Monday, May 20, 2019

முழுமை பெறாத முதுமைகள்.




முழுமை பெறாத முதுமைகள்
-இந்துமகேஷ்.


காலக் கண்ணாடியில் முகம் பார்க்கிறேன்.
எழுபது வயது முதியவர் ஒருவர் என் முகம் பார்த்துப் புன்னகைக்கிறார்.
அதற்குள்ளாக இத்தனை ஆண்டுகளைக் கடந்துவிட்டேனா நான்?
கடந்த காலத்தை மெள்ளத் திரும்பிப் பார்க்கையில் என்னுடன் கூடவந்த - என் வயதொத்த - பலர் காணாமல் போயிருப்பது தெரிகிறது.

„ஏன் இந்த உலகத்துக்கு வந்தோம்? எதற்காக வாழ்கிறோம்? இனி எங்கே போய் மறையப் போகிறோம்?“
-அவ்வப்போது எழுகின்ற கேள்விகள்.
விடை காண முடியாமலேயே அன்றாடக் கடமைகளுக்குள் கரைந்துபோய் விடுகிறது காலம்.

இளமைதொட்டு முதுமைவரை வாழ்வுக்கான தேடல்களில் பொழுதுகளைக் கரைத்தாயிற்று.
இந்தத்தேடல் என்பது உயிர் வாழ்தலுக்கான தேடல். உண்பது உடுப்பது உழைப்பது ஓய்வுகொள்வது என்று ஒரு வட்டத்துக்குள் சுழன்றோடி, „இதுதான் வாழ்க்கை!“ என்று அதற்கான தேடல்களிலேயே தொடர்ந்து முடிந்துபோகிறது  ஆயுள்.

தேடல்களிலேயே விருத்தியடைந்தது விஞ்ஞானம்.
எருதுகள் குதிரைகள் என்று இன்னோரன்ன விலங்குகளை வண்டிகளில் பூட்டி பாதைகளைக் கடந்த மனிதன் இன்று வானத்தில் பறந்து அண்டங்களைக கடந்துகொண்டிருக்கிறான்.
இருந்தவன் இல்லாமற் போனாலும் இனி இந்த உலகத்துக்கு வரப்போகிறவர்களுக்காக என்று தொடரும் தேடல்கள்…. 
இந்த உலகமே இல்லாமற்போனாலும் இன்னோர் உலகத்தில் வாழ்வைத் தொடர்வதற்கான முயற்சிகளிலும் மனிதன் ஈடுபடுகிறான்.

தனிமனித வாழ்வு என்பது நிரந்தரமற்றது என்றானபோதும் மனித வாழ்க்கை என்பது நிரந்தரமானது என்ற நம்பிக்கையோடு தேடல்கள் தொடர்கின்றன.

”ஏன் வாழ்கிறோம்?” என்ற கேள்விக்குமட்டும் இன்னும் சரியான விடை இல்லை.
இளவயதில் இந்தக்கேள்வி என்னிடத்தில்  எழுந்தபோது அப்போதைய மூத்தவர்களிடமிருந்து எனக்குக் கிடைத்த விடை – 
„இந்த வாழ்க்கை என்பது கடவுளை அடைவதற்கானது!“

„கடவுள் படைத்தார் எனில் அவரிடமிருந்துதானே நாம் வந்திருக்கவேண்டும்? அவர் அப்போதே எங்களைத் தம்மோடு வைத்திருந்திருக்கலாமே…இந்த மாய உலகத்துக்கு எம்மை அனுப்பி வாழவைத்துவிட்டுத் தன்னோடு அழைத்துக்கொள்வானேன்?“

-இந்தக் கேள்விக்கு எவரிடத்திருந்தும் பதில் இல்லை.
„வாழ்ந்து பார் பொருள் புரியும்!“

சிறுவனாக இளைஞனாக நடுத்தரவயதினனாக இப்போது கிழவனாக வாழ்ந்தாயிற்று.
வாழ்க்கையின் பொருள் புரியாமலேயே. உண்டு உழைத்து உறங்கி உறவுகளைப் பெருக்கி....
பிள்ளையாய் நண்பனாய் மாமனாய் மைத்துனனாய்…சிற்றப்பனாய் பெரியப்பனாய்.. இன்னும் இன்னும் பல்வேறு உறவுகளில் ஒருவனே பலராகி ஓடிக் களைத்தாயிற்று…

„சக மனிதனுக்கு நீ உறவுக்காரனாய் இருந்தாய் சரி. ஆனால் உன்னை இந்த உலகத்துக்கு வரவழைத்த இறைவனுக்கு நீ எவனாக இருந்தாய்?“
-சட்டெனத் துளிர்க்கும் கேள்வி.

ஓர் அடியவனாக…? தொண்டனாக…? பக்தனாக..? எவனாகவும் இல்லை!
இளமைப்பருவம் பக்திநெறியின் பக்கம் பார்வையைச் செலுத்தவிடாமல் தடுத்தது.
„அதற்கெல்லாம் இன்னும் காலம் இருக்கிறது. இப்போது வாழ்க்கையைக் கவனி...  „வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தால் வானுறையும்  தெய்வத்துள் வைக்கப்படுவாய் என்று வள்ளுவன் சொல்லவில்லையா?“ என்று சில அறிஞர்கள் ஆலோசனை சொன்னார்கள்.

இருபது தொட்டு எழுபதுவரையில் இறைவனை எண்ணிப் பார்க்காத மனம் இனி முன்னோக்கிச் செல்ல முடியாதபடி முடக்கிவிடும் முதுமையைக் கண்டபின்புதான் இறைவனைத் தேடுகிறது.

பற்றுப் பாசங்களை களைந்துவிட்டு பரலோக சாம்ராஜ்யத்தை அடைவதற்கு பாதையைக் கண்டறிய முதுமைதான் ஏற்ற பருவம் என்று வகுத்து வைத்தவர் யார் என்பது தெரியவில்லை.
ஆனால் அதையே  நம்பி முதுமைவரை காத்திருப்பவர்கள் பலரும் முழுமை பெறாமலேயே வாழ்வை முடித்துக்கொள்வார்கள் என்பதே நிதர்சனம்.

„காலம் கடந்தாயிற்று… இனிக் காரியமாற்ற ஏதுமில்லை. இன்றோ நாளையோ அழைத்துப்போக காலன் வந்துவிடுவான்…கதை முடிந்து விடும்…  இதில் கடவுளை நான் தேடுவது எங்கே?_ 
-ஆடிக்களைத்து ஓய்ந்த நிலையில் அலுத்துக்கொள்கிற மனது.

என்னுள் இருக்கும் என்னை அறியாமல் இத்தனை வருடங்களைக் கழித்திருக்கிறேன் எனும் உண்மை நெஞ்சைச் சுடுகிறது.

முதுமை என்பது சாவை அழைத்துவரும் ஒரு தருணமாகத்தான் எல்லோராலும் பார்க்கப்படுகிறது. இந்தக் கணத்திலாவது இறைவனை நினைத்து வாழ்வை முழுமைப்படுத்த முயலவேண்டாமா?

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் 
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணம் 
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட 
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே!

