Wednesday, July 30, 2008

ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி...


-இந்துமகேஷ்






அடிக்கடி வரும் மரணச் செய்திகள்...

எதிர்காலத்துக்காக ஏங்கும் இளசுகளிலிருந்து, வாழ்ந்துமுடித்துவிட்ட பெரிசுகள் வரை..! மரணத்துக்கு வயதென்ன? ஒவ்வொருவருக்கும் ஒரு கணக்கை வைத்துக்கொண்டு காலன் காரியமாற்றிக் கொண்டிருக்கிறான். நாம் நமது வாழ்க்கைக் கணக்கைச் சரிபார்த்து ஒப்புவிப்பதற்குள் அவன் நமது கணக்கை முடித்துவிடுகிறான்.


வாழ்க்கைக் கணக்கைச் சரியாகப் போடத் தெரியாமல் ஏனோதானோவென்று கிறுக்கித் தள்ளிவிட்டு காலனின் முன்னால் போய் கலங்கி நிற்பவர்களே அதிகம்.
வாழ்வின் நெறிமுறைகளைப் பகுத்தறியத் தெரிந்த மனிதன் இந்த வாழ்வைத் தந்த இறைவனைத் தனக்குத் தெரியாது என்று சொல்லிக்கொள்ளும்போதே அவன் தன் வாழ்க்கைக் கணக்கில் தவறுவிட ஆரம்பிக்கிறான்.


“வாழ்க்கை வாழ்வதற்கே! இருக்கிறபோதே அனுபவிக்க வேண்டியவைகளை அனுபவித்துவிட வேண்டும் என்று ஆசைகளின் வழியே அலைபாயத் தொடங்குகிற மனசு. ஓட முடிந்தவரை ஓட்டம்!..பிறகு?


வைத்தியசாலைகள் நிறைந்து வழிகின்றன.+

“முந்தினமாதிரி இப்ப என்னாலை ஒண்டும் செய்ய முடிகிறதில்லை!” “ஒண்டுக்கும் உதவாமல் இப்பிடிக் கிடந்து சீரழிகிறதைவிட போய்ச் சேர்ந்திட்டால் நல்லதுபோலக் கிடக்குது!”

-முனகல்கள் கேட்கின்றன.


இப்போதும் வாழும் ஆசை தொலைந்து போய்விடவில்லை! ஒத்துழைக்க மறுக்கிற உடம்போடு எத்தனை காலத்துக்குத்தான் உயிர்வாழ முடியும்? ஒன்றுமட்டும் தெளிவாகத் தெரிகிறது. இந்த உடம்புக்குள் இருக்கிற உயிர்மட்டும் இன்னும் இளமையாகத்தான் இருக்கிறது. அது என்றும் இளமையானது என்ற ஞானம் கனிகிறபோதுதான் இறைவன் என்று ஒருவன் இருக்கிறான் என்ற உண்மையும் தெளிவாகிறது.


"நந்தவனத்திலோர் ஆண்டி -அவன்

நாலாறுமாதமாய்க் குயவனைவேண்டி

கொண்டுவந்தான் ஒருதோண்டி -அதைக்

கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி!"

-எங்கிருந்தோ ஒரு சித்தனின் குரல் கேட்கிறது!


பத்துத் திங்கள் அன்னையின் வயிற்றில் குடிகொண்டு வளர்ந்த உடலை எனக்கென்று வாங்கிவந்து விரும்பியபடியெல்லாம் கூத்தாடியாயிற்று. மீண்டும் போகும்போது இந்த உடலை எறிந்துவிடத்தான் வேண்டும்.

“என்ரை மோனே!” என்று பாசம்காட்டிய என் தாயை இப்போது காணவில்லை!

“என்ரை தாத்தா!” என்று என்னை அடையாளப்படுத்துகிற பேரக்குழந்தைகள் என்னைச் சூழ நிற்கிறார்கள்.


இளமையாய் என் அன்னை எனக்குத்தந்த ஊன் உருகி இப்போது கிழமாகி நிற்கிறேன் என்ற உண்மையைப் புரிகையில் உள்ளொளியாய் என் உயிரில் கலந்துநிற்கும் இறைவன் மௌ்ளச் சிரிக்கிறான்.


..ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி

உலப்பிலா ஆனந்தமாய

தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த

செல்வமே சிவபெருமானே!

யானுனைத் தொடந்து சிக்கெனப் பிடித்தேன்

எங்கெழுந்து அருளுவதினியே!"


(பிரசுரம்: சிவத்தமிழ்-ஜெர்மனி)

No comments:

Total Pageviews