-இந்துமகேஷ்
"கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்!" என்று காதலில் கலந்துவிட்டாயா? உன்னுள் இருக்கும் உன்னை உன்னால் கண்டுகொள்ள முடிந்திருக்கிறதா? இனி நீ கடவுளைக் காண வேறெங்கும் போகவேண்டியதில்லை.
கடவுள் உன்னோடு கலந்துவிட்டாயிற்று.
கடவுளிடமிருந்து உன்னையும் உன்னிலிருந்து கடவுளையும் இனித் தனித்தனியாகப் பிரிக்கமுடியாது. கடவுள் என்னும் மாபெரும் சமுத்திரத்தில் ஒரு துளியாக இருந்த நீ இப்போது சமுத்திரமாக மாறிவிட்டாய்.
இனி சமுத்திரம் வேறு துளிநீர் வேறு என்று பிரிப்பதற்கில்லை.
பரந்து விரிந்த இந்த உலகில் வீசிக்கொண்டு இருக்கும் காற்று. இதில் எனது சுவாசக் காற்று என்றும் உனது சுவாசக் காற்று என்றும் பகிர்ந்துகொண்டு சுவாசிக்க நம்மால் ஆகாது. வீசும் காற்றில் உனது மூச்சும் எனது மூச்சும் ஒன்றாகக் கலந்தாயிற்று. எல்லாவிதமான பேதங்களையும் கடந்து எங்கள் சுவாசங்களை இந்தக் காற்றில் கரைத்துவிட்டோம்.
இனி எனது என்றும் உனது என்றும் பிரித்துப்பார்க்க எதுவுமில்லை.
இதுதானே தெய்வீகநிலை. இதற்குமேல் இனி வேறேது வேண்டும்.
என்னை நீராய் உருக்கி என் ஆருயிராய் நிற்பதற்காய், தந்தையெனும் ஓர் ஆண்மகனைக் காட்டி அவனது விதைப்பைக்குள் என்னை அடைத்து அன்னையின் கருப்பைக்குள் வரவழைத்து அருவமான என்னை உருவமாக்கி அகிலத்தில் நடமாட வைத்த அந்தச் சக்தியை வெளியிலிருந்து கண்டுகொள்ள என்னால் முடியாது என்பதால்தான் எனக்குள் அவனை(ளை)த் தேடினேன்.
"நான்" என நான் அறிந்த என் உருவம் பொய்யாய்ப் போக, என்னில் என்தந்தையும் தாயும் இணைந்திருக்கக்கண்டேன்.
அன்னை தந்தை என இருவரின் கூட்டு நான்.
நீயும் அதுபோல்.
ஒரு பெண்மையும் ஓர் ஆண்மையும் கலக்காமல் எந்த உடலும் உருப்பெற்றதில்லை.
நீ ஒரு பெண்ணா? உன்னில் பாதியாய் ஓர் ஆண்மை உன்னிடம் உள்ளது. நீ ஓர் ஆணா? உன்னில் பாதியாய் ஓர் பெண்மை உன்னிடம் உள்ளது.
தந்தையும் தாயுமானவன் இறைவன் எனில் அவனுக்கோ தந்தை தாய் எவருமில்லை. அதனால் ஆணாகிப் பெண்ணாகி அர்த்த நாரீஸ்வரனாய் தோற்றம் காட்டுவான் அவன்.
"நான் நான் " என ஆணவம் காட்டும் எனது மனம், தான் என்பது அற்றுப் போகும் தருணத்தில் நான் எனும் இந்த உடலம் மறுபடி அருவமாகும்.
உனது பார்வைக்கு நான் புலனாவதில்லை. எனது பார்வைக்கு நீ புலனாவதில்லை. ஆனால் நம்மில் நாம் கலந்திருப்போம். நம்மைப் போலவே உருவம் கொண்ட இறைவன் ஒருநாள் தன் உருவம் இன்னதுதான் என்று அடையாளம் காட்டாமல் தன்னை மறைத்துக் கொள்வான். அவனில் நாம் மறைந்துகொள்வோம்.
இயற்கை நம்மைப் பிறப்பித்தது. இயற்கை நம்மை வாழ்வித்தது. இயற்கையே நம்மை மறைப்பிக்கும். ஆனால் இயற்கையின் அம்சமான நாம் இயற்கையைவிட்டு விலகுவதில்லை.அதனோடு இரண்டறக் கலந்திருக்கிறோம். இந்த இயற்கையை இயக்கும் ஒரு சக்தி இறையாகி நின்று எம்மை வழிநடத்துகிறது. முடிவில் அதுவே நாமாகி நம்மைத் தன்னுள் ஒடுக்குகிறது. இந்த ஒடுக்கமே பேரானந்தமாக நம்மை ஆட்கொள்கிறது.
முத்திநெறி அறியாத மூடரொடு முயல்வேனைப் பக்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணம் சித்தமலம் அறிவித்துச் சிவமாக்கி எனையாளும் அத்தனடி சேர்வதற்கு அடிப்படையாவது காதல்.
அதனால்தான் காதலாகி கசிந்து கண்ணீர்மல்கி ஓதுவாரோடு சேர்ந்து நன்னெறிக்குள் புக உகந்த மார்க்கம் என்று தேடிக் கண்டுகொண்டேன் நான். அந்த அருள்நெறிக் காதலில் முழுமை பெற இன்னும் நடந்தாகவேண்டும் நெடுந்தூரம்.
இந்தக் காதல் எப்போது சித்திக்கும்?
அப்பருக்கு எண்பத்தொன்று அருள்வாதவூரருக்கு செப்பிய நாலெட்டில் தெய்வீகம்- இப்புவியில் சுந்தரர்க்கு மூவாறு தொல்ஞான சம்பந்தர்க்கு அந்தம் பதினாறு என்று சமயகுரவர் நால்வரும் பல்வேறு வயதுகளில் முக்தி பெற்றனர்.
எவரெவர்க்கு எப்போது என்பது அவரவர் தேடலைப் பொறுத்தே அமையும். தேடுங்கள் கண்டடைவீர்கள் என்பது தேவகுமாரனின் திருவாக்கு அல்லவா?
தேடுவோம்!
நம்முள் இருக்கும் நம்மைத் தேடுவோம்
நாமாக இருக்கும் இறைவனைத் தேடுவோம்.
(பிரசுரம்: வெற்றிமணி)
(இந்துமகேஷ் எழுதிய காதலாகி கசிந்து கண்ணீர்மல்கி... தொடரிலிருந்து)
No comments:
Post a Comment