(மாணிக்கவாசகர்)

(பிரசுரம்: சிவத்தமிழ் 2019)






Friday, January 11, 2019

இல்லாத கடவுளும் இருக்கின்ற மனிதர்களும்!

இல்லாத கடவுளும்
இருக்கின்ற மனிதர்களும்!


-இந்துமகேஷ்




„ இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இந்த மனிதன் தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டு அலையப் போகிறான்? இல்லாத ஒன்றை இருப்பதாகக் கற்பனை பண்ணிக்கொண்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளைத் தொலைத்துவிட்டபின்பும் இன்னும் அதே நம்பிக்கையுடனேயே கடவுள் என்னும் கற்பனைவடிவத்துக்குத் தூப தீப ஆராதனைகளோடு கூடிநின்று கோஷமிட்டு கூச்சலிட்டு, பஜனை என்றும் பண்ணிசை என்றும் பாட்டுக்கள் பாடி, கரகம் என்றும் காவடி என்றும் கூத்துக்கள் ஆடி, கடவுளைக் காண்கிறோம் என்று கதை விட்டுக்கொண்டு இறுதியில் ஏதுமறியா வெறுமையினோடு விழிக்ளை மூடிக்கொண்டு.. வாழ்க்கைப் பயணம் முடிந்து விடுகிறது.

„கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்!“ என்று இவர்கள் கதைபண்ணிக்கொண்டிருக்கும் கடவுள் ஒருபோதும்  இவர்கள் கண்ணெதிரில் வந்ததற்கான எந்தச் சான்றும் இல்லை. இருக்கும்போது வாராத கடவுள் இறந்தபின்தான் வந்து ஆண்டருள்வான் என்றால் நம்பமுடிகிறதா?“

இறைவன் தொண்டுக்கென்றே தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதிக்கொண்டு அலைந்தார்களே அன்றி அவர்களால் நேசிக்கப்பட்ட அந்தக் கடவுள் அவர்களுக்கு காட்சி தந்ததற்கான எந்தத் தரவுகளும் இல்லை.
அவனவன் கற்பனைகளுக்கேற்ப ஆயிரமாயிரமாய்க் கதைகள். அதிலும் பாதிக்குமேல் மனிதர்களைப் பரவசத்திலாழ்த்தும் பாலியல் கதைகள்.. கடவுளுக்கு மனிதனைப்போல் உருவத்தை வடிவமைத்து தத்தம் ஆசாபாசங்களுக்கேற்ப அவனைச் சித்தரித்து, இதுதான் கடவுள் வந்து தொழு! என்றால் இது பகுத்தறிவுக்குள பொருந்தக் கூடியதாகவா இருக்கிறது?
- கேள்விகள் நீண்டு கிடக்கின்றன. 
விடை தேடிச் சலித்துப்போனவன் கண்ட ஒரே விடை:-
 „கடவுள் என்று எதுவுமே இல்லை!“

கடவுளே இல்லை என்று முடிவெடுத்துக் கொண்டவன் உலகவாழ்வுக்கான தன் தேடல்களில் தீவிரமாகத் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறான். வசதிகளைப் பெருக்கிக் கொள்கிறான். வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிட்டதாகவும் மகிழ்வோடிருப்பதாகவும் தோற்றம் காட்டுகிறான்.

கடவுள் இருக்கிறான் என்று நம்பிக்கொண்டிருப்பவனோ உலகவாழ்வுக்கான தன் தேடல்களைத் தவிர்த்து, „எல்லாம் அவனருள்!“ என்று காத்திருக்கத் தொடங்குகிறான்.
„கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே!“ என்பதைக் கருத்தில் கொள்ள மறந்து விடுகிறான்.
கடவுள் இல்லை என்பவன் உல்லாசமாக வாழும்போது கடவுளை நம்பிய நான் கவலைகளில் மூழ்கிக் கிடக்கிறேனே என்று உள்ளம் வெதும்புகிறான்.

„செய்யும் தொழிலே தெய்வம்!“ என்று முன்பெல்லாம்  உழைப்பாளிகள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். 
இப்போதோ தெய்வத்தை செய்வதே தொழிலாயிற்று. 
„உன் கஷ்டம தீரவேண்டுமா? இல்லாத கடவுளை எங்கே என்று தேடிக் கொண்டிருக்காதே. இதோ தெய்வம் என்று ஒரு கோயிலைக்கட்டு அதுதான் இப்போதைக்கு வருமானம் தரும் சிறந்த தொழில்“
- பகுத்தறிவுவாதிகள் என்று தம்மைச் சொல்லிக்கொள்ளும் மனிதர்கள் ஆன்மீகவாதிகளுக்கு விடுக்கும்  நற்செய்தி இது.

அவர்களைப் பொறுத்தவரை தெய்வம் என்பது கேலிக்குரியது. சடங்குகள் சம்பிரதாயங்கள் பிரார்த்தனைகள் யாவும் கேலிக்குரியன. 
ஆனால் எல்லா ஆன்மாக்களிடத்தும்  இறைவன் இரண்டறக் கலந்திருக்கிறான் என்ற உண்மையை அவர்களே அறியாமல் அவர்களே நிரூபிக்கிறார்கள் என்பதுதான் இதில் ஆச்சரியத்துக்குரியது.

„கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் என்று எதுவுமே இல்லை!“ என்று முழங்கிய மனிதன் அவனது இறப்புக்குப் பிறகு அவனைப் பின்பற்றுபவர்களால் கடவுளாக்கப்படுகிறான்;. அவனை சிலையாக்கி மாலை அணிவித்து வணக்கம் செலுத்தி தீபாராதனை செய்து அவன் உயிரோடிருந்தவரையில் இவர்களுக்குக் காட்சிதராத – அவனுள் இருந்த -  கடவுளை இவர்கள் இப்போது வணங்கவைத்துவிடுகிறான்.

„நான் யார்;?“ என்ற கேள்விக்கு விடை: „நான் ஆன்மா!“
„ஆன்மா என்றால் என்ன என்ற கேள்விக்கு விடை: „அது கடவுள்!“

நான் என்பது இந்த உடம்புதான் என்று எண்ணிக்கொண்டிருக்கும்வரை என்னுள் இருக்கும் நானாகிய ஆன்மா என் கண்களுக்குப் புலனாவதில்லை. என்னைக்கடந்து  என்னுள் போய் என்னைக் கண்டுகொள்ளும்போதுதான் நான் கடவுள் என்பது எனக்குத் தெளிவாகிறது. என்னைப் போலவே நீயும் அதை உணரலாம். 
இந்த உடல் என்பது இந்த மண்ணில் ஒரு துகள்தான். 

