Thursday, October 28, 2010

அறிவும் உணர்வும்



அறிவுக்கும் உணர்வுக்கும் இடையிலான போட்டி ஒவ்வொரு கணத்திலும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

அறிவுபூர்வமான காரியங்களுக்கும் உணர்வுபூர்வமான காரியங்களுக்குமிடையே ஒரு நீண்ட இடைவெளி இருக்கிறது.அதனால்தான் அறிவுபூர்வமாக எடுக்கப்படும் முடிவுகளுக்கும் உணர்வுபூர்வமாக எடுக்கப்படும் முடிவுகளுக்கும் இடையே முரண்பாடுகளையும் நாம் காணமுடிகிறது.
முன்னரே ஏற்பட்ட அனுபவங்களே அறிவு பூர்வமாக ஒருவரைச் செயற்படத்தூண்டுகிறது.

அனுபவங்களின் வாயிலில் அப்போதுதான் வந்து நிற்பவனுக்கு அறிவுபூர்வமாகச் சிந்திக்க அவகாசம் இருப்பதில்லை.உணர்வுபூர்வமாகவே அவன் செயற்படத் தயாராகிவிடுகிறான்.

முதியவர்கள் ஆலோசனைகள் சொல்வது அவர்கள் அறிவுபூர்வமாகச் சிந்திக்கிறார்கள் என்பதை அர்த்தப்படுத்துகிறது.இளையவர்கள் எதைப்பற்றியும் சிந்திக்காமல் செயலாற்றுவது அவர்களது உணர்ச்சித் துடிப்பை வெளிப்படுத்துகிறது.

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பெரும்பாலான துயரங்கள் ஏன் ஏற்படுகின்றன என்றால் அவர்கள் உணர்வுபூர்வமாகவே செயலாற்றுகிறார்கள் என்ற ஒரேயொரு காரணத்தால்தான்.

பந்தபாசங்களுக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் மனிதன் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் வாழ முடிவதில்லை. மற்றவர்களது உணர்வுகளை மதித்து இவன் தன் உணர்வுகளைப் பரிமாறிக் கொள்வதால் பெரிதான பாதிப்பு எதுவும் ஏற்படாது என்றாலும் உணர்வுகளில் புரிதல் இல்லாதபோது விபரீதங்களுக்கே அது வித்தாகிவிடுகிறது.

அன்பு பாசம் காதல் நட்பு என்று வகைப்படுத்தப்பட்ட அன்பின் உணர்வுகளும் பரிமாறிக்கொள்ளப்படும் விதத்தில் பரிமாறிக்கொள்ளப்படாதவிடத்து பாதகம் விளைந்து விடுகிறதே! பலன்தரும் அதன் நிலையே இத்தகையது என்றால் ஏனைய தவறான உணர்வுகள் எத்தகைய தீங்கு விளைவிக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

Tuesday, August 17, 2010

இல்லாதவர்கள்....

-இந்துமகேஷ்
„உருவாய் அருவாய் உளதாய் இலதாய்...!“

- வாரியார் சுவாமிகளின் தெய்வீகக் குரல் என்னருகில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஒலித்தட்டிலிருந்து வெளிப்படும் அந்தக் குரல் அறையெங்கும் வியாபித்து என் மனச்சிறைக்குள்ளும் புகுந்துகொள்கிறது.


அதிகாலைகளிலும் இரவுத் துயிலுக்கு முன்பாகவும் என்னருகில் ஒலித்துக் கொண்டிருக்கும் தேவகானக் குரல்களுக்குச் சொந்தக்காரர்கள் சிலரில் சீர்காழி கோவிந்தராஜன், கே.பி.சுந்தராம்பாள், பெங்களுர் ரமணியம்மாள், திருமுருக கிருபானந்தவாரியார் ... இன்னோரன்ன இசைத்தென்றல்கள் இப்போது இந்த உலகத்தில் இல்லையாம் எல்லோரும் மரணித்துப் போய்விட்டார்களாம். சொல்கிறார்கள்.

