- இந்துமகேஷ்
மனைவியிடம் அடிக்கடி சண்டைபோட்டு மனம் வெறுத்துப்போன கணவன், ஒருநாள் வெறுப்பு அதிகமாகி வீட்டைவிட்டுக் கிளம்புகிறார்.
„இனிமேல் உன்னுடன் வாழமுடியாது..நான் சாமியாராகப் போகிறேன்!“ என்று தோளில் கிடந்த துண்டை உதறிப்போட்டுக்கொண்டு வாசலுக்கு இறங்கியவர் பார்வையில் முற்றத்தில் கிடக்கும் தண்ணீர்ச் செம்பு பட்டுவிடுகிறது
„இதை எடுத்து உள்ளே வை!“ என்று மனைவியிடம் சத்தம்போட்டுச் சொல்லி விட்டு முற்றத்துப் படலை அடித்துச் சாத்திக்கொண்டு வெளியேறுகிறார் அவர்.
-பற்றறுக்க முடியாமல் இந்தப் பாழும் மனத்தோடு போராடும் மனிதனைப் பரிகசிக்கச் சொல்லப்படுகிற கதை இது.
உலகப் பற்றறுத்தல் என்பது, உள்ள கடமைகளை விட்டுவிட்டு ஒதுங்கிப் போவதாகப் பலரும் கற்பிதம் செய்துகொள்கிறார்கள். பற்றறுத்தவர்கள் என்று எவரும் இந்த உலகத்தில் இல்லை. முற்றும் துறந்தவர்களும் இறைவனிடம் பற்றுக்கொண்டவர்கள்தாம். தனக்கான நாளாந்தக் கடமைகளை செய்யாமல் எவனும் வாழ்வதில்லை.
தனக்கான கடமைகளோடு பிறர்க்காகவும் வாழ்வதுதான் மனிதனைத் தெய்வநிலைக்கு மாற்றும்.
ஆரூடம் கூறுபவர்கள்கூட அவதார புருஷர்களாக மாறிவிவரும் காலம்இது. வாழ்க்கையில் நல்லது கெட்டதுகளை அறிந்து சொல்வதோடு அவற்றுக்கு பரிகாரமும் சொல்பவர்கள் சம்பந்தப்பட்டவர்களால் தெய்வநிலைக்கு உயர்த்தப்படுவது இயல்பானதுதான்.
கொடிய நோய்க்கு மருந்தளித்துக் காப்பாற்றும் வைத்தியனை „நீங்கள் எங்கள் தெய்வம்“ என்று நன்றியுணர்வோடு பாராட்டுவதில்லையா..? அதுபோல்தான் இதுவும்! ஆனால் இந்த நன்றியறிவித்தல் என்பது எல்லை தாண்டிப் போகும்போதுதான் விபரீதங்கள் நேர்கின்றன.
மதபோதகர்கள் மறியல்களை நிறைப்பதற்கு காரணம் அவர்களல்ல. அவர்களைத் தெய்வமாக மாற்றியவர்களே!
„கடமையைச் செய் பலனை எதிர்பாராதே!“ என்று கீதையில் போதித்த கண்ணன் பற்றறுத்த மனநிலையையே பரிந்துரைத்தான். மனித வடிவம் பெற்றவர்கள் மனிதனுக்குரிய கடமைகளைச் செய்தே ஆகவேண்டும். அதேவேளை அந்தக் கடமைகளால் விளயும் பலன்கள்மீது பற்றுக் கொள்ளாதிருப்பதே தெய்வீக நிலை.
உலகம் பரந்து விரிந்தது.
இதில் வாழும் உயிர்களோடு ஒப்பிடுகையில் ஒவ்வொரு மனிதனும் அணுவிலும் அணு. எல்லா உயிர்களையும் ஒருங்கிணைத்த வடிவமே தெய்வம். இந்த உலகத்துக்கு வரும் ஒவ்வொருவரும் தமக்கென்று சில கடமைகளோடுதான் வந்து பிறக்கிறார்கள். இந்தக் கடமைகளை நிறைவேற்ற பிற உயிர்களின் ஆதாரம் தேவைப்படுகிறது. பிறருக்குச் செய்யும் கடமைகளாலும் தமது மனத் தூய்மையாலும் பலர் அவதார புருஷர்களாகத் தோற்றம் காட்டுகிறார்கள். அவர்கள் பெற்ற ஞானத்தை மற்றவர்களும் பெற ஒத்தாசை புரிவதில் அவர்கள் ஞான குருவாகச் செயல்படலாம். தன்னுள் இருக்கும் தெய்வத்தை உணரும் முயற்சியில் ஈடுபடும் ஒவ்வொருவரும் அவர்களை ஞானவழிகாட்டிகளாகக் கொள்ளலாம்.. ஆனால் தெய்வங்களாக அல்ல.
ஏனெனில் உனக்குரிய கடமைகளில் நீ பிறழாதிருக்கும்வரை,
செய்யும் கடமைகளின் பலனில் நீ பற்றுக்கொள்ளாதவரை, நீயும் கடவுளே!
நீயும் கடவுள் என்ற உண்மை உன்னை நெருங்கிய பின்னால் தெய்வத்தை நீ வெளியே தேடிக் கொண்டிருக்கமாட்டாய்!
...நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
அன்பருக்கன்பனே யாவையுமாம் அல்லையுமாம்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி இல்லானே!
ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தைபெருமானே!...
(மாணிக்கவாசகர்)
(பிரசுரம்: சிவத்தமிழ்-2008)
1 comment:
பலனில் பற்றிருந்தால்தானே கடமை செய்யவேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்?! :)
Post a Comment