நம்மீது பொழிய அவன் காத்திருக்கிறான் என்றே கொள்ளவேண்டியிருக்கிறது.


ஆக்குவதும் காப்பதும் மட்டுமே அவன் கருணையல்ல, அழிப்பதும் அருள் தருவதும்கூட அவன் கருணையினால்தான்.

ஆக்கம் அளவிறுதி இல்லாய்! அனைத்துலகும்

ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்..

என்று மாணிக்கவாசகன்போல் இறைவன் திருவடி நிழலை நாடுதலே நமது வாழ்வின் நோக்காக அமையட்டும்.





(பிரசுரம்: சிவத்தமிழ் 2012)

Total Pageviews