அம்மாவும் நீயே!
-இந்துமகேஷ்
என்னை எனக்குப் பிடித்தவனாக நான்
இருக்கும்போதெல்லாம் இந்த உலகம் எனக்கு
இனிமையானதாகத் தோன்றுகிறது.
என்னை எனக்குப் பிடிக்காதவனாக நான் மாறிவிட
நேரும்போதோ இந்த உலகமும் எனக்குக் கசப்பானதாக .மாறிவிடுகிறது.
எனக்குப் பிடித்தவனாக நான் இருக்கும்போது
என்னைச் சூழ இருப்பவர்களெல்லாம் எனக்குப் பிடித்தமானவர்களாக இருக்கிறார்கள்
என்னைப் பிடிக்காதவனாக நான் மாறிவிட நேரும்
தருணங்களில் எல்லாம் என்னருகே இருப்பவர்களுக்கெல்லாம் என்னைப் பிடிக்காது
போய்விடுகிறது!
ஆயினும்-
எல்லாப் பொழுதுகளிலும் - எனக்குப்
பிடித்தவர்களையும் சரி என்னைப் பிடிக்காதவர்களையும் சரி எல்லோரையும் நான் அளவுக்கதிகமாகவே நேசித்திருக்கிறேன் -நேசிக்கிறேன்
என்பதே உண்மை.
பிடித்தமானது என்பது பற்றுக்கொள்வது.
மனம் ஒன்றைப் பற்றிக்கொள்வது.
பற்றுக்களை அறுத்துக்கொள்ளும் தருணத்திலேயே மனிதன்
முக்தி பெறுவது சாத்தியமாகிறது என்று முன்னோர்கள் சொல்லிவைத்தது உண்மையாக
இருக்கலாம் .ஆனால் அவ்வாறு பற்றுக்களை அறுத்துக்கொள்ளும் கணத்தில்கூட முக்திக்கு
இலக்கானவனாகத் தோன்றும் இறைவனின் மீதும் பற்றுக்கொள்ளவேண்டியவர்களாகத்தானே
இருக்கிறோம் என்பது
வியப்பளிப்பதாக இல்லையா?
ஏதோ ஒன்றில் பிடிப்புள்ளவரைதான் வாழ்வு
அர்த்தமுள்ளதாகிறது.
உன்னோடு நானும் என்னோடு நீயும்
உறவுகொள்வதற்கு ஒரு பிடிப்பு இருந்தாகவேண்டும்.
ஒருவர்க்கொருவர் பிடித்தமானவர்களாக
இருந்தாகவேண்டும்.
ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இது
அவ்வாறு இருப்பதில்லை.
ஒருதலைப் பட்சமான அன்புதான் உலகில் மிக
அதிகம்.
எனக்குப் பிடித்தமானவர்களின் எண்ணிக்கையைவிட
என்னைப் பிடிக்காதவர்களின் எண்ணிக்கையே அதிகம் என்று எண்ணத்தக்கதாகவே
பெரும்பாலானோரின் வாழ்வு தொடர்கிறது.
தொப்புள்கொடி உறவு என்று தொடங்குகின்ற தாய்
பிள்ளை உறவில் யார் யாருக்கு அதிகம் பிடித்தமானவர்களாக இருக்கிறார்கள்?
அம்மாவுக்கு பிள்ளையா? பிள்ளைக்கு அம்மாவா?
தாய்ப்பாசம்போல் உலகில் உயர்ந்தது
எதுவுமில்லை என்பதும் ஒருவனுக்குத் தாயைவிட மேலானது எதுவுமில்லை என்பதும் உலகம்
எங்கணும் காணப்படும் பொது நிலை.
ஆனால் அது எந்தளவுக்குச் சாத்தியப்படுகிறது?
தன் வாழ்நாள் முழுதும் தன் பிள்ளையை நேசிக்க
ஒரு தாயால் முடிவதுபோல் தன் வாழ்நாள் முழுதும் தன் தாயின்மீது பாசம் காட்ட ஒரு
மகனாலோ மகளாலோ முடிகிறதா?
ஒவ்வொருவர் வாழ்விலும் பருவங்கள் மாற மாற
பாசங்களும் மாறிப்போய்விடுகின்றனவே!