எனது உடலை விந்தெனக் கொண்டலைந்த எந்தையும், அதைத் தன் கருவில் தாங்கி உருக்கொடுத்து வளாத்து இந்த மண்ணில் தவழவிட்ட என் தாயும் இந்த உடலின் மூலாதாரம்:
இந்த உடலுக்குள் வாசம்செய்யும் நானாகிய ஆன்மாவும் அவர்களது ஆன்மாக்களின் தொடர்ச்சியே. என் ஆன்மா தெய்வமென நான் உணர்ந்தபோதே என் பெற்றவர்களும் தெய்வமே என்று என்னால் உணரப்பட்டார்கள். 
அவர்கள் உடலால் மறைந்தாலும் என் ஆன்மாவோடுதான் வாழ்கிறார்கள். 
இப்போது அவர்கள் உடலளவில் என்னருகே இல்லை என்பதால் நான் பெற்றோரே இல்லாதவன் என்று பெருமைப்பட்டுக்கொள்ள முடியுமா? 
நான் இருக்கின்றவரையில் அவர்களும் இருப்பார்கள். 
நான் இல்லாதபோது அவர்களும் இல்லை.

கடவுள் இல்லை என்று மறுப்பவர்கள் தம்முள் இருக்கும் தம்மை உணராதவர்கள். இல்லாத கடவுள் இருக்கின்ற மனிதர்களுக்குள் ஒளிந்துகொண்டிருப்பது ஒருநாள் தெளிவாகும்போது இருக்கின்ற மனிதர்கள் இல்லாதவர்களாகி இருப்பார்கள்


பத்திலனேனும் பணிந்திலனேனும் உன்
உயர்ந்த பைங்கழல் காணப் 
பித்திலனேனும் பிதற்றிலனேனும்
பிறப்பறுப்பாய் எம்பெருமானே
முத்தனையானே மணியனையானே
முதல்வனே முறையோவென்று
எத்தனையானும்  யான் தொடர்ந் துன்னை 
இனிப்பிரிந் தாற்றேனே!

(மாணிக்கவாசகர்- திருவாசகம்)



பிரசுரம். சிவத்தமிழ்   தை-2019



Sunday, November 26, 2017

காதலெனும் வடிவம் கண்டேன்!








காதலெனும் வடிவம் கண்டேன்!
-இந்துமகேஷ்


விரிந்து கிடக்கும் வானப் பெருவெளி!
உருண்டு செல்லும் புவியின் மையத்தில் நின்று வானத்தை அண்ணாந்து பார்க்கும்போதெல்லாம் அது எட்டாத உயரத்தில் இருப்பதுபோல் தோற்றம் காட்டும். ஆனால் நாம் இந்த வானத்திடையேதான் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வுமட்டும் நமக்கு வருவதேயில்லை.
பூமியில் பாதம் புதைத்தாலும் உண்மையில் நாங்கள் வானப் பெருவெளியில்தான் வாழ்கிறோம்.
நமக்கும் மேலே ஒருவனடா என்று நாங்கள் அடிக்கடி சொல்லிக்கொள்ளும் இறைவன் வானத்தில் இருந்து நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கிறான் என்றால் அவன் நம்மோடு இருக்கிறான் என்றே பொருள். 
இந்தப் பெரிய வான வெளியின் மையப் பகுதியை எப்போதாவது உங்களால் தொட முடிந்திருக்கிறதா? வானத்தையே எட்டிப்பிடிக்க முடியாதபோது அதன் மையப்புள்ளியைத் தொடுவதாவது என்கிறீர்களா? ஒவ்வொருவரும் இந்த வானப் பெருவெளியின் மையப் பகுதியைத் தொட்டிருக்கிறோமே. 
நமது மனம்தான் அது.
எங்கே நீ இருக்கிறாயோ எங்கே உன் மனது இருக்கிறதோ அந்த இடம்தான் இந்த வானப் பெருவெளியின் மையம். நமது உடலை எறிந்துவிட்டு உயிரைப் பிரித்துக்கொண்டு நாம் அந்த வானப் பெருவெளியோடு கலக்கும் அந்தப் பொழுதில் நமது உடலைச் சொல்வது மையம் என்று.
அது இந்த வானப் பெருவெளியின் மையம்.
நான் யார் என்பதையும் நீ யார் என்பதையும் அடையாளப்படுத்துவதற்காக இந்த உடல். 
ஆனால் உண்மையில் நீ என்பதும் நான் என்பதும் இருவேறு பேர் இல்லை. 
நீயும் நானும் ஒருவரே என்பது காதல். நீயும் நானும் ஒருவரையொருவர் காதலிப்பதுபோல் நாம் இன்னொருவரையும் காதலிக்கிறோமே அந்த இன்னொருவரையே கடவுள் என்கிறோம். 
நாங்கள் கடவுளின் காதலர்கள். 
ஊன் மறந்து உயிர் கலந்து ஒன்றில் ஒன்றாய் ஐக்கியப் பட்டுவிடும் அந்த உன்னத நிலைக்கு நாம் சென்றாக வேண்டும் என்பது காதலின் உச்சநிலை. இதுவே முக்தி நிலை. 
ஆனால் காதல் என்பது இன்பம் வேண்டுவது. இன்பத்தோடு இரண்டறக்கலந்தது. ஆனால் காதலில் கண்ணீர் வருகிறது. கண்ணீர் இல்லாத காதலா? அது காதல் அல்ல. 
காதல் என்பது துன்பம் கலந்த இன்பம் என்பது இயற்கை விதி. உறவும் பிரிவும் என்று எழுதிவைத்த அந்த விதி இன்பத்தையும் துன்பத்தையும் சேர்த்தே எழுதி வைக்கிறது.
என் சின்ன வயதில் எனக்கு மரண பயம் அதிகம். 
நள்ளிரவில் தூக்கத்தில் திடீரென விழித்துக் கொள்வேன். அருகில் அமைதியாகத் துயிலும் என் தாயின் முகம் பார்ப்பேன். ஒருநாள் நான் என் அம்மாவை இழந்துவிடுவேன் அவவுக்கும் மரணம் வரும் என்ற எண்ணம் என்னைக் கவ்விக்கொள்ளும். அம்மாவை அணைத்துக்கொண்டு சத்தமில்லாமல் அழுவேன். 
நானும் ஒருநாள் மரணிக்கவேண்டும் என்ற நினைப்பு அப்போது எனக்கில்லை. 
"ஏன் அம்மா..எல்லாரும் சாகத்தான் வேண்டுமா?" என்று ஒருநாள் அவவிடம் கேட்டேன்.
"பிறந்தால் சாகத்தானே வேண்டும்!" என்று சிரித்தா அவ.
"அப்ப பிறக்காமலே இருந்திருக்கலாமே?" என்றேன்.
"அவன் போடும் கணக்கை யாரும் மாற்ற இயலாது!"
அவ சொன்னதை எப்போதும் நினைத்துக் கொள்கிறேன். 
அதனால் அவ இறந்தபோது அவ இறந்ததாக என்னால் எண்ணமுடியவில்லை.
என்னுள் வாழும் அவ எப்போதும் இறந்திருக்க முடியாது. எனக்கும் மரணம் வரும். 
அப்போது திரும்ப அவவைச் சந்திக்கப்போகிறேன். 
இப்போது எனக்கும் மரண பயம் போய்விட்டது. 
இந்த உலகம் ஒருநாள் மனித சஞ்சாரமற்ற ஒரு பெருவெளியாக மாற்றம் பெறும். அப்போது நாங்கள் எங்கே இருக்கப்போகிறோம்? 
நாங்கள் பிறப்பதற்கு முன்பு எங்கே இருந்தோமோ அங்கே!
"நாங்கள் இந்த உலகத்துக்கு வந்து சில கணக்குகளைத் தீர்த்தாக வேண்டியிருக்கிறது. 
அதற்காகப் பிறந்தாக வேண்டியிருக்கிறது. பிறந்துவிட்டோம் என்பதனால் இறந்தாக வேண்டியிருக்கிறது.
ஆனால் கணக்குகள் ?
அவை தொடர்கதையாகிவிடுகின்றன.
"இத்தனைகோடி மனிதர்கள் பிறக்கிறார்கள் ஆனால் ஒரு சிலர்தானே முக்திபெறுகிறார்கள் இதனால் என்ன பயன்?" என்று சங்கராச்சாரியார் சுவாமிகளிடம் யாரோ கேட்டார்களாம். அதற்கு அவர் சொன்னாராம்: 
"ஒரு மாமரம் வளர்க்கிறோம். அதில் எத்தனையோ பூக்கள் பிஞ்சுகள் காய்கள் கனிகள்...!ஆனால் எல்லாப் பூக்களுமே பிஞ்சாவதில்லை. பிஞ்சுகள் எல்லாமே காய்களாவதுமில்லை. காய்கள் எல்லாமே கனிகளாவதுமில்லை. கனிகள் எல்லாமே பயன்படுவதுமில்லை. ஆனால் ஒரே ஒரு கனியாவது மனிதனுக்கும் பயன்பட்டு அந்தக் கனியின் விதை மண்ணில் புதைக்கப்பட்டு மறுபடியும் ஒரு மாமரம் உருவாகிறதே. அது போதுமானது. அந்த மாமரம் இன்னும் நூற்றுக்கணக்கில் ஆயிரக் கணக்கில் கனிதரும். அது பயன் தரும் அல்லவா? ஆகவே ஒருவன் ஞானியானால்கூடப்போதும் அதனால் இந்த உலகம் முழுதுமே பயன்பெறும் அல்லவா?



