Monday, April 21, 2014

எல்லாம் பொய்யெனில்...


எல்லாம் பொய்யெனில் 
பொய்யும் பொய்யே!










-இந்துமகேஷ்




குழந்தை அழுகிறது
அதை அள்ளி அணைத்து பாலூட்டி அதன் பசியைத் தணிக்கிறாள் அம்மா.
பசியடங்கிக் கண்ணயர்கிறது மழலை.

சற்று நேரத்துக்கெல்லாம் மறுபடி அதன் அழுகுரல்.
மீண்டும் அன்னையின் அணைப்பில் அவளது பாலமுதம் பருகி உறக்கம் கொள்கிறது அது.

பால்நினைந்தூட்டும் தாயின் அன்பில் அவ்வப்போது அது பசிதீhததுக் கொள்கிறதேயன்றி ஒருபோதும் நிரந்தரமாக அதன் பசி தீர்வதாயில்லை.

கருவறையிலிருந்து கல்லறைவரை தொடரும் வாழ்வில் கூடவே வருகிறது பசியும்.

பசி பசி என்று அழுகின்ற வயிற்றுக்கு உணவென்று எதையேனும் கொடுத்து அமைதிப்படுத்திவிட்டு அடுத்த காரியத்தில் கவனத்தைச் செலுத்தினாலும் அடுத்தவேளைக்கான உணவுபற்றி நினைவூட்டத் தொடங்கிவிடுகிறது வயிறு.

சில பொழுதுகளுக்கு மட்டும் வேண்டுமானால் பசியைத் தாங்கிக் கொள்ளலாம். ஆனால் நிரந்தரமாக அதை நீக்கிவிட முடியுமா? உணவுதேடித் தந்தாலன்றி வயிற்றின் ஒப்பாரி ஓய்ந்துவிடாது.


ஒருநாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏல் என்றால் ஏலாய் - ஒருநாளும்
என் நோவு அறியாய் இடும்பை கூர் என் நெஞ்சே
உன்னோடு வாழ்தல் அரிது (ஒளவையார்)

வாழ்க்கை என்பது எங்கிருந்து தொடங்குகிறது? 
வயிற்றிலிருந்துதான்!
அன்னையின் வயிற்றுக்குள் குடிகொள்ளும்  நாம் அங்கிருந்து வெளிப்படும்போது நமக்கென்று ஒரு வயிற்றுடன்தான் வருகிறோம்.
நம்மோடு கூடவே வரும் வயிற்றுக்காக - அந்த வயிற்றை வளர்ப்பதற்காக - படாத பாடெல்லாம் பட்டு நம்மோடு கூடவே இன்னும்  சில வயிறுகளையும் சுமக்க வேண்டியவர்களாகிறோம்.
பின்னர் ஒருபொழுதில் வயிற்றின் இயக்கத்தோடு வாழ்வின் இயக்கமும் ஒரு முடிவுக்கு வந்து விடுகிறது.

உயிருள்ளவரையில் தேடல்களோடு தொடரும் வாழ்வு-
ஏன் இந்தப் பாடுபடுகிறீர்கள் என்று எவரிடத்துக் கேட்டாலும் வருகின்ற முதற்பதில் -
“எல்லாம் இந்த ஒருசாண் வயிற்றுக்காகத்தான்!”

சேவித்தும்  சென்றுஇரந்தும் தெண்நீர்க் கடல்கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டு இசைத்தும் - போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம் (ஒளவையார்)


வாழ்வின் தேடல்கள் அனைத்தும் வயிற்றுக்கு அடுத்தபடியாகத்தான்.
எவ்வளவுதான் வசதி வாய்ப்புக்களைப் பெருக்கிக் கொண்டாலும் வயிறு ஒத்துழைக்காவிட்டால் அத்தனையும் அர்த்தமிழந்து போய்விடுகின்றன.
ஏழ்மையும் வறுமையும் குடிகொண்டவர்களிடத்தே பசி வந்திடப் பத்தும்  பறந்துபோம் எனில் அதனிலும் துன்பம் தருவது வசதி வாய்ப்புக்கள் இருந்தும் எதுவும் உண்ண இயலாத வயிற்றைக் கொண்டிருப்பது.

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை -தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும் 
பசிவந்திடப் பறந்துபோம் (ஒளவையார்)






பசிக்கிறது உண்கிறோம்.
மறுபடி பசிக்கிறது.
அவ்வாறெனில் முதலில் உண்டவை எங்கே மறைந்தன?
உண்ண உண்ணக் காணாமல் போகிற உணவினைப் போலவே உடல்வளர்க்கும் மனிதர்களும் ஒருநாள் காணாமல் போய்விடுகிறார்கள்.

நடமாடும்  நாங்கள் ஒருநாள் காணாமல் போவோம் என்பதே இயற்கையின் விதியாக அமைந்திருக்கிறது.

„நிலையில்லாத ஒரு வாழ்வுக்காகவா நாம் உடலெடுத்து வந்தோம்?-„
- மரணித்த உடலங்களைப் பார்க்கும்போதெல்லாம் இந்தக் கேள்வி எழுகிறது.
„எல்லாம் பொய்.. எல்லாம் மாயை...!“என்று சுடலை ஞானம் பிறக்கிறது.
வயிறு பசித்தழ ஆரம்பிக்கும்வரைதான் இந்தச் சுடலைஞானம்.

„அடுத்த வேளை உணவுக்கான வழியைப்பார்!“ என்று அரிக்கத் தொடங்கும் வயிற்றுக்கு வாழ்வின் நிலையாமை குறித்து அக்கறையில்லை. அதற்கான அவசியமும் வயிற்றுக்குக் கிடையாது.
அதற்குத் தெரிந்ததெல்லாம் பசிமட்டும்தான்.

உணவளித்தால் மறையும்பசி ..அந்த உணவு சக்திமாற்றம் பெற்றபின் மறுபடி பிறப்பெடுக்கும். 
மீண்டும் பசி - மீண்டும் உணவு.
உணவின்சக்தி உழைப்பாகி.. உழைப்பு உணவாகி.. பசிதீர்த்து 
மறுபடி உணவின் சக்தி உழைப்பாகி  உழைப்பு  உணவாகி...

பசி - உணவு - உணவின் வெளிப்பாடான சக்தி - சக்தியின் வடிவான உழைப்பு...
இதில் எது நிலையானது?
எது நிலையற்றது?
எதுவுமே நியைற்றது எனில் இது ஏன் தொடர்விதியானது?
இந்தத் தொடர்ச்சியே நிலையானது எனில் எல்லாமும் நிலையானதுதானே?
அவ்வாறன்றி எல்லாமே பொய்யெனில் இந்தப் பொய் எனப்படுவதும் பொய்தானே!


(பிரசுரம்: சிவத்தமிழ்-ஜெர்மனி 2014)




Total Pageviews