Saturday, December 22, 2007

முதுமையின் முகங்கள்


















அந்தக் கிழவனை இப்போதுதான் பார்க்கிறேன்.

தெருவீதியைக கடந்துபோனபோது கடையொன்றின் கதவுக் கண்ணாடியில் அவனது உருவம் முழுதுமாய்த் தெரிந்தது.

நேரில் அவனை நான் ஒருபோதும் இப்படிச் சந்தித்துக் கொண்டதில்லை.

எப்போதாவது அரைகுறையாகத்தான் அவனைப் பார்த்திருக்கிறேன்.

தலைமுதல் கால்வரை இன்றுதான் சரியாகப் பார்த்தேன்.

இப்போது பார்க்கையில் முன்னெப்பொழுதும் அவனை நான் சந்தித்துக் கொண்டதில்லையோ என்ற நினைப்பே எழுகிறது.



இளைஞனாக அடிக்கடி சந்தித்துக்கொண்ட அவனாக இவன் இல்லை.
முகத்தில் கைகளில் கால்களில் என்று ஆங்காங்கே கண்ணில்பட்ட பகுதிகளிலெல்லாம் வரிக்கோலமிட்டிருக்கும் தோலின் சுருக்கங்கள் இவனது வாழ்வின் காலங்களுக்கு கணக்கிட்டுக் காட்டுகிறது. பார்வைமட்டும் கூர்மையாய் எல்லாவற்றையும் எல்லாரையும் நோட்டமிட்டுக் கொண்டிருக்கிறது.
சின்னஞ்சிறுசுகள் முதல் பென்னம் பெரிசுகள்வரை ஆரையும் அலட்சியம் செய்யாமல் ஆராய்கிற மாதிரி அவனது கண்கள் அவர்கள்மீது விழுந்து மேய்கிறது.



அவனைக் கடந்து போகிறவர்களெல்லாம் ஏனோ அவனிடமிருந்து தப்பித்துவிட நினைக்கிறவர்கள்மாதிரி நடையை எட்டிப் போடுகிறார்கள்.

அவனது கண்ணில் படாமல் தனது குழந்தையை தன்னுள் மறைத்துக்கொண்டு விரைகிற தாய்..



எரிச்சலோடு அவன்மீது பார்வையை எறிந்தவிட்டு விலகிப்போகிற பெரிய மனிதர்கள்..



பார்வையாலேயே தங்களைக் கவ்விக்கொண்டு விடுவானோ என்று பரிதவித்துப் போகிறமாதிரி விலகியோடுகிற இளம்பெண்கள்...

விறைத்த பார்வையோடு அந்தக் கிழவன் ஒரு வாங்கில் போய்க் குந்திக் கொள்கிறான். தொலைந்துபோன வாழ்வின் பக்கங்களை நினைவுப் புத்தகத்திலிருந்து மீட்ட நினைத்தானோ என்னவோ கண்களை மெள்ள மூடிக்கொண்டு வாங்கில் மெள்ளச் சரிந்துகொள்கிறான்.



"வா மோனை வந்து சாப்பிட்டிட்டுப் பள்ளிக் கூடத்துக்கு ஓடு!"

-சின்னவயதில் அம்மா.

அதே அம்மா இவன் வளர்ந்தபோது சலித்துக்கொண்டாள்.

"எல்லாப் பிள்ளையளும் படிச்சுப்போட்டு நல்ல உத்தியோகத்திலை இருக்குதுகள் .. நீ மட்டும் இப்பிடிப் பொடியளோடை ஊர் சுத்திக்கொண்டு திரியிறது நல்லதில்லை மோனை!"



அம்மாவிலிருந்து விலகி கூடுபிரிந்து சிறு பறவையாய் தனித்துப் பறந்தபோது ஒட்டிக்கொண்ட புதிய உறவுகள்.. நட்புக்களாய்....

ஆனால் அவையும் சிலகாலம் மட்டுமே.

இளைஞனானபோது கனவுக்கன்னி என்று காதலைக் காட்டியவளிடம் காதலைச் சொன்னான்.

"உன்ரை மூஞ்சிக்குக் காதல் கேட்குதோ?"

அவள் திருப்பிச் சொன்னாள்.
அவளைக் கடந்தபோது எதிர்ப்பட்ட இன்னொருத்தி சொன்னாள்:

"உங்களுக்கென்ன.. உங்கள் அழகுக்கும் பண்புக்கும் ஈடாக உலகில் ஒருத்தருமே இல்லை. உங்களைக் கட்டிக்கொள்ள அவளுக்குப் பலனில்லை!".