(வெற்றிமணி வெளியீடான எனது 
"காதலாகி கசிந்துகண்ணீர்மல்கி.." நூலிலிருந்து

Monday, April 21, 2014

எல்லாம் பொய்யெனில்...


எல்லாம் பொய்யெனில் 
பொய்யும் பொய்யே!










-இந்துமகேஷ்




குழந்தை அழுகிறது
அதை அள்ளி அணைத்து பாலூட்டி அதன் பசியைத் தணிக்கிறாள் அம்மா.
பசியடங்கிக் கண்ணயர்கிறது மழலை.

சற்று நேரத்துக்கெல்லாம் மறுபடி அதன் அழுகுரல்.
மீண்டும் அன்னையின் அணைப்பில் அவளது பாலமுதம் பருகி உறக்கம் கொள்கிறது அது.

பால்நினைந்தூட்டும் தாயின் அன்பில் அவ்வப்போது அது பசிதீhததுக் கொள்கிறதேயன்றி ஒருபோதும் நிரந்தரமாக அதன் பசி தீர்வதாயில்லை.

கருவறையிலிருந்து கல்லறைவரை தொடரும் வாழ்வில் கூடவே வருகிறது பசியும்.

பசி பசி என்று அழுகின்ற வயிற்றுக்கு உணவென்று எதையேனும் கொடுத்து அமைதிப்படுத்திவிட்டு அடுத்த காரியத்தில் கவனத்தைச் செலுத்தினாலும் அடுத்தவேளைக்கான உணவுபற்றி நினைவூட்டத் தொடங்கிவிடுகிறது வயிறு.

சில பொழுதுகளுக்கு மட்டும் வேண்டுமானால் பசியைத் தாங்கிக் கொள்ளலாம். ஆனால் நிரந்தரமாக அதை நீக்கிவிட முடியுமா? உணவுதேடித் தந்தாலன்றி வயிற்றின் ஒப்பாரி ஓய்ந்துவிடாது.


ஒருநாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏல் என்றால் ஏலாய் - ஒருநாளும்
என் நோவு அறியாய் இடும்பை கூர் என் நெஞ்சே
உன்னோடு வாழ்தல் அரிது (ஒளவையார்)

வாழ்க்கை என்பது எங்கிருந்து தொடங்குகிறது? 
வயிற்றிலிருந்துதான்!
அன்னையின் வயிற்றுக்குள் குடிகொள்ளும்  நாம் அங்கிருந்து வெளிப்படும்போது நமக்கென்று ஒரு வயிற்றுடன்தான் வருகிறோம்.
நம்மோடு கூடவே வரும் வயிற்றுக்காக - அந்த வயிற்றை வளர்ப்பதற்காக - படாத பாடெல்லாம் பட்டு நம்மோடு கூடவே இன்னும்  சில வயிறுகளையும் சுமக்க வேண்டியவர்களாகிறோம்.
பின்னர் ஒருபொழுதில் வயிற்றின் இயக்கத்தோடு வாழ்வின் இயக்கமும் ஒரு முடிவுக்கு வந்து விடுகிறது.

உயிருள்ளவரையில் தேடல்களோடு தொடரும் வாழ்வு-
ஏன் இந்தப் பாடுபடுகிறீர்கள் என்று எவரிடத்துக் கேட்டாலும் வருகின்ற முதற்பதில் -
“எல்லாம் இந்த ஒருசாண் வயிற்றுக்காகத்தான்!”

சேவித்தும்  சென்றுஇரந்தும் தெண்நீர்க் கடல்கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டு இசைத்தும் - போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம் (ஒளவையார்)


வாழ்வின் தேடல்கள் அனைத்தும் வயிற்றுக்கு அடுத்தபடியாகத்தான்.
எவ்வளவுதான் வசதி வாய்ப்புக்களைப் பெருக்கிக் கொண்டாலும் வயிறு ஒத்துழைக்காவிட்டால் அத்தனையும் அர்த்தமிழந்து போய்விடுகின்றன.
ஏழ்மையும் வறுமையும் குடிகொண்டவர்களிடத்தே பசி வந்திடப் பத்தும்  பறந்துபோம் எனில் அதனிலும் துன்பம் தருவது வசதி வாய்ப்புக்கள் இருந்தும் எதுவும் உண்ண இயலாத வயிற்றைக் கொண்டிருப்பது.

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை -தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும் 
பசிவந்திடப் பறந்துபோம் (ஒளவையார்)






பசிக்கிறது உண்கிறோம்.
மறுபடி பசிக்கிறது.
அவ்வாறெனில் முதலில் உண்டவை எங்கே மறைந்தன?
உண்ண உண்ணக் காணாமல் போகிற உணவினைப் போலவே உடல்வளர்க்கும் மனிதர்களும் ஒருநாள் காணாமல் போய்விடுகிறார்கள்.

நடமாடும்  நாங்கள் ஒருநாள் காணாமல் போவோம் என்பதே இயற்கையின் விதியாக அமைந்திருக்கிறது.

