Sunday, November 25, 2007

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்!










மீண்டும் ஒரு பிறப்பா?
அவ்வாறு ஒன்று இருக்கிறதா என்ன?
அவ்வாறிருந்தால் மீண்டும் நீ எதுவாக அல்லது எவராகப் பிறக்க ஆசைப்படுகிறாய்?

-இந்தக் கேள்வி அவ்வப்போது பலராலும் பலரிடத்திலும் அல்லது தன்னிடத்தில்தானே கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வரும் விடைகள் யாவும் இப்போதைய வாழ்விலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக அல்லது அதிசயமூட்டுகிறதாக அல்லது ஏதோவொரு விதத்தில் சாதனை புரிந்ததாகத் தன்னைக் காட்டிக்கொள்கிற ஒரு பிறவியே வேண்டும் என்பதாகவே வெளிப்படுகிறது.
“எந்தப் பிறவி எடுத்தாலும் அந்தப் பிறவியிலும் உன்னை நான் சந்திக்கவேண்டும் உன்னோடு வாழ்வில் கலந்திருக்கவேண்டும்!” என்று உருகுகிற உறவுகள் இந்த உலகத்தில் ஏராளமாகவே இருக்கின்றன.

அது நிகழ்கிறதோ இல்லையோ ஆனால் அப்படி ஒரு நினைப்பு மனதின் ஓர் ஓரத்தில் படிந்து கிடக்கிறது.
உறவின்போது அந்த உணர்வு வெளிப்படாவிட்டாலும் அது பிரிவில் தன்னைக் காட்டிக்கொடுத்துவிடுகிறது.
பற்றறுத்த ஞானிக்கும் பாசங்கள் உண்டு என்பதற்குச் சிறந்த உதாரணம் பட்டினத்தார். அவரது தாயின் பிரிவில் அவர் உருகிவடித்த பாடல்கள் இந்த உண்மையையே உரத்துச் சொல்கின்றன.

“எப்பிறப்பில் காண்பேன் இனி?” என்று தேம்பியழும் அவரது வார்த்தைகளில் இந்த உடலும் இந்த உறவும் இனித்தொடராது என்ற இயற்கை ஒப்புவிக்கப்படுகிறது.

இந்தப் பிறப்பிலேயே இந்தப் பிறப்புக்கு காரணமான இறைவனைக் கண்டு கொள்ள முடியாமல் எம்மைத் தடுக்கும் ஏராளமான சூழ்நிலைகள். இவைகளைத்தாண்டி அவன்தாள் பணிவதற்குள் இந்தப்பிறப்பிலேயே எல்லாப் பிறப்புக்களையும் அனுபவித்து விடுகிறோம் நாம்.
புல்லென மண்ணின் வெளியேயும், பூண்டென மண்ணின் உள்ளேயும், ஓரிடத்தில் தங்காத புழுவென மெல்ல அசைந்தும், தீயவைகள் எதிர்ப்படுகையில் மரமென அசையாதிருந்து அவைகளைத் தாங்கியும்,

ஊண் உறக்கம் உறைவிடத் தேடலில் பல்வகை மிருகங்கள் போலப் பரந்தும், சுதந்திரப் பறவையாய் உலகைச் சுற்றியும், துன்பங்கள் தொடர்கையில் பாம்பெனச் சுருண்டும்,மற்றவர்களது விசமத்தனமான கருத்தாடல்களில் கல்லனெ அசையாதிருந்தும், மனிதனாய் வாழ்வதற்கே முயன்று, நிகழ்த்துகின்ற காரியங்களில் சில சமயம் பேய்த்தனமாகக் காரியமாற்றும் இடர்களிலும் சிக்குண்டு, இயற்கையின் பஞ்ச பூதங்களோடு போராடி, அதன்காரணமாக இவன் ராட்சதன் எனும் பெயர் சுமந்து, மீளவும் மனப்பக்குவம் பெற்று மனத்தளவில் தவமுனிவனாக மாறி, இறைபதம் காணும் தேவ நிலைக்குவரும் அத்தனை பிறப்பையும் இந்த ஒரு பிறப்பில் காணுகின்ற மார்க்கத்தை கற்பித்த இறைவனோடு கலந்திருக்கும் ஒரு வாழ்வே அமரவாழ்வு எனில் இப்பிறப்பிலேயே அதனைப் பெற்றுவிடும் வாய்ப்பினை எமக்களித்த இறைவன் எம்மோடு கூட இருக்கிறான் என்பதுதானே அர்த்தம்.


.. புல்லாகிப் பூண்டாய் புழுவாய் மரமாகிப்
பல்மிருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்
செல்லாது நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்..(மாணிக்கவாசகர்)

வாழ்வை முழுமையாக வாழ்தல் என்பதே தவம்தான்.
இந்தத் தவத்தின் பலனாய் நாம்பெறுவது இறைவன் கழலே.
இதனிலும் மேலான பேறு வேறு எது.


-இந்துமகேஷ்
(பிரசுரம்- சிவத்தமிழ் 2007)

No comments:

Total Pageviews