Tuesday, April 11, 2006

எத்தனை கடவுளர்..?

"இவர்களுக்கு வேறு வேலையே கிடையாது.ஆயிரத்தெட்டுத் தெய்வங்கள்... ஆயிரத்தெட்டுக் கோயில்கள்... ஆளுக்கொரு கடவுளைப் பிடித்துக்கொண்டு அவனவன் நான் பெரிது நீ பெரிது என்று அடித்துக்கொள்கிறான். இதைவிட கடவுளே இல்லை என்பவன் எவ்வளவோ உயர்ந்தவன் இல்லையா?"
-இப்படிப் பலரும் கேட்கிறார்கள்.

கடவுளின் பெயரால் அடிபடுவதைவிட கடவுளே இல்லை என்பவன் மேல் என்று தோன்றுவதில் ஒரு நாத்திகவாதம் இருப்பதுபோலத் தோன்றும். ஆனால் உண்மையில் கடவுளே இல்லை என்பவனும் ஆத்திகனே என்பது பலருக்கும் புரிவதில்லை.
உண்டு என்பவனும் இல்லை என்பவனும் ஒன்றையே பற்றி நிற்கிறார்கள். இல்லாத ஒரு பொருளைப்பற்றி எவனும் விவாதிக்க வேண்டியதில்லை. ஆனால் இன்றும் உலகில் இந்த விவாதம் தொடர்கிறது. ஆகவே கடவுள் இருப்பதும் உண்மை என்றாகிறது.

நீயும் நானும் உள்ளவரை கடவுள்கள் இருக்கிறார்கள்.
" கடவுள்கள் என்று ஏன் பன்மையில் சொல்கிறாய்?" என்று என்னை நீ கேட்பாய். நீயும் நானும் ஒரே இயல்பின் வெவ்வேறு வடிவங்கள் என்பதை நீ உணராதவரையில் நீயும் நானும் வேறுதான்.
ஒரு சிறு தீப்பொறி என்பது நெருப்பின் ஒரு வடிவம். அது யாருக்கும் புலனாகாமல் எரிந்துகொண்டிருக்கலாம். ஆனால் அதுவே ஒரு காட்டை எரிக்கத் தொடங்கிவிட்டால் அதன் தன்மை நம்மை அச்சத்திற்குள்ளாக்குகிறது. அதை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எத்தனை பாடுபடுகிறோம்.
எப்படித் தீ பரவிற்று... அது எங்கிருந்து தொடங்கிற்று என்பதெல்லாம் பிறகுதான் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படுகிறது. முதல்வேலை பரவும் தீயைக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதுதான்.

கடவுள் தன்மை என்பது சிறுபொறியாய் நமது உடற்கூட்டுக்குள் எவனுக்கும் புலனாகாமல் புதைந்துகிடக்கிறது.நீறு பூத்த நெருப்பு என்பதுபோல. என்னுள்ளும் அது உண்டு. உன்னுள்ளும் அது உண்டு. ஆனால் மனக்காட்டுக்குள் அது பற்றிக்கொள்ளும்போது இந்த மனக்காட்டுக்குள் நெருக்கமாய் வளர்ந்திருக்கிற காம குரோதங்களை எரிக்கத் தொடங்கும்போது அந்தத் தீயை அணைத்துவிட நாம் பிரயத்தனப்படுகிறோம்-காம குரோதங்கள் இல்லாமல் நம்மால் வாழமுடியாது என்பதுபோல் ஒரு மாயையில் நாம் மயங்கிக் கிடப்பதால்!

வாழ்க்கை என்பதன் அர்த்தம் அனுபவிப்பது என்பதாகத்தான் நமக்குக் கற்பிக்கப்பட்டு வந்திருக்கிறது.அவன் அப்படி வாழ்கிறான் இவன் இப்படி வாழ்கிறான் என்று நமக்கு உதாரணம் காட்டப்பட்டவர்களெல்லாம் வாழ்க்கையில் முழுமை பெற்றவர்களா என்றால் இல்லை.உலகவாழ்வில் அவர்கள் ஒரு துறையில் மட்டும் வெற்றிபெற்றவர்களாக இருக்கிறார்கள். அவ்வளவுதான். ஆனால் அதுவே ஒரு முழுமையான வாழ்க்கை அல்ல.அவர்களும் பிறிதொரு பொழுதில் மன அமைதிக்காக எப்படியெப்படியெல்லாமோ அலைந்து மாய்கிறார்கள்.திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை என்று கடவுளின் காலடியில் வீழ்கிறார்கள்.
இந்தக் கடவுள் எங்கேயிருந்து வருகின்றதென்றால் அவர்களுக்குள்ளிருந்துதான்.
அவர்களுக்குள்ளிருக்கும் கடவுளை அவர்கள் அடையாளம் கண்டுகொள்ளும்போது அது ஒரு வடிவம் பெறுகிறது.

ஒவ்வொருவனும் கடவுளின் வடிவம் எனும்போது கடவுளுக்குப் பல்வேறு வடிவங்கள் இருப்பதில் தவறென்ன?
அல்லாவே என்பவனும் ஏசுவே என்பவனும் அம்மாளே என்பவனும் சிவனே என்பவனும் கண்ணா என்பவனும் ராமா என்பவனும் முருகா என்பவனும் இப்படி ஆளாளுக்கு ஒரு நாமத்தைச் சொல்லும்போதும் அவன் தன்னுள்ளிருப்பதையே அடையாளம் கண்டு அழைக்கிறான்.மனிதத் தன்மையிலிருந்து தெய்வத் தன்மைக்குத் தன்னைத்தானே மாற்றிக்கொள்கிறான். தெய்வீகத் தன்மை அவனது அன்பைத் தெய்வீகக் காதலாக மாற்றுகிறது.

உன்னை நானும் என்னை நீயும் காதலிக்க ஆரம்பிக்கும்போது உனது வடிவம் என்னை ஆதிக்கம் செலுத்துகிறது. எனது வடிவம் உன்னை ஆட்கொள்கிறது. நாங்கள் காதலில் கரைந்தபிறகு நீ நானாகவும் நான் நீயாகவும் மாற்றம் பெறுகிறோம்.இப்போது எனக்குள்ளிருந்த என்னை நீயாக நான் காண்கிறேன்.உனக்குள்ளிருந்த நீ என்னையே நீயாக உணர்கிறாய்.இப்போது என்னுள் நான் இல்லை. உன்னுள் நீ இல்லை.நமது வடிவங்களுக்கு என்னாயிற்று?

கடவுளின் வடிவமும் இப்படித்தான் காதலில் ஒருநாள் அது கரைந்துபோகும். நீ கடவுளிலும் கடவுள் உன்னிலும் கரைந்தபிறகு கடவுளுக்கு ஏதுவடிவம்?
இது புரியாதவரையில் கடவுளுக்கு ஏன் இத்தனை வடிவங்கள் என்று அடிக்கடி எவனாவது கேட்டுக்கொண்டேயிருப்பான். அவன் கடவுளைக் காதலிக்கும்வரை இந்தக் கேள்வி தவிர்க்க முடியாதது.இந்தக் கேள்வியை ஒருவன் ஒருவன் கேட்க ஆரம்பித்து அவன் தேட ஆரம்பித்தால் கடவுளின் காதல் அவனுள் கசிய ஆரம்பித்துவி்ட்டது என்பதுதான் அர்த்தம்.
காதலிப்போமா?

(இந்துமகேஷ் எழுதிய "காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி..."கட்டுரைத் தொடரிலிருந்து!
பிரசுரம்: வெற்றிமணி புரட்டாதி 2002)

No comments:

Total Pageviews