„நிலையில்லாத ஒரு வாழ்வுக்காகவா நாம் உடலெடுத்து வந்தோம்?-„
- மரணித்த உடலங்களைப் பார்க்கும்போதெல்லாம் இந்தக் கேள்வி எழுகிறது.
„எல்லாம் பொய்.. எல்லாம் மாயை...!“என்று சுடலை ஞானம் பிறக்கிறது.
வயிறு பசித்தழ ஆரம்பிக்கும்வரைதான் இந்தச் சுடலைஞானம்.

„அடுத்த வேளை உணவுக்கான வழியைப்பார்!“ என்று அரிக்கத் தொடங்கும் வயிற்றுக்கு வாழ்வின் நிலையாமை குறித்து அக்கறையில்லை. அதற்கான அவசியமும் வயிற்றுக்குக் கிடையாது.
அதற்குத் தெரிந்ததெல்லாம் பசிமட்டும்தான்.

உணவளித்தால் மறையும்பசி ..அந்த உணவு சக்திமாற்றம் பெற்றபின் மறுபடி பிறப்பெடுக்கும். 
மீண்டும் பசி - மீண்டும் உணவு.
உணவின்சக்தி உழைப்பாகி.. உழைப்பு உணவாகி.. பசிதீர்த்து 
மறுபடி உணவின் சக்தி உழைப்பாகி  உழைப்பு  உணவாகி...

பசி - உணவு - உணவின் வெளிப்பாடான சக்தி - சக்தியின் வடிவான உழைப்பு...
இதில் எது நிலையானது?
எது நிலையற்றது?
எதுவுமே நியைற்றது எனில் இது ஏன் தொடர்விதியானது?
இந்தத் தொடர்ச்சியே நிலையானது எனில் எல்லாமும் நிலையானதுதானே?
அவ்வாறன்றி எல்லாமே பொய்யெனில் இந்தப் பொய் எனப்படுவதும் பொய்தானே!


(பிரசுரம்: சிவத்தமிழ்-ஜெர்மனி 2014)




Monday, December 09, 2013

அம்மாவும் நீயே!


அம்மாவும் நீயே!















-இந்துமகேஷ்




என்னை எனக்குப் பிடித்தவனாக நான் இருக்கும்போதெல்லாம்  இந்த உலகம் எனக்கு இனிமையானதாகத் தோன்றுகிறது.
என்னை எனக்குப் பிடிக்காதவனாக நான் மாறிவிட நேரும்போதோ இந்த உலகமும் எனக்குக் கசப்பானதாக .மாறிவிடுகிறது.

எனக்குப் பிடித்தவனாக நான் இருக்கும்போது என்னைச் சூழ இருப்பவர்களெல்லாம் எனக்குப் பிடித்தமானவர்களாக இருக்கிறார்கள்
என்னைப் பிடிக்காதவனாக நான் மாறிவிட நேரும் தருணங்களில் எல்லாம் என்னருகே இருப்பவர்களுக்கெல்லாம் என்னைப் பிடிக்காது போய்விடுகிறது!

ஆயினும்-
எல்லாப் பொழுதுகளிலும் - எனக்குப் பிடித்தவர்களையும் சரி என்னைப் பிடிக்காதவர்களையும் சரி  எல்லோரையும் நான் அளவுக்கதிகமாகவே நேசித்திருக்கிறேன் -நேசிக்கிறேன் என்பதே உண்மை.

பிடித்தமானது என்பது பற்றுக்கொள்வது.
மனம் ஒன்றைப் பற்றிக்கொள்வது.

பற்றுக்களை அறுத்துக்கொள்ளும் தருணத்திலேயே மனிதன் முக்தி பெறுவது சாத்தியமாகிறது என்று முன்னோர்கள் சொல்லிவைத்தது உண்மையாக இருக்கலாம் .ஆனால் அவ்வாறு பற்றுக்களை அறுத்துக்கொள்ளும் கணத்தில்கூட முக்திக்கு இலக்கானவனாகத் தோன்றும் இறைவனின் மீதும் பற்றுக்கொள்ளவேண்டியவர்களாகத்தானே இருக்கிறோம் என்பது
வியப்பளிப்பதாக இல்லையா?

ஏதோ ஒன்றில் பிடிப்புள்ளவரைதான் வாழ்வு அர்த்தமுள்ளதாகிறது.
உன்னோடு நானும் என்னோடு நீயும் உறவுகொள்வதற்கு ஒரு பிடிப்பு இருந்தாகவேண்டும்.
ஒருவர்க்கொருவர் பிடித்தமானவர்களாக இருந்தாகவேண்டும்.
ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இது அவ்வாறு இருப்பதில்லை.
ஒருதலைப் பட்சமான அன்புதான் உலகில் மிக அதிகம்.

எனக்குப் பிடித்தமானவர்களின் எண்ணிக்கையைவிட என்னைப் பிடிக்காதவர்களின் எண்ணிக்கையே அதிகம் என்று எண்ணத்தக்கதாகவே பெரும்பாலானோரின் வாழ்வு தொடர்கிறது.

தொப்புள்கொடி உறவு என்று தொடங்குகின்ற தாய் பிள்ளை உறவில் யார் யாருக்கு அதிகம் பிடித்தமானவர்களாக இருக்கிறார்கள்?
அம்மாவுக்கு பிள்ளையா? பிள்ளைக்கு அம்மாவா?

தாய்ப்பாசம்போல் உலகில் உயர்ந்தது எதுவுமில்லை என்பதும் ஒருவனுக்குத் தாயைவிட மேலானது எதுவுமில்லை என்பதும் உலகம் எங்கணும் காணப்படும் பொது நிலை.
ஆனால் அது எந்தளவுக்குச் சாத்தியப்படுகிறது?

தன் வாழ்நாள் முழுதும் தன் பிள்ளையை நேசிக்க ஒரு தாயால் முடிவதுபோல் தன் வாழ்நாள் முழுதும் தன் தாயின்மீது பாசம் காட்ட ஒரு மகனாலோ மகளாலோ முடிகிறதா?
ஒவ்வொருவர் வாழ்விலும் பருவங்கள் மாற மாற பாசங்களும் மாறிப்போய்விடுகின்றனவே!

உலகவாழ்வில் உயரியதாகக் கருதப்படுகின்ற தாய் - பிள்ளை உறவுக்கே இந்நிலை என்றால் ஏனையவவை எம்மாத்திரம்?

பெற்றவள் உயிரோடிக்கிறவரை அவளைப் பராமரிக்க மறந்து அவள் இல்லாத காலத்தில் அவளைப் புகழ்ந்து தள்ளுவதிலும், „அம்மா! உனக்கு நான்  அதைச் செய்திருக்கவேண்டும் இதைச்செய்திருக்கவேண்டும் ஆனால் எதற்கும் நான் நாதியற்றுப் போனேனே. இப்போது உன்னை எண்ணித் துடிக்கிறேனே!“ என்று கவிதை பாடுவதிலும் கழிவிரக்கம் கொள்வதிலும் காலத்தைக் கழிக்கின்ற மக்களைத்தானே நாம் அதிகம் சந்திக்கிறோம்.