மெய்தானா? இந்த உலகத்தில் இல்லாதவர்கள் எப்படி எப்போதும் என்னருகிலேயே இருக்கிறார்கள்.?

இது விஞ்ஞானத்தின் வளர்ச்சி என்கிறார்கள் நாத்திகவாதிகள். இறந்தவர்கள் இறந்ததுதான். அவர்கள் இப்போது இந்த உலகத்தில் இல்லை. இனிமேலும் இருக்கப் போவதில்லை என்று அவர்கள் வாதிடுகிறார்கள்.


மரணம் என்பது இந்த உடல்களின் மறைவைமட்டும்தானே குறிக்கிறது? ஆன்மாக்களை அல்லவே! அவர்கள் தம் உடல்களோடு காட்சி தரவில்லை என்பதனால் அவர்கள் இல்லை என்று ஆகிவிடுமா? எடுத்துவந்த உடல்களுக்கான காரண காரியங்களை நிறைவு செய்துவிட்டு அவர்கள் திரும்பிப் போயிருக்கிறார்கள். ஒருவேளை இந்த உலகத்தில் இன்னோர் வடிவத்தில் அவர்கள் நடமாடிக் கொண்டிருக்கவும் கூடும்.


பிறப்பும் மரணமும் எப்போதாவது ஒருநாளில் ஒவ்வொருவருக்கும் சம்பவிக்கிறது என்று எல்லோரும் தப்புக்கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஓவ்வொரு உடலும் தினம் தினம் பிறந்து தினம் தினம் மரணித்துப் போகும் உண்மை பெரும்பாலானவர்களுக்குப் புரிவதே இல்லை.


“நேற்றிருந்தார் இன்றில்லை என்னும் நிலையாமை உடைத்து இவ்வையம்!” என்று ஆன்றோர் சொன்னது உடல்களின் மரணத்தை.

குழந்தையாய் என் தாயின் கைகளில் தவழ்ந்த நான் இன்று கிழவனாய் என் பேரக் குழந்தைகளைக் கைகளில் ஏந்திக்கொண்டிருக்கிறேன். என்னுள்ளிருந்த குழந்தையைத் தாங்கிக் கொண்டிருந்த என்னுடைய தாத்தாவைமட்டுமல்ல என்னுள்ளிருந்த அந்தக் குழந்தையையும் இப்போது காணோமே!மரணித்தப் போனது என் தாத்தாமட்டுமல்ல என்னுடலில் குழந்தையாக இருந்த நானும்தான். குழந்தையான நான்மட்டுமா? சிறுவனாக இருந்த நான், இளைஞனாக இருந்த நான், நடுத்தரவயதுக்காரனாக இருந்த நான்…எங்கே போனேன்.?

இருக்கிறேன். ஆனால் இல்லை!

இல்லை என்பதனால் நான் இல்லாமல் போவதும் இல்லை. இப்போது முதுமையை அனுபவித்துப் பார்க்கும் நான் முற்றிலுமாய் மறையும் கணத்தில் இந்த உலகம் சொல்லும் அவன் இல்லை என்று.ஆனால் அப்போது யாராவது சிவத்தமிழில் இந்தக் கட்டுரையை வாசிக்க நேர்ந்தால் அந்தக் கணத்தில் அவர்கள் உணரக்கூடும்- நான் அவர்கள் அருகிலேயே இருக்கிறேன் என்பது!


ஒவ்வொரு உயிரும் இயற்கையின் அங்கம் என்றானபோது இந்த இயற்கை உள்ளவரை ஓவ்வொரு உயிரும் நிலைத்திருக்கும் என்பதுதானே உண்மை. இயற்கைக்கு நிரந்தர அழிவென்பது ஒருபோதும் இருக்கப் போவதில்லை. ஆகவே அதன் அங்கமான உயிர்களுக்கும் அழிவில்லை.

உயிhகள் நிரந்தரமானவை எனும்போது அதைப் படைத்த இறைவனும் நிரந்தமானவனே. இருக்கிறான் என்றாலும் இல்லை என்றாலும் அவன் நிரந்தரமானவன் என்பதில்சந்தேகத்துக்கு இடமில்லை.