உலகவாழ்வில் உயரியதாகக் கருதப்படுகின்ற தாய்
- பிள்ளை உறவுக்கே இந்நிலை என்றால் ஏனையவவை எம்மாத்திரம்?
பெற்றவள் உயிரோடிக்கிறவரை அவளைப் பராமரிக்க
மறந்து அவள் இல்லாத காலத்தில் அவளைப் புகழ்ந்து தள்ளுவதிலும், „அம்மா! உனக்கு
நான் அதைச் செய்திருக்கவேண்டும் இதைச்செய்திருக்கவேண்டும்
ஆனால் எதற்கும் நான் நாதியற்றுப் போனேனே. இப்போது உன்னை எண்ணித் துடிக்கிறேனே!“
என்று கவிதை பாடுவதிலும் கழிவிரக்கம் கொள்வதிலும் காலத்தைக் கழிக்கின்ற
மக்களைத்தானே நாம் அதிகம் சந்திக்கிறோம்.
அன்னையும் பிதாவும்; முன்னறி தெய்வம்
என்றும், தாயிற்சிறந்த கோயிலுமில்லை தந்தை
சொல்மிக்க மந்திரமில்லை என்றும் பெருமை பாராட்டும் அளவுக்கு அவர்களைப்
பேணிப் பாதுகாக்க எல்லாப் பிள்ளைகளாலும் முடிவதில்லை என்பதே யதார்த்தம்.
தாயின் அரவணைப்பு தனக்குத் தேவைப்படும்வரை
அவளது அன்பில் கட்டுண்டு கிடக்கும் பிள்ளை வளர்ந்து பெரியவனாகி தனக்கென்று ஒரு
வாழ்வைத் தேடிக்கொள்ளும்போது தாயைப் பிரிவதென்பதும் தவிர்க்கமுடியாததாகிறது.
பிள்ளைமட்டுமே வாழ்வென நினைத்து அவனைப்
பேணிவளர்த்த அன்னை தனித்து விடப்படுகிறாள். ஆனாலும் எஞ்சிய அவளது வாழ்வின் காலம்
முழுதும் பிள்ளையின் நினைப்புடனேயே கழிந்துபோகிறது.
ஒரு பெண் ஒருத்திக்கு மகளாக சிலருக்கு
சகோதரியாக சிலருக்குத் தோழியாக ஒருவனுக்கு மனைவியாக வாழ்கின்ற நிலைவரை அவள்
ஒருபெண்.
ஆனால்: ஒரு உயிரைக் கருவில் சுமந்து அதைப்
பெற்றெடுத்து ஒரு தாயாக அவள் உயர்வடையும்போதோ அவள் தெய்வத்துக்குச் சமானமாகிவிடுகிறாள்.
சக்தியின் வடிவமாக அவள் உருமாற்றம் கொண்டு
விடுகிறாள்.
தாயைத் தெய்வமெனப் போற்றும் பண்பை மனிதன்
கற்றுக்கொண்டது அவளது படைப்பாற்றலால்தான்.
எனக்கு என் அன்னை தெய்வம் என்று நான்
உணர்வதுபோல் என் அன்னைக்கு அவளது அன்னை தெய்வம். அந்த அன்னைக்கு அவளது அன்னை தெய்வம்
இவ்வாறே எல்லா மனிதர்க்கும் மூலமாக நிற்கின்ற ஓர் அன்னை எல்லோர்க்கும் தெய்வம்.
அவளே ஆதி பராசக்தி.
அவள் தெய்வத்தின் தெய்வம்.
நம்மைப் பெற்றுவளர்த்துப் பெருவாழ்வளித்து
மறைந்துவிடும் தாயைப்போல் அவளும் இந்த உலகத்தை உருவாக்கிவிட்டு மறைந்தே
நிற்கிறாள்.
நமது இயக்கம் என்பதும் நமது வாழ்வு என்பதும்
அவள் நமக்களித்த வரம்.
நமக்கு அவள் தந்த இந்த வாழ்:வில் இடையறாத
அன்பு செலுத்தி அவளைச் சென்றடைவதே நமது வாழ்வின் பயன்.
யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும்
பொய்யே
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின்தெளிவே தித்திக்கும்
மானே அருள்வாய் அடியேன் உனைவந்துறுமாறே!
(மாணிக்கவாசகர்)
(பிரசுரம்: சிவத்தமிழ் 2013)
No comments:
Post a Comment