அன்னையும் பிதாவும்; முன்னறி தெய்வம் என்றும், தாயிற்சிறந்த கோயிலுமில்லை தந்தை  சொல்மிக்க மந்திரமில்லை என்றும் பெருமை பாராட்டும் அளவுக்கு அவர்களைப் பேணிப் பாதுகாக்க எல்லாப் பிள்ளைகளாலும் முடிவதில்லை என்பதே யதார்த்தம்.

தாயின் அரவணைப்பு தனக்குத் தேவைப்படும்வரை அவளது அன்பில் கட்டுண்டு கிடக்கும் பிள்ளை வளர்ந்து பெரியவனாகி தனக்கென்று ஒரு வாழ்வைத் தேடிக்கொள்ளும்போது தாயைப் பிரிவதென்பதும் தவிர்க்கமுடியாததாகிறது.
பிள்ளைமட்டுமே வாழ்வென நினைத்து அவனைப் பேணிவளர்த்த அன்னை தனித்து விடப்படுகிறாள். ஆனாலும் எஞ்சிய அவளது வாழ்வின் காலம் முழுதும் பிள்ளையின் நினைப்புடனேயே கழிந்துபோகிறது.

ஒரு பெண் ஒருத்திக்கு மகளாக சிலருக்கு சகோதரியாக சிலருக்குத் தோழியாக ஒருவனுக்கு மனைவியாக வாழ்கின்ற நிலைவரை அவள் ஒருபெண்.

ஆனால்: ஒரு உயிரைக் கருவில் சுமந்து அதைப் பெற்றெடுத்து ஒரு தாயாக அவள் உயர்வடையும்போதோ அவள் தெய்வத்துக்குச் சமானமாகிவிடுகிறாள்.
சக்தியின் வடிவமாக அவள் உருமாற்றம் கொண்டு விடுகிறாள்.

தாயைத் தெய்வமெனப் போற்றும் பண்பை மனிதன் கற்றுக்கொண்டது அவளது படைப்பாற்றலால்தான்.
எனக்கு என் அன்னை தெய்வம் என்று நான் உணர்வதுபோல் என் அன்னைக்கு அவளது அன்னை தெய்வம். அந்த அன்னைக்கு அவளது அன்னை தெய்வம் இவ்வாறே எல்லா மனிதர்க்கும் மூலமாக நிற்கின்ற ஓர் அன்னை எல்லோர்க்கும் தெய்வம். அவளே ஆதி பராசக்தி.

அவள் தெய்வத்தின் தெய்வம்.
நம்மைப் பெற்றுவளர்த்துப் பெருவாழ்வளித்து மறைந்துவிடும் தாயைப்போல் அவளும் இந்த உலகத்தை உருவாக்கிவிட்டு மறைந்தே நிற்கிறாள்.

நமது இயக்கம் என்பதும் நமது வாழ்வு என்பதும் அவள் நமக்களித்த வரம்.
நமக்கு அவள் தந்த இந்த வாழ்:வில் இடையறாத அன்பு செலுத்தி அவளைச் சென்றடைவதே நமது வாழ்வின் பயன்.

யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்யே
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின்தெளிவே தித்திக்கும்
மானே அருள்வாய் அடியேன் உனைவந்துறுமாறே!
                                                                                           (மாணிக்கவாசகர்)


(பிரசுரம்: சிவத்தமிழ் 2013)





Wednesday, December 12, 2012

கடைசிக் காலம்


கடைசிக் காலம்-




இந்துமகேஷ்.




.“கடவுள் பூமியைப் படைத்தார்!“
-இறைநம்பிக்கையாளர்களின் கருத்து அது.

„கடவுள் பூமியைப் படைத்தார் என்றால் அந்தக் கடவுளைப் படைத்தது யார்?“
-இறைமறுப்பாளர்கள் எழுப்பும் கேள்வி இது.

„இந்த உலகத்தைப் படைத்தவன், இந்த உலகத்தில் வாழும் உயிர்களுக்கெல்லாம் மூலமானவன் ஏன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை? எவருக்கும் புலனாகாமல்  அவன் மறைந்திருப்பானேன்?“

-கேள்விகள் காலகாலமாகத் தொடர்கின்றன.
ஆனால், „கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்“ என்பதுதானே யதார்த்தம்.

தத்தம் இதயக்கதவுகளைத் திறந்து வைத்துக்கொண்டு இறைவனின் வருகைக்காக நம்பிக்கையோடு காத்திருப்பவர்கள்; அவனைக் கண்டுகொள்கிறார்கள் என்பதே 
ஆன்மீகவாதிகளின் சித்தாந்த முடிவு.
ஆனால் அது எப்போது?
காலம் கனியவேண்டாமா?
ஆனால் அதுவே கடைசிக் காலமாகவும் கணிக்கப்படுகிறது.

உயிரோடு இருப்பவர்கள் அல்ல. மரித்தபின்னரே அவர்கள் இறைவன் பாதம் அடைந்து விட்டார்கள் என்று கருதப்படுகிறார்கள்.

உயிரோடு இருக்கும்போது- இந்த உடலோடு நடமாடும்போது- தோன்றாத இறைவன்  உடல் நீக்கியபின்தான் தோன்றுவான் எனில், அதில் நம்பிக்கை கொள்ள மறுக்கிறது மனம்.
நிச்சயமற்றதாய் நீங்கிப் போகிறது காலம்.
உலகத்துப் பற்றுக்களோடு போராடிப் போராடி ஓய்ந்து போகிறது மனமும் உடலும்.

வாழ்வின் நிலையாமை குறித்த கேள்விகளுக்குப் பின்னால் நின்று சிரிக்கிறான் இறைவன்.
நம்மோடு வாழ்ந்து முடித்தவர்கள் எவரும் தத்தம் கடைசிக்காலத்தில் கடவுளைக் காட்டிப் போவதாகத் தெரியவில்லை.
இன்னும் இன்னும் கேள்விகளையே எச்சங்களாகக் கொட்டிப் போயிருக்கிறார்கள்.

நிகழ்காலத்துக்கு வழிகாட்டுகிறோம் என்பவர்களும் தத்தம் சுகமே குறியாய் வைத்துக் காரியமாற்றுகிறார்கள்.

புனிதர்கள் என்று போற்றப்படும் சிலரும் ஒருசில பொழுதுகளிலேயே போலிகளாய் முகத்திரை கிழிக்கிறார்கள்.
„கடவுள் எங்கே?“
-தேடல்களில் தீவிரமானவர்கள் இன்னும் இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

கடவுள் இருக்கிறான் என்று ஒத்துக்கொள்பவர்களும்கூட அவ்வப்போது சந்தேகப் பார்வை விரிக்கிறார்கள்.
„உண்மையிலேயே கடவுளை நம்மால் காணமுடியுமா?“ என்று அவ்வப்போது அலைபாய்கிறார்கள்.
„கடவுளை எவராவது கண்ணால் கண்டதுண்டா? சொல்லுங்கள்!“ என்கிறார்கள்.

