Thursday, February 16, 2012

ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்














-இந்துமகேஷ்












"நலமாக வளமாக பேரோடும் புகழோடும் பல்லாண்டு வாழ்கவென மனதார வாழ்த்துகிறேன்! "

-அன்புக்குரியவர்களிடமிருந்து அவ்வப்போது பகிர்ந்துகொள்ளப்படும் வாழ்த்துச் செய்திகள்!


நம்மை வாழ்த்துவதில் அவர்களும் அவர்களை வாழ்த்துவதில் நாமும் மகிழ்கிறோம்.


“மனதார வாழ்த்துகிறார்!” என்கிறோம். வெறும் வார்த்தைகளாக மட்டும் இல்லாமல் உண்மையாகவே ஒருவரது உள்ளத்திலிருந்து வெளிப்படும் வாழ்த்துக்கள் வல்லமை நிறைந்தவை.

நமது வாழ்த்துக்கள் எவரைச் சென்றடைகிறதோ அவர் மகிழ்வுறும்போது நாமும் மகிழ்கிறோம். நமது அன்பு பலப்படுகிறது. நமது வாழ்வில் அக்கறைசெலுத்தவும் ஒருவர் இருக்கிறார் என்கிற தெம்புடன் வாழ்வைத் தொடர அது வழிவகுக்கிறது.


இதற்கு எதிர்மாறாக வாழ்த்துகின்ற வாய்கள் தூற்ற ஆரம்பித்தால் என்னாகும்? வாழ்க்கையின் மீதான பற்றுதலைத் தொலைத்துவிட்டு மரணத்தை நோக்கி ஓடிவிடத் தூண்டும் அது.


ஒருகாலத்தில் "வாழ்க! வாழ்க!!" என்று வாழ்த்துப் பெற்றவர்கள் பலரும் பின்னொரு நாளில் "ஒழிக!!!" என்ற தூற்றுதலுக்கு இலக்காகி உயிரிழந்துபோன நிகழ்வுகளையும் இந்த உலகம் சந்திக்கத்தான் செய்கிறது.

நல்லது எது கெட்டது எது என்பதைத் தெளிந்து தெரிந்து வாழ்கின்ற ஒருவன் தன் மனம்போனபோக்கில் வாழ்க்கையைத் திசை திருப்பிக் கொள்ளும் போதுதான் வாழ்க என்பது ஒழிக என்பதாக மாற்றம்பெறுகிறது.


ஒருவர் வாழ்த்தப் பெறுவதென்பதும் தூற்றப்படுவதென்பதும் அவரவரது செய்கைகளைப் பொறுத்தே அமையும்.


நமது செயல்களும் அதன் விளைவான நன்மை தீமைகளும் இடத்துக்கும் காலத்துக்குமாக மாறிவிடுவதுமுண்டு


உலகத்தின் பொதுநீதியாக நல்லது கெட்டது என்பதை இப்படிச் சொல்லலாம்:

“நீ செய்யும் ஒரு காரியத்தினால் பிறவுயிர் எதற்கும் தீங்கு விளையாதிருக்குமாயின் அது நல்லது. அந்தக் காரியத்தினால் பிற உயிர் துன்பப்பட நேருமாயின் அது கெட்டது!”


"நாம் துன்பம் செய்யாமல் விட்டுவிடுவதால்மட்டும் பிறவுயிர்கள் துன்பமின்றி வாழ்ந்துவிடுமா? ஏதோ ஒரு வகையில் அவை துன்பம் அனுபவிக்கத்தானே செய்கின்றன? ஏன் நாம்கூட துன்பத்துக்கு இலக்காகிறவர்கள்தானே! துன்பம் இல்லாமல் வாழ்க்கை ஏது? இன்பமாகத் தெரிவதெல்லாம் துன்பத்தின் மறுபகுதிதானே!"

-இவ்வாறெல்லாம் நமது மனம் நம்மைக் கேட்பதுண்டு.

இயற்கை நமக்குத் துன்பத்தைத் தருமாயின் அதிலிருந்து மீண்டுவர நாம் வழிகளைக் கண்டிருக்கிறோம் அல்லவா?

