Tuesday, April 18, 2006

ஓம் என்றால் ஓம்தான்

-இந்துமகேஷ்

"ஓம் எண்டு சொல்லிப்போட்டன். நான் சொன்னால் சொன்னதுதான்.ஒருக்காலும் வாக்கு மாறமாட்டன்"
ஓம்.. இப்படித்தான் பெரும்பாலான மனிதர்கள்.
கொடுத்த வாக்கைக் காப்பாற்றியாகவேண்டுமே.
என்ன பாடுபட்டாலும் அதை நிறைவேற்றியாகவேண்டும்.
ஏனெனில் ஓம் என்பது சாதாரண வார்த்தையல்ல.
உயரிய வார்த்தை.உறுதியான வார்த்தை.

"எல்லாத்துக்கும் ஓம்போடுறதில சிலோன்காரங்கள மிஞ்சுறதுக்கு ஆளே கெடையாது!" என்று தமிழகத் தமிழர்கள் வேடிக்கையாகச் சொல்வதுண்டு நம்மைப்பற்றி.
ஓம்காரவடிவான நிலம் ஈழம்.
மாம்பழவடிவான எங்கள் தேசம் இந்தியாவின் தென்கரையில் இருந்து பார்ப்பவர்களுக்கு ஓங்காரமாகத்தெரிவதில் வியப்பென்ன இருக்கிறது?
ஓம் உலகம் முழுதும் பரவியிருந்தாலும், ஈழத்தமிழர்கள் வாழ்வில் அவர்களது நாளாந்த வாழ்வோடு நிறைந்து கலந்துவிட்டது ஓம்.

ஒருமையில் கேள்விக்குறியாய் நிற்கும் தமிழன் வாழ்வு பன்மையில் ஓங்காரமாய் மாறிவிட்டிருப்பதைப் புரிந்துகொண்டவர்கள் நம்மில் எத்தனைபேர்?!
ஒன்றுபட்ட வாழ்வில் அது முக்காலத்துக்கும் நம்மோடு கூடவே வருகிறது. தனிமையில் ஒருமையில் என்னைப் பற்றியே சொல்லும்போது ஏன் என்ற கேள்வியோடு நிற்கிறேன்.
வாழ்ந்தேன்.. வாழ்கிறேன்.. வாழ்வேன்..
கடந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் எல்லாவற்றியும் ஏன்தான்.
வாழ்ந்தோம் வாழ்கிறோம் வாழ்வோம் என்று எல்லோரும் ஒன்றுபட்டபின்னால் வருகின்ற வார்த்தைகளில் ஓம்தான் ஓங்காரம்தான்.
தெரிந்தோ தெரியாமலோ ஓம் நம்மோடு இணைந்துவிட்டபின்னால் அதுபற்றித்தெரிந்துகொள்ளாமல் இருக்கலாமா?
இந்த உலகத்தின் முதல் ஒலியே ஓங்காரம்தான் என்கின்றனர் ஆன்றோர்.
அகரம் உகரம் மகரம் இணைந்த ஒலிதான் ஓம்.
முக்காலமுமே இந்த ஓம்காரத்தில் அடங்குகிறது.
அ என்பது படைத்தல், உ என்பது காத்தல், ம என்பது அழித்தல் என்பதாகக்கொண்டு முத்தொழில் செய்கின்ற மூலசக்தியே ஓங்காரமான பிரணவம் என்கிறார்கள்.
ஓங்கார வடிவானவன் விநாயகன். அவனது யானைமுகம் பிரணவமாகிய ஓங்காரத்தைக குறிக்கிறது.
முன்பெல்லாம் எழுதும்போது உ என்று பிள்ளையார் சுழிபோட்டு எழுதுவோம். இது ஓங்காரத்தைக் குறிப்பதாகச் சொல்லப்பட்டது.
(பேனை எழுதுதா எண்டு பார்க்கத்தான் உ போடுறநாங்கள் என்று வேடிக்கையாகச் சொல்லி அந்த வழக்கத்தை நிறுத்திக்கொண்டவர்கள் பலர். இப்படி அர்த்தம் தெரியாமல் பல விடயங்கள் அழிந்துபோய்விட்டன என்பது வேதனைதரும் விடயம்)

நாளும்பொழுதும் நாங்கள் ஓம்போட்டுக்கொண்டிருப்பதால் பிள்ளையார்சுழி போடுவதை மறந்துவிட்டோம்.
ஆனாலும கணநாதன் எங்களோடுதான் இருக்கிறான்.