„கடவுளை வெறும் ஊனக் கண்களால் காணமுடியாது. காற்றுக்குள் உலாவரும் உனது
கண்:களால் அந்தக் காற்:றைக் காணமுடிகிறதா?“ என்றொரு விடையை வைத்தால்-
"காற்றைக் காணாவிட்டாலும் அதை உணரமுடிகிறதே. காற்றின் தொடுகையில் என் சுவாசத்தின் மூலம் அதைக் கண்டுகொள்ள முடிகிறதே. கடவுள் அப்படி எந்த உணர்தலிலும் தோன்றவில்லையே!“

இதற்கு என்ன பதில் சொல்வது?

உணர்தல்தான் கடவுள் எனலாமா?

பல்லாண்டுகளுக்கு முன்னால் விவேகானந்தன் எனும் நரேந்திரனிடத்தும் இந்தக் கேள்விகள் இருந்தன.
„கடவுளைக் கண்டவர்கள் எவராவது இருக்கிறார்களா? அப்படி எவராவது இருந்தால் அவரை நான் சந்திக்க முடியுமா?“

கேள்விகளுக்குப் பதில்தேடி அலைந்தபோதுதான் அவனுக்கு ராமகிருஷ்ணரின் சந்திப்பு நிகழ்ந்தது.
(ராமகிருஷ்ணருடன் தனக்கு நேர்ந்த ஓர் ஆன்மீக அனுபவத்தை விவேகானந்தர் தனது நூலொன்றில் விபரித்திருந்தார்.)

விவேகானந்தர் நரேந்திரனாக இருந்த 1881ம் ஆண்டின் ஒருபொழுதில்-
ராமகிருஷ்ணரைச் சந்திக்கச் சென்றிருந்தான் நரேந்திரன்.
அவனைத் தனது அறைக்குள்  அழைத்துச் சென்றார் அவர்.
பிறகு கதவைத் தாளிட்டார்.
„எனக்கு ஏதோ உபதேசம்; செய்யப் போகிறார் போலும்!“ என்று நினைத்தான் நரேந்திரன். ஆனால் அவர் சொன்னதும் செய்ததும் அவனது கற்பனைக்கும் எட்டாததாயிருந்தது. நரேந்திரன் எதிர்பாரா நிலையில் அவர் அவனது கைகளைப் பற்றிக்கொண்டார். அளவுகடந்த மகிழ்வு அவரை ஆட்கொண்டிருந்தது. அவரது கண்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தன. பின்னர் அளவற்ற பரிவுடன் முன்பே அவனை நன்கு அறிந்தவர்போல் பேசினார்.
„இவ்வளவு காலம் கழித்து வந்திருக்கிறாயே இது நியாயமா? நான் உனக்காகக்  காத்திருக்கிறேன் என்பதை ஒருமுறையாவது நினைத்துப் பார்த்தாயா?  உலக ஆசைபிடித்த மனிதர்களின் பேச்சைக் கேட்டுக்கேட்டு என் காதுகள் எரிந்துபோய்விட்டன. என் மனத்தில் பொங்கும் உள்ளுணர்வுகளைப் புரிந்துகொள்ளக்கூடிய ஒருவரிடம் சொல்ல நான் எவ்வளவு துடித்துக்கொண்டிருக்கிறேன்.!“
தேம்பித்தேம்பி  அழுதபடியே அவர் பேசிக்கொண்டிருந்தார்.
தனது இரண்டு கைகளையும் கூப்பி தெய்வத்தை வணங்குவதுபோல் அவனை வணங்கியபடி அவனைப் பார்த்து, „பிரபோ... நாராயணனின் அவதாரமாகிய மானிட வடிவே தாங்கள் என்பதை நான் அறிவேன். மனிதகுலத்தின் துயர் தீர்க்கவே இப்பொழுது அவதாரமெடுத்திருக்கிறீர்கள் என்பதையும் நான் அறிவேன்!“ என்றார்.
„கொஞ்சம் காத்திருங்கள் இதோ வருகிறேன்!“ என்றபடி அடுத்த அறைக்குள் நுழைந்தவர். திரும்பியபோது அவரது கைகளில் வெண்ணெய் கற்கண்டு இனிப்பு முதலியன இருந்தன. அவற்றைத் தனது கையால் அவனுக்கு ஊட்டத் தொடங்கினார்.
பிறகு அவனது கைகளைப் பிடித்துக்கொண்டு „கூடியவிரைவில் நீ மட்டும் தனியாக வருவதாக சத்தியம் செய்!“ என்றார். அவருடைய வேண்டுகோளை மீற முடியாமல் சரி வருகிறேன்!“ என்றான் நரேந்திரன்.

கடவுளைக் கண்டவரைக் காணச் சென்றவன், கடவுளைக் காட்டுவேன் என்று அவனுக்கு உறுதியளித்தவர், அவனையே கடவுளின் அவதாரமாகக் கருதுகிறார் என்று அறிந்தபோது திகைத்துப் போனான்.
இவருக்குப் பைத்தியமோ என்றுகூட அவன் நினைத்தான்.
ஆனால் அவரது ஏனைய செயல்களும் நடத்தையும் அவர் பைத்தியமல்ல, அவர் ஒரு ஞானி என்பதை அவனுக்கு உணர்த்தின.

தனிமனிதனின் வாழ்வின் காலம் மிகக் குறுகியது.
ஆனால் மனிதகுல வரலாறு என்பது நீண்ட ஆயுளைக் கொண்டது. இது ஆயிரக்கணக்கான அல்லது இலட்சக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருப்பது.
தனியே பிறந்து தனியே மரணித்துப் போனாலும் ஒவ்வொருவரது உயிரணுவும் இந்த மனிதகுலத்தின் எங்காவது ஓர் இடத்தில் தொடர்ந்து வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.
முதலும் முடிவும் அறியமுடியாது ஒளிந்திருக்கும் இறைவன் போல், மனித குலத்தின் முதலும் முடிவும் இன்னும் தேடலுக்குள்தான் இருக்கின்றன.

விடைதெரியும்போது மனிதன் கடவுளிலும் கடவுள் மனிதனிலும் கலந்திருப்பார்கள்

அதுவே கடைசிக் காலம் எனக் கொள்ளலாமா?
முடியாது.
ஏனெனில் கடைசிக்காலம் என்பதும் இன்னொன்றின் தொடக்க காலமாக இருக்கும்.



(பிரசுரம்: சிவத்தமிழ் -2012)
























Thursday, February 16, 2012

ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்














-இந்துமகேஷ்












"நலமாக வளமாக பேரோடும் புகழோடும் பல்லாண்டு வாழ்கவென மனதார வாழ்த்துகிறேன்! "

-அன்புக்குரியவர்களிடமிருந்து அவ்வப்போது பகிர்ந்துகொள்ளப்படும் வாழ்த்துச் செய்திகள்!


நம்மை வாழ்த்துவதில் அவர்களும் அவர்களை வாழ்த்துவதில் நாமும் மகிழ்கிறோம்.


“மனதார வாழ்த்துகிறார்!” என்கிறோம். வெறும் வார்த்தைகளாக மட்டும் இல்லாமல் உண்மையாகவே ஒருவரது உள்ளத்திலிருந்து வெளிப்படும் வாழ்த்துக்கள் வல்லமை நிறைந்தவை.