இவளே காதலியாய்.. பிறகு மனைவியாய்..!

கால மாற்றத்தில், "மூஞ்சி சரியில்லை " என்ற முன்னவளை விட, இவளே இவனை வார்த்தைகளால் தூக்கி அடித்தாள்.
"எவ்வளவோ நல்ல வாழ்க்கை வாழ்ந்திருக்க வேண்டியவள்.. உம்மைக் கட்டிக்கொண்டு என்ன சுகத்தைக் கண்டன்?!"



அடுத்தடுத்து மனதில் அடிகள் விழ ஆரம்பித்தன.

துன்பங்கள் தூர இருந்து வருவனவல்ல.அவை பிறப்போடு கூடவே வருகின்றன என்ற ஞானம் துளிர்க்க ஆரம்பித்தது.



பிள்ளைகள் பிறந்த பின் இந்த ஞானம் மேலும் தழைத்தது.

"அப்பா..! அப்பா..!" என்று அணைந்த பிள்ளைச் செல்வங்கள் சற்று வளர்ந்ததும், "எப்போ நீ எங்களைவிட்டுப் போவாய்?" என்று கேட்கிறமாதிரிப் பார்க்க ஆரம்பித்தன.

இவன் எப்படிப் போவது?

அவர்களாய்ப் போனார்கள் வாழ்க்கையைத் தேடிக்கொண்டு.
இப்போது இவன்மட்டும் தனியனாய்....!?



எங்கிருந்து வந்தேன்? எங்கே போகப்போகிறேன்? என்ற கேள்விகளுக் கிடையில் தனக்கென ஒரு துணைதேடும் தனிமையில் இவன்.

இந்தத் துணை இனி மனிதர்களிடமிருந்தல்ல-

அதற்கும் மேலான ஒன்றிடமிருந்து!

தனிமை இவனைப் பயங்கொள்ள வைக்கிறது.

ஒரு பற்றுதல் இல்லாமல் பாசம் இல்லாமல் வாழ்வாவது?

பற்றுக் கோடாய் இறைவன்.

ஆத்மாவில் ஆத்மாவாய் அவன்.



எப்போதோ கோயிலில் கேட்ட சிவபுராணத்தின் வரிகள் மனதில் புரள்கிறது -
..............................................................................

நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே

இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்

சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே

ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே

ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே...

.................................



அந்தக் கிழவனை இப்போது நான் மிக நெருங்கிப் பார்க்கிறேன்.

மனதில் மின்னலடிக்கிறது.

இந்த முகத்தை இளமையாக நான் பார்த்திருக்கிறேன்.

இது..இது...இது...?

இது என் முகமல்லவா?!




-இந்துமகேஷ்.

(பிரசுரம்: சிவத்தமிழ்-2004 ஆடி.)

Sunday, November 25, 2007

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்!










மீண்டும் ஒரு பிறப்பா?
அவ்வாறு ஒன்று இருக்கிறதா என்ன?
அவ்வாறிருந்தால் மீண்டும் நீ எதுவாக அல்லது எவராகப் பிறக்க ஆசைப்படுகிறாய்?

-இந்தக் கேள்வி அவ்வப்போது பலராலும் பலரிடத்திலும் அல்லது தன்னிடத்தில்தானே கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வரும் விடைகள் யாவும் இப்போதைய வாழ்விலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக அல்லது அதிசயமூட்டுகிறதாக அல்லது ஏதோவொரு விதத்தில் சாதனை புரிந்ததாகத் தன்னைக் காட்டிக்கொள்கிற ஒரு பிறவியே வேண்டும் என்பதாகவே வெளிப்படுகிறது.
“எந்தப் பிறவி எடுத்தாலும் அந்தப் பிறவியிலும் உன்னை நான் சந்திக்கவேண்டும் உன்னோடு வாழ்வில் கலந்திருக்கவேண்டும்!” என்று உருகுகிற உறவுகள் இந்த உலகத்தில் ஏராளமாகவே இருக்கின்றன.

அது நிகழ்கிறதோ இல்லையோ ஆனால் அப்படி ஒரு நினைப்பு மனதின் ஓர் ஓரத்தில் படிந்து கிடக்கிறது.
உறவின்போது அந்த உணர்வு வெளிப்படாவிட்டாலும் அது பிரிவில் தன்னைக் காட்டிக்கொடுத்துவிடுகிறது.
பற்றறுத்த ஞானிக்கும் பாசங்கள் உண்டு என்பதற்குச் சிறந்த உதாரணம் பட்டினத்தார். அவரது தாயின் பிரிவில் அவர் உருகிவடித்த பாடல்கள் இந்த உண்மையையே உரத்துச் சொல்கின்றன.