கணனயின் முன்னால் உட்கார்ந்து எலியின்மீது விரல்களை வைத்து உலகை வலம்வருகிறோமே இணையத்தளத்தில்.
உட்கார்ந்த இடத்திலிருந்தே உலகத்தைச் சுற்றிவந்த பெருமான் விநாயகன்.
கதைகளில் படித்தோம் நம்பமுடியவில்லை. இப்போது பூட்டிய அறைக்குள்ளிருந்து உலகத்தைச் சுற்றிவருகிறோம் கணனியின் பெயரால். இதை நம்பமுடிகிறது.

"எந்தவிதமாக நீ விரும்புகிறாயோ அந்த விதமாகத் தன்னை வெளிப்படுத்துவான் இறைவன்!" என்ற வார்த்தைகள் பொய்யல்ல.
"எதுவாக நீ இருக்கவேண்டுமென்று நீ விரும்புகிறாயே அதுவாகவே ஆகிறாய்!" என்ற ஞானியர் வாக்கும் பொய்யல்ல.
உண்மைகள் எப்போதும் ஒப்புக்கொள்ளப்படவேண்டியவை.
நீ ஒப்புக்கொண்டாலும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் உண்மைகள் நிரந்தரமானவை.
நிரந்தரமான ஒன்றாக நிலைத்திருப்பது ஓம்.
ஓம் என்று தனியாக உட்கார்ந்து தியானம் செய்ய முடியாமல் போகலாம். ஆனால் ஓம் என்று மற்றவர்களது விருப்பத்துக்கு மதிப்பளியுங்கள்.
செய்வோம் என்று சிரத்தையோடு நில்லுங்கள்.
மாட்டோம் என்று மறுதலித்தாலும் ஓம் என்கிறோமே என்கிறீர்களா?
அது உங்களால் இயலும் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.
ஆனால் நீங்கள் அதை விரும்பவில்லை என்பதாகத்தான் அது அர்த்தப்படும்.
உலகத்துக்கு நன்மைபயக்கிற எந்த விடயங்களுக்கும் ஒத்துழைக்கமாட்டோம் என்று மறுதலிக்கின்ற மனிதர்கள் தனித்துப் போய்விடுகிறார்கள்.
தனியாகப் போனபின் ஓங்காரமும் அவர்களைவி்ட்டுப் போய்விடுகிறது. வந்தேன், (உலகத்துக்கு வந்து ஏன்?) இருந்தேன், (உலகத்தில் இருந்து ஏன்?)
வாழ்ந்தேன், (உலகத்தில் வாழ்ந்து ஏன்?) என்று அவர்கள் வாழ்வு ஏன் என்றே முடிந்துபோகிறது.
ஆனால் ஒன்றுபட்ட மனிதர்களைப் பாருங்கள்.
வந்தோம் இருந்தோம் வாழ்ந்தோம் என்று ஓங்காரத்தோடு கலந்து உலகத்திற்காக வாழ்ந்து ஓங்காரத்திலேயே கரைந்துபோகிறார்கள்.
ஓம்காரம் நிலையானது என்பதால் ஓம்காரத்தில் கலந்த அவர்களும் ஓம்காரமாகி உலகத்தில் நிலைத்துவிடுகிறார்கள்.
"ஓம்.. நீ சொல்வது சரிதான்!" என்கிறீர்களா?
நீங்கள் ஓம் என்றால் நானும் ஓம்தான்!


(பிரசுரம்: சிவத்தமிழ்-காலாண்டிதழ்-2004)

No comments:

Total Pageviews