Monday, May 20, 2019

முழுமை பெறாத முதுமைகள்.




முழுமை பெறாத முதுமைகள்
-இந்துமகேஷ்.


காலக் கண்ணாடியில் முகம் பார்க்கிறேன்.
எழுபது வயது முதியவர் ஒருவர் என் முகம் பார்த்துப் புன்னகைக்கிறார்.
அதற்குள்ளாக இத்தனை ஆண்டுகளைக் கடந்துவிட்டேனா நான்?
கடந்த காலத்தை மெள்ளத் திரும்பிப் பார்க்கையில் என்னுடன் கூடவந்த - என் வயதொத்த - பலர் காணாமல் போயிருப்பது தெரிகிறது.

„ஏன் இந்த உலகத்துக்கு வந்தோம்? எதற்காக வாழ்கிறோம்? இனி எங்கே போய் மறையப் போகிறோம்?“
-அவ்வப்போது எழுகின்ற கேள்விகள்.
விடை காண முடியாமலேயே அன்றாடக் கடமைகளுக்குள் கரைந்துபோய் விடுகிறது காலம்.

இளமைதொட்டு முதுமைவரை வாழ்வுக்கான தேடல்களில் பொழுதுகளைக் கரைத்தாயிற்று.
இந்தத்தேடல் என்பது உயிர் வாழ்தலுக்கான தேடல். உண்பது உடுப்பது உழைப்பது ஓய்வுகொள்வது என்று ஒரு வட்டத்துக்குள் சுழன்றோடி, „இதுதான் வாழ்க்கை!“ என்று அதற்கான தேடல்களிலேயே தொடர்ந்து முடிந்துபோகிறது  ஆயுள்.

தேடல்களிலேயே விருத்தியடைந்தது விஞ்ஞானம்.
எருதுகள் குதிரைகள் என்று இன்னோரன்ன விலங்குகளை வண்டிகளில் பூட்டி பாதைகளைக் கடந்த மனிதன் இன்று வானத்தில் பறந்து அண்டங்களைக கடந்துகொண்டிருக்கிறான்.
இருந்தவன் இல்லாமற் போனாலும் இனி இந்த உலகத்துக்கு வரப்போகிறவர்களுக்காக என்று தொடரும் தேடல்கள்…. 
இந்த உலகமே இல்லாமற்போனாலும் இன்னோர் உலகத்தில் வாழ்வைத் தொடர்வதற்கான முயற்சிகளிலும் மனிதன் ஈடுபடுகிறான்.

தனிமனித வாழ்வு என்பது நிரந்தரமற்றது என்றானபோதும் மனித வாழ்க்கை என்பது நிரந்தரமானது என்ற நம்பிக்கையோடு தேடல்கள் தொடர்கின்றன.

”ஏன் வாழ்கிறோம்?” என்ற கேள்விக்குமட்டும் இன்னும் சரியான விடை இல்லை.
இளவயதில் இந்தக்கேள்வி என்னிடத்தில்  எழுந்தபோது அப்போதைய மூத்தவர்களிடமிருந்து எனக்குக் கிடைத்த விடை – 
„இந்த வாழ்க்கை என்பது கடவுளை அடைவதற்கானது!“

„கடவுள் படைத்தார் எனில் அவரிடமிருந்துதானே நாம் வந்திருக்கவேண்டும்? அவர் அப்போதே எங்களைத் தம்மோடு வைத்திருந்திருக்கலாமே…இந்த மாய உலகத்துக்கு எம்மை அனுப்பி வாழவைத்துவிட்டுத் தன்னோடு அழைத்துக்கொள்வானேன்?“

-இந்தக் கேள்விக்கு எவரிடத்திருந்தும் பதில் இல்லை.
„வாழ்ந்து பார் பொருள் புரியும்!“

சிறுவனாக இளைஞனாக நடுத்தரவயதினனாக இப்போது கிழவனாக வாழ்ந்தாயிற்று.
வாழ்க்கையின் பொருள் புரியாமலேயே. உண்டு உழைத்து உறங்கி உறவுகளைப் பெருக்கி....
பிள்ளையாய் நண்பனாய் மாமனாய் மைத்துனனாய்…சிற்றப்பனாய் பெரியப்பனாய்.. இன்னும் இன்னும் பல்வேறு உறவுகளில் ஒருவனே பலராகி ஓடிக் களைத்தாயிற்று…

„சக மனிதனுக்கு நீ உறவுக்காரனாய் இருந்தாய் சரி. ஆனால் உன்னை இந்த உலகத்துக்கு வரவழைத்த இறைவனுக்கு நீ எவனாக இருந்தாய்?“
-சட்டெனத் துளிர்க்கும் கேள்வி.

ஓர் அடியவனாக…? தொண்டனாக…? பக்தனாக..? எவனாகவும் இல்லை!
இளமைப்பருவம் பக்திநெறியின் பக்கம் பார்வையைச் செலுத்தவிடாமல் தடுத்தது.
„அதற்கெல்லாம் இன்னும் காலம் இருக்கிறது. இப்போது வாழ்க்கையைக் கவனி...  „வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தால் வானுறையும்  தெய்வத்துள் வைக்கப்படுவாய் என்று வள்ளுவன் சொல்லவில்லையா?“ என்று சில அறிஞர்கள் ஆலோசனை சொன்னார்கள்.

இருபது தொட்டு எழுபதுவரையில் இறைவனை எண்ணிப் பார்க்காத மனம் இனி முன்னோக்கிச் செல்ல முடியாதபடி முடக்கிவிடும் முதுமையைக் கண்டபின்புதான் இறைவனைத் தேடுகிறது.

பற்றுப் பாசங்களை களைந்துவிட்டு பரலோக சாம்ராஜ்யத்தை அடைவதற்கு பாதையைக் கண்டறிய முதுமைதான் ஏற்ற பருவம் என்று வகுத்து வைத்தவர் யார் என்பது தெரியவில்லை.
ஆனால் அதையே  நம்பி முதுமைவரை காத்திருப்பவர்கள் பலரும் முழுமை பெறாமலேயே வாழ்வை முடித்துக்கொள்வார்கள் என்பதே நிதர்சனம்.

„காலம் கடந்தாயிற்று… இனிக் காரியமாற்ற ஏதுமில்லை. இன்றோ நாளையோ அழைத்துப்போக காலன் வந்துவிடுவான்…கதை முடிந்து விடும்…  இதில் கடவுளை நான் தேடுவது எங்கே?_ 
-ஆடிக்களைத்து ஓய்ந்த நிலையில் அலுத்துக்கொள்கிற மனது.

என்னுள் இருக்கும் என்னை அறியாமல் இத்தனை வருடங்களைக் கழித்திருக்கிறேன் எனும் உண்மை நெஞ்சைச் சுடுகிறது.

முதுமை என்பது சாவை அழைத்துவரும் ஒரு தருணமாகத்தான் எல்லோராலும் பார்க்கப்படுகிறது. இந்தக் கணத்திலாவது இறைவனை நினைத்து வாழ்வை முழுமைப்படுத்த முயலவேண்டாமா?

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் 
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணம் 
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட 
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே!

(மாணிக்கவாசகர்)

(பிரசுரம்: சிவத்தமிழ் 2019)






Total Pageviews