வாரியார் சுவாமிகள் என் அறைக்குள் திரும்பவும் பாடிக் கொண்டிருக்கிறார்:


„உருவாய் அருவாய் உளதாய் இலதாய்...

மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்

கருவாய் உயிராய் கதியாய் விதியாய்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!”

Saturday, January 02, 2010

கேள்விக்கென்ன பதில்?



















-இந்துமகேஷ்




வாழ்க்கை கேள்விகளால் நிறைந்தது.
பதில்கள் கிடைக்கிறதோ இல்லையோ கேள்விகள் நிறைந்து வழிகின்றன.
பதில்களுக்காகக் காத்திருப்பவர்களும் பதில்களைத் தேடும் முயற்சியில் ஈடுபாடு காட்டுபவர்களுமாய்... வாழ்க்கை நகர்கிறது.
எல்லோரது வாழ்வும் சில கேள்விகளோடுதான் முற்றுப்பெறுகின்றன.

வாழ்பவர்கள் பதில்களுக்காய் காத்திருக்கிறார்கள். ஆனால் என்றோ ஒருநாள் இவர்களும் கேள்விகளுடனேதான் தம் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்கள்.
என்ன? ஏன்? எதற்கு? எப்படி? எதனால்? எங்கே? எது? எவர்? ....என்று நீண்டு செல்லும் கேள்விகளின் வரிசையில் எங்கோ ஒரு புள்ளியில் எல்லோருமே நிற்கிறார்கள்.
பதிலுக்காகக் காத்துக்கொண்டு அல்லது பதிலைத் தேடிக்கொண்டு!

„உலக வரைபடத்தில் உனது நாடு எங்கே இருக்கிறது என்று காட்டு!“
- ஒரு மாணவனிடம் ஆசிரியர் கேட்கிறார்.
மாணவனுக்குத் தெரியவில்லை. உலகவரைபடத்தில் ஆட்காட்டிவிரலால் வட்டமடித்துக்கொண்டு விழிக்கிறான் அவன்.
„தெரியுமா தெரியாதா?“
-ஆசிரியர் அதட்டுகிறார்.
„தெரியாது!“
-முணுமுணுப்பாய் வரும் பதிலோடு கூடவே அதை உறுதிப்படுத்தும் விதமாகத் தலை அசைகிறது.
„இதுகூடத் தெரியவில்லை! போடா போ.. போய் அந்த வாங்கின்மீது ஏறிநில்!“
அவனுக்கான தண்டனை அது.
„வாங்கில் ஏறி நின்றால் எனது நாடு தெரியுமா..?“
-வெகுளித்தனமாகக் கேட்கிறான் அவன்.

அவனுக்கான தண்டனை என்பது அவரது கேள்விக்கான பதில் அல்ல என்பது ஆசிரியருக்குத் தெரியும்.
அதுவே அந்தக் கேள்விக்குப் பதிலும் அல்ல.
அந்தத் தண்டனை அவனது முயற்சியின்மைக்கானது. ஆரம்பத்தில் ஆசான் கற்றுத் தரும்போது அலட்சியமாக இருந்துவிட்டு கேள்வி எழும்போது பதில் தெரியாமல் விழிக்கும் அறியாமைக்கானது.
உண்மையில் உலகவரைபடத்தில் அவனுடைய நாடும் இருக்கிறது. ஆனால் உண்மையாக அது அவனது நாடு அல்ல. அதாவது அவனது உண்மையான நாடு அந்த வரைபடத்தில் இல்லை. அது இந்த உலகத்தில் இருக்கிறது.