மழையிலிருந்து காத்துக்கொள்ள குடையும், வெயிலிலிருந்து காத்துக்கொள்ள செருப்பும் நம்மால் கண்டயறிப்பட்டிருக்கிறதல்லவா? இயற்கை தரும் துன்பங்களிருந்து தப்பித்துக்கொள்ள முடிந்த எங்களால் மற்றவர்க்குத் துன்பம் தராமல் வாழ்தல்மட்டும் இயலாமற் போகுமா?


ஆனால், ஆசை வழிப்பட்ட மனம் தனது மகிழ்ச்சியைமட்டுமே முன்னிலைப் படுத்துகிறது. தனது சுகத்துக்காக எதையும் செய்யலாம். மற்றவர்களைப் பற்றி அக்கறை கொள்ள வேண்டியதில்லை என்று கங்கணம் கட்டிக் காரியமாற்றுகிறது.


இந்த வாழ்க்கை என்பது நிரந்தரமற்றது. வாழ்கின்ற காலமோ மிகவும் சொற்பம். இதற்குள் அனுபவிக்க வேண்டிய இன்பங்களையெல்லாம அனுபவித்து முடித்துவிடவேண்டியதுதான் என்று அது துடிக்கிறது.


நாம் எப்படி வாழ்ந்தாலும் எல்லோர் முடிவும் ஒன்றுதான். நல்லவனாக வாழ்வதால்மட்டும் நான் மரணத்திலிருந்து தப்பிக்கொள்ள முடியுமா என்று தனது தீமைகளுக்குக் காரணம் கற்பிக்கிறது.

வாழ்க்கை நிரந்தரமற்றது என்ற எண்ணம் பெரும்பாலானவர்களின் மனத்தை ஆக்கிரமித்திருப்பதால்தான் வன்முறைகள் பரவிக்கிடக்கின்றன.
உயிர் நிரந்தரமானது என்ற உண்மை புரிந்த சித்தாந்திகள் உண்மைக்குள் உண்மையாய் ஒளிந்திருக்கும் பரம்பொருளைத் தெரிந்தார்கள். தாம் தெரிந்ததை - தெளிந்ததை மற்றவர்க்கும் சொல்லி வாழ்க்கை நெறியோடு இறைவனைக் கண்டறியும் வழியையும் போதித்தார்கள்.
நம்மைப் படைத்த பரம்பொருளே நம்மைக் காக்கவும் செய்கிறான்.

ஒருநாள் இந்த ஊனுடலை அழிக்கும் அவன் நம் உயிர்களின்மீது தன் அருளைப் பொழிகிறான்.


சிற்றின்ப மாயைகளில் சிக்கித் தவிக்கும் நாம் இந்த உடலை நீத்தாலன்றி அவனை அடைய முடியாது. அவனது அருளை நாம் பருகவேண்டுமாயின் இந்த உடலெனும் சிறையிலிருந்து நாம் விடுபட்டாகவேண்டும் என்பதே இயற்கையின் விதி.


கருணையே உருவான இறைவன் நம்மை உருவாக்கிக் காக்கிறான் எனில் நம்மை அழித்துவிட அவன் விரும்புவானா? ஆனால் அவ்வாறு அவன் விரும்புகிறான் எனில் இந்த உடலின் மறைவுக்குப்பின்னால் அவனது கருணையை நம்மீது பொழிய அவன் காத்திருக்கிறான் என்றே கொள்ளவேண்டியிருக்கிறது.


ஆக்குவதும் காப்பதும் மட்டுமே அவன் கருணையல்ல, அழிப்பதும் அருள் தருவதும்கூட அவன் கருணையினால்தான்.

ஆக்கம் அளவிறுதி இல்லாய்! அனைத்துலகும்

ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்..

என்று மாணிக்கவாசகன்போல் இறைவன் திருவடி நிழலை நாடுதலே நமது வாழ்வின் நோக்காக அமையட்டும்.





(பிரசுரம்: சிவத்தமிழ் 2012)

No comments:

Total Pageviews