“எப்பிறப்பில் காண்பேன் இனி?” என்று தேம்பியழும் அவரது வார்த்தைகளில் இந்த உடலும் இந்த உறவும் இனித்தொடராது என்ற இயற்கை ஒப்புவிக்கப்படுகிறது.

இந்தப் பிறப்பிலேயே இந்தப் பிறப்புக்கு காரணமான இறைவனைக் கண்டு கொள்ள முடியாமல் எம்மைத் தடுக்கும் ஏராளமான சூழ்நிலைகள். இவைகளைத்தாண்டி அவன்தாள் பணிவதற்குள் இந்தப்பிறப்பிலேயே எல்லாப் பிறப்புக்களையும் அனுபவித்து விடுகிறோம் நாம்.
புல்லென மண்ணின் வெளியேயும், பூண்டென மண்ணின் உள்ளேயும், ஓரிடத்தில் தங்காத புழுவென மெல்ல அசைந்தும், தீயவைகள் எதிர்ப்படுகையில் மரமென அசையாதிருந்து அவைகளைத் தாங்கியும்,

ஊண் உறக்கம் உறைவிடத் தேடலில் பல்வகை மிருகங்கள் போலப் பரந்தும், சுதந்திரப் பறவையாய் உலகைச் சுற்றியும், துன்பங்கள் தொடர்கையில் பாம்பெனச் சுருண்டும்,மற்றவர்களது விசமத்தனமான கருத்தாடல்களில் கல்லனெ அசையாதிருந்தும், மனிதனாய் வாழ்வதற்கே முயன்று, நிகழ்த்துகின்ற காரியங்களில் சில சமயம் பேய்த்தனமாகக் காரியமாற்றும் இடர்களிலும் சிக்குண்டு, இயற்கையின் பஞ்ச பூதங்களோடு போராடி, அதன்காரணமாக இவன் ராட்சதன் எனும் பெயர் சுமந்து, மீளவும் மனப்பக்குவம் பெற்று மனத்தளவில் தவமுனிவனாக மாறி, இறைபதம் காணும் தேவ நிலைக்குவரும் அத்தனை பிறப்பையும் இந்த ஒரு பிறப்பில் காணுகின்ற மார்க்கத்தை கற்பித்த இறைவனோடு கலந்திருக்கும் ஒரு வாழ்வே அமரவாழ்வு எனில் இப்பிறப்பிலேயே அதனைப் பெற்றுவிடும் வாய்ப்பினை எமக்களித்த இறைவன் எம்மோடு கூட இருக்கிறான் என்பதுதானே அர்த்தம்.


.. புல்லாகிப் பூண்டாய் புழுவாய் மரமாகிப்
பல்மிருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்
செல்லாது நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்..(மாணிக்கவாசகர்)

வாழ்வை முழுமையாக வாழ்தல் என்பதே தவம்தான்.
இந்தத் தவத்தின் பலனாய் நாம்பெறுவது இறைவன் கழலே.
இதனிலும் மேலான பேறு வேறு எது.


-இந்துமகேஷ்
(பிரசுரம்- சிவத்தமிழ் 2007)

Monday, January 29, 2007

தனிமையிலே இனிமை.




-இந்துமகேஷ்.



ஒரு வெட்ட வெளிக்குள் வந்தாயிற்று.
சுற்றிலும் யாருமற்ற தனிமையில்...
தொடுவானமும் நிலமும் மட்டுமே கண்களுக்கு எட்டுகிற வகையில்
தனியாய் நின்று யாருக்காகவோ எதற்காகவோ காத்துக்கிடக்கிறது மனது.

எங்கே எல்லோரும்?
அவரவர்கள் அவரவர்பாட்டில்!
தான் தன் சுகம் என்ற கணக்கெடுப்பில் மற்றவரைச் சாராமல்
தனித்துத் தனித்து..
எங்கோ ஒரு தனிமையில்.

என்னைப்போலத்தானோ?

பிள்ளையாய் சகோதரனாய் நண்பனாய் காதலனாய் கணவனாய் தந்தையாய் சிற்றப்பனாய் பெரியப்பனாய் மாமனாய் பேரனாய் இன்னும் இன்னும் என்று வளர்ந்து கரைத்துவிட்ட உறவுகளில் மிஞ்சிக்கிடப்பது இப்போது என்ன?