எத்தனை கேள்விகள் உலகத்தில் தோன்றினாலும் அத்தனை கேள்விகளும் ஒரு முற்றுப் புள்ளியில்தான் வந்து தரிக்கின்றன.
அந்தப் புள்ளியே கடவுள்.
சந்தேகமிருப்பின் உங்களுக்குள் ஒரு கேள்வியை எழுப்புங்கள். அந்தக் கேள்விக்கான விடையைத் தேடுங்கள். பதில் கிடைத்திருந்தால் அந்தப் பதிலிலிருந்து இன்னொரு கேள்வி என்று இப்படியே கேள்விகளைத் தொடருங்கள். விடைகாண முடியாத ஒரு கட்டத்தில் அந்தக் கேள்விகள் வந்து தரிக்கும். எப்போது ஒரு விடைகாணமுடியாத கேள்வியில் நீங்கள் வந்து நிற்கிறீர்களோ அப்போது இறைவன் தெரிவான். இதுவே யதார்த்தமானது.

ஒரு விடைகிடைத்தபின் அதற்குமேல் கேள்விகள் எழுப்பாதவன், எந்தக் கேள்விக்கும் விடைக்கு அவசியம் இல்லை என்று நினைப்பவன், தன்னை முற்றும் அறிந்தவன் என்றும் பகுத்தறிவுவாதி என்றும் சொல்லிக் கொள்வதன்மூலம் தொடர்ந்து தேடும் எண்ணம் இல்லாமல் உலக சுகங்களுக்கான விடயங்களில் மட்டும் மூழ்கிப்போய் அதற்கு ஓர் எல்லையை வகுத்துக்கொண்டிருப்பதால் அவன் அதற்குமேல் கேள்விகளை எழுப்புவதில்லை.
முற்று முழுதான அவனது ஒரே விடை: “கடவுள் என்று எதுவுமே இல்லை!”

அப்படிச் சொல்பவன் தனக்குள்ளிருக்கும் தன்னைத் தேடிப் பயணிப்பதில்லை. அந்தத் தேடுதலுக்கான கேள்விகள் எதுவும் அவனிடம் இல்லை.

ஆனால் தேடத் தயங்காதவர்களோ கேட்கவும் தயங்குவதில்லை.
தன்னைத்தானே கேட்டுக்கொள்ளும் ஒவ்வொரு கேள்விக்கும் இவன் கடவுளிடம் பதில்களைக் கண்டடைகிறான். அதாவது கடவுளையே பதிலாகக் காண்கிறான். அதனால் கடவுளிடமே பதில்களைத் தேடுகிறான்.

வாழ்கின்ற காலம்வரை உலகவாழ்வுக்கான தேடுதல்கள் எத்தனை அவசியமோ இந்த உலகவாழ்வுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும்போது அமைதியாக விடைபெறுவதற்கும் ஒரு தேடுதல் அவசியம்.
அதை உணாந்தவனே ஆன்மீகவாதியாகிறான்.

“நான் நாத்திகவாதி!” என்று சுயதம்பட்டம் அடித்துக்கொள்ளும் மனிதர்களிடத்தும் இறைவன் உறைந்திருக்கிறான் என்பதை ஆன்மீகவாதி உணர்ந்தே இருக்கிறான்.
“என்னிடத்தும் கடவுளா?” என்று ஏளனச் சிரிப்புச் சிரிக்கும் நாத்திகவாதி, “நான்தான் கடவுளே இல்லை என்று சொல்கிறேனே!” என்று ஒட்டுமொத்தமாகக் கூறிக் கொண்டிருந்தாலும், “என்னிடத்தும் கடவுளா?” என்று அவன் கேட்க ஆரம்பித்துவிட்டால் போதும் அவனது அந்தக் கேள்விக்குப் பதிலாக அவனுள் இருக்கும் இறைவன் வெளிப்படுவான்.
கேள்வி எழுப்பப்பட்டாலும் எழுப்பப்படாவிட்டாலும் பதில் என்பது நிச்சயமானது. நிரந்தரமானது.
இறைவனும் அவ்விதமே!


யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக் கென்கடவேன்
வானேயும் பெறில் வேண்டேன் மண்ணாள்வான் மதித்துமிரேன்
தேனேயும் மலர்க்கொன்றைச் சிவனேஎம் பெருமான்எம்
மானேஉன் அருள்பெறுநாள் என்றென்றே வருந்துவனே!
(மாணிக்க வாசகர்)
(பிரசுரம்: சிவத்தமிழ் 2010)

Total Pageviews