நமது வாழ்த்துக்கள் எவரைச் சென்றடைகிறதோ அவர் மகிழ்வுறும்போது நாமும் மகிழ்கிறோம். நமது அன்பு பலப்படுகிறது. நமது வாழ்வில் அக்கறைசெலுத்தவும் ஒருவர் இருக்கிறார் என்கிற தெம்புடன் வாழ்வைத் தொடர அது வழிவகுக்கிறது.


இதற்கு எதிர்மாறாக வாழ்த்துகின்ற வாய்கள் தூற்ற ஆரம்பித்தால் என்னாகும்? வாழ்க்கையின் மீதான பற்றுதலைத் தொலைத்துவிட்டு மரணத்தை நோக்கி ஓடிவிடத் தூண்டும் அது.


ஒருகாலத்தில் "வாழ்க! வாழ்க!!" என்று வாழ்த்துப் பெற்றவர்கள் பலரும் பின்னொரு நாளில் "ஒழிக!!!" என்ற தூற்றுதலுக்கு இலக்காகி உயிரிழந்துபோன நிகழ்வுகளையும் இந்த உலகம் சந்திக்கத்தான் செய்கிறது.

நல்லது எது கெட்டது எது என்பதைத் தெளிந்து தெரிந்து வாழ்கின்ற ஒருவன் தன் மனம்போனபோக்கில் வாழ்க்கையைத் திசை திருப்பிக் கொள்ளும் போதுதான் வாழ்க என்பது ஒழிக என்பதாக மாற்றம்பெறுகிறது.


ஒருவர் வாழ்த்தப் பெறுவதென்பதும் தூற்றப்படுவதென்பதும் அவரவரது செய்கைகளைப் பொறுத்தே அமையும்.


நமது செயல்களும் அதன் விளைவான நன்மை தீமைகளும் இடத்துக்கும் காலத்துக்குமாக மாறிவிடுவதுமுண்டு


உலகத்தின் பொதுநீதியாக நல்லது கெட்டது என்பதை இப்படிச் சொல்லலாம்:

“நீ செய்யும் ஒரு காரியத்தினால் பிறவுயிர் எதற்கும் தீங்கு விளையாதிருக்குமாயின் அது நல்லது. அந்தக் காரியத்தினால் பிற உயிர் துன்பப்பட நேருமாயின் அது கெட்டது!”


"நாம் துன்பம் செய்யாமல் விட்டுவிடுவதால்மட்டும் பிறவுயிர்கள் துன்பமின்றி வாழ்ந்துவிடுமா? ஏதோ ஒரு வகையில் அவை துன்பம் அனுபவிக்கத்தானே செய்கின்றன? ஏன் நாம்கூட துன்பத்துக்கு இலக்காகிறவர்கள்தானே! துன்பம் இல்லாமல் வாழ்க்கை ஏது? இன்பமாகத் தெரிவதெல்லாம் துன்பத்தின் மறுபகுதிதானே!"

-இவ்வாறெல்லாம் நமது மனம் நம்மைக் கேட்பதுண்டு.

இயற்கை நமக்குத் துன்பத்தைத் தருமாயின் அதிலிருந்து மீண்டுவர நாம் வழிகளைக் கண்டிருக்கிறோம் அல்லவா?

மழையிலிருந்து காத்துக்கொள்ள குடையும், வெயிலிலிருந்து காத்துக்கொள்ள செருப்பும் நம்மால் கண்டயறிப்பட்டிருக்கிறதல்லவா? இயற்கை தரும் துன்பங்களிருந்து தப்பித்துக்கொள்ள முடிந்த எங்களால் மற்றவர்க்குத் துன்பம் தராமல் வாழ்தல்மட்டும் இயலாமற் போகுமா?


ஆனால், ஆசை வழிப்பட்ட மனம் தனது மகிழ்ச்சியைமட்டுமே முன்னிலைப் படுத்துகிறது. தனது சுகத்துக்காக எதையும் செய்யலாம். மற்றவர்களைப் பற்றி அக்கறை கொள்ள வேண்டியதில்லை என்று கங்கணம் கட்டிக் காரியமாற்றுகிறது.


இந்த வாழ்க்கை என்பது நிரந்தரமற்றது. வாழ்கின்ற காலமோ மிகவும் சொற்பம். இதற்குள் அனுபவிக்க வேண்டிய இன்பங்களையெல்லாம அனுபவித்து முடித்துவிடவேண்டியதுதான் என்று அது துடிக்கிறது.


நாம் எப்படி வாழ்ந்தாலும் எல்லோர் முடிவும் ஒன்றுதான். நல்லவனாக வாழ்வதால்மட்டும் நான் மரணத்திலிருந்து தப்பிக்கொள்ள முடியுமா என்று தனது தீமைகளுக்குக் காரணம் கற்பிக்கிறது.

வாழ்க்கை நிரந்தரமற்றது என்ற எண்ணம் பெரும்பாலானவர்களின் மனத்தை ஆக்கிரமித்திருப்பதால்தான் வன்முறைகள் பரவிக்கிடக்கின்றன.
உயிர் நிரந்தரமானது என்ற உண்மை புரிந்த சித்தாந்திகள் உண்மைக்குள் உண்மையாய் ஒளிந்திருக்கும் பரம்பொருளைத் தெரிந்தார்கள். தாம் தெரிந்ததை - தெளிந்ததை மற்றவர்க்கும் சொல்லி வாழ்க்கை நெறியோடு இறைவனைக் கண்டறியும் வழியையும் போதித்தார்கள்.
நம்மைப் படைத்த பரம்பொருளே நம்மைக் காக்கவும் செய்கிறான்.

ஒருநாள் இந்த ஊனுடலை அழிக்கும் அவன் நம் உயிர்களின்மீது தன் அருளைப் பொழிகிறான்.


சிற்றின்ப மாயைகளில் சிக்கித் தவிக்கும் நாம் இந்த உடலை நீத்தாலன்றி அவனை அடைய முடியாது. அவனது அருளை நாம் பருகவேண்டுமாயின் இந்த உடலெனும் சிறையிலிருந்து நாம் விடுபட்டாகவேண்டும் என்பதே இயற்கையின் விதி.


கருணையே உருவான இறைவன் நம்மை உருவாக்கிக் காக்கிறான் எனில் நம்மை அழித்துவிட அவன் விரும்புவானா? ஆனால் அவ்வாறு அவன் விரும்புகிறான் எனில் இந்த உடலின் மறைவுக்குப்பின்னால் அவனது கருணையை நம்மீது பொழிய அவன் காத்திருக்கிறான் என்றே கொள்ளவேண்டியிருக்கிறது.


ஆக்குவதும் காப்பதும் மட்டுமே அவன் கருணையல்ல, அழிப்பதும் அருள் தருவதும்கூட அவன் கருணையினால்தான்.

ஆக்கம் அளவிறுதி இல்லாய்! அனைத்துலகும்

ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்..

என்று மாணிக்கவாசகன்போல் இறைவன் திருவடி நிழலை நாடுதலே நமது வாழ்வின் நோக்காக அமையட்டும்.





(பிரசுரம்: சிவத்தமிழ் 2012)

Total Pageviews