முதுமைக்கு அருகில் மிக அருகில் நெருங்கிவரும்போது
எல்லோர் மனத்தையும் கவ்விக்கொள்கிற தனிமை..
இப்போது என்னிலும்.

பாழும் மனது! பாசம் பாசம் என்று பற்றிக்கொண்டு தவித்த தவிப்புக்கள் இன்னும் முற்றிலுமாய் அழிந்து போகாமல் வாசம் போகாத பெருங்காயச்சட்டியாய் இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கும் பாசத்தின் வாசத்தோடும் பரிதவிப்போடும்!

இன்னும் என்ன இருக்கிறது?

வாழ்வுக்கான தேடலில் மீண்டும் தலைசாய்க்க முயலும் மனத்தை ஒரு தட்டுத்தட்டி சும்மா கிட என்று அதட்டிவிட்டு மீண்டும் தனிமைக்குள் நுழைந்தாயிற்று.

வேண்டாம் எதுவும் வேண்டாம்
நிலையில்லாத இந்த உலகத்தில் எதுவுமே நிம்மதியைத் தரப்போவதில்லை இது நாள் வரையில் சந்தோசம் என்று தேடித்தேடி அடைந்ததெல்லாம் வெறும் மாயையின் வடிவங்களே, இதனால் எந்தப் பயனும் இல்லை.

எல்லாம் தெரிந்தவன் என்றும் விலங்கினும் மேலானவன் என்றும் விரிந்த தன் அறிவினால் விண்ணையே கட்டி ஆள்பவன் என்றும் தன்னைத்தான் விதந்துரைத்த மனிதன் தன் வாழ் நாளில் எட்டியது என்ன?
வெறுமை வெறுமை வெறுமை!

"வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது!"
நிகழ்காலத்தில் என் அருகிருந்து பாடிய கவிஞனும் அந்தவழியே போய் மறைந்தான்.
இருக்கின்ற நானும் இன்னும் சில பொழுதுகளில்..

போவது எங்கே என்று புரியாத இடத்துக்கான ஒரு பயணமா இந்த வாழ்க்கை?
அப்படி ஒரு அர்த்தமில்லாத வாழ்வுக்கா இத்தனை ஆண்டுகள் இந்த உயிர் உடலோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது?

கேள்வியில் தடுக்குகிறது மனது.
எங்கேயோ எதுவோ இடிக்கிறதே! என்ன அது?

"தனியாக வந்தாய் தனியாகப் போய்விடப்போகிறாய்!" என்று தனியாக நிற்கையில் உணர்த்தும் மனது இந்தத் தனிமை தனிமையில்லை என்று ஏன் உணர்த்தவில்லை இத்தனை நாளாய்?

உண்மையில் ஒருபோதும் நீ தனியாக இருந்ததில்லை
உன்னுள் இருந்து உன்னை வழி நடத்தும் இறைவனை நீ உணராதவரையில்தான் நீ தனியனானேன் என்று தவித்துக்கொண்டிருப்பாய்.
அவனை நீ அறிந்துகொண்டபின்போ நீ இழந்தது எதுவுமே இல்லை என்று புரிந்துகொண்டுவிடுவாய்.
பிறகு உனக்கேது தனிமை.

உன்னுள் வாழும் இறைவன் இந்த உலகத்துக்கு உன்னை அனுப்பி வைத்திருக்கிறான் என்றால் அதற்கும் ஏதாவது அர்த்தம் இருக்கும்.

அவனைத் தெரிந்துகொண்டால் அதன் அர்த்தமும் உனக்குப் புரிந்துவிடும்.
நீ ஒருபோதும் தனியனல்ல என்று உணர்ந்துகொள்ளும்போது
உன்னுள்ளிருக்கும் அவன் தன்னை உனக்குக் காட்டுவான்.
அவனைக் கண்டுகொண்டபின்போ இந்த உலகமே உனக்காகக் காத்திருக்கிறது என்ற உண்மை உனக்குப் புரிந்துவிடும்."

-என்னுள் எழும் அந்த அசரீரியில் என் தனிமையைத் தொலைக்கிறேன்.
இந்த உலகம் எனக்காகக் காத்திருப்பது புரிகிறது-


/பிரசுரம்:சிவத்தமிழ்-ஜெர்மனி ஆடி 2006)

